வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு சிறந்த வீட்டுவசதி வழங்க மாநில அரசு உத்தேசிக்கும் – ஜெக்டிப்

 

ஜார்ச்டவுன் – கோவிட்-19 நோய்த்தொற்று அதிகமாக பரவக்கூடிய  பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் அமலாக்கத்தை மேலும் மேம்படுத்த  இரு  ஊராட்சி மன்ற அதிகாரிகளுக்கும் (பி.பி.தி) அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வீட்டுவசதி, உள்ளாட்சி மற்றும் நகர்ப்புற & கிராமப்புற மேம்பாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ, பினாங்கில் கோவிட்-19 நோய்த் தொற்றுக்கான புதிய வழக்குகள்
குறிப்பாக உற்பத்தித் துறையில்
அதிகரித்துள்ளதால், இந்த நடவடிக்கை அமலாக்கம் அவசியம் என்று கூறினார்.

“தற்போதைய சூழலில், கோவிட்-19 நோய்த் தொற்றின் புதிய வழக்குகள் குறிப்பாக உற்பத்தித் துறையில் அதிகரித்து வருகின்றன.இதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

“எனவே,  எந்த ஒரு தொழிற்சாலையிலும் கோவிட்-19  புதிய வழக்குகள் அதிகமாக அதிகரிக்கப்படுவதைக்  கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட தொழிற்சாலையை மூட உத்தரவிடலாம்.

“பினாங்கு மக்களின் நலனுக்காக இந்த விவகாரத்தில் மாநில அரசு சமரசம் கொள்ளாது,” என்று  கொம்தார்,  எம்.பி.பி.பி அலுவலகத்திற்கு அருகிலுள்ள செய்தியாளர் கூட்டத்தில் ஜெக்டிப் இவ்வாறு கூறினார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் சுற்றுச்சூழல் மற்றும் சமூகநல ஆட்சிக்குழு உறுப்பினர் பீ புன் போ மற்றும்  எம்.பி.பி.பி செயலாளர் டத்தோ அட்னான் ரோசாலி கலந்து கொண்டனர்.

மேலும் கருத்து தெரிவித்த ஜெக்டிப், மாநிலத்தில் புதிய கோவிட்-19 வழக்குகள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணியாக விளங்கும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு சிறந்த வீட்டுவசதி வழங்க உதவும் பல பிரதான திட்டங்களை மாநில அரசு உத்தேசிப்பதாகக் கூறினார்.

“மக்கள் வீடமைப்புத் திட்ட பகுதியை விடுத்து  வெளிநாட்டு  தொழிலாளர்களுக்கு தங்கும் இடங்கள் அல்லது வணிக வளாகங்களை கட்ட  தொழிற்சாலைகள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு முன்மொழிந்த முதல் மாநிலம் பினாங்கு ஆகும்.

” இந்த திட்டத்தை செயல்படுத்த அனைத்து தொழிற்சாலைகள் முன்வருமாறு ஊக்குவிக்கப்படுகின்றன. இந்த செயல்முறையை செயல்படுத்த அவர்களுக்கு உதவ மாநில அரசும் ஊராட்சி மன்றங்களும் தயாராக உள்ளனர்,” என்று அவர் மேலும் கூறினார்.

“இதற்கிடையில், சம்பந்தப்பட்ட தரப்பினரால் நடத்தப்பட்ட பகுப்பாய்வின் அடிப்படையில்,
வெளிநாட்டுத் தொழிலாளர்கள் நெரிசலான சூழலில் வசிப்பதால் கோவிட்-19 புதிய வழக்குகள்  தங்குமிடத்தில் அதிகமாக இருப்பதைக் கண்டறிய முடிகிறது, என்று பீ புன் போ கூறினார்.

“ஆகையால், வெளிநாட்டு தொழிலாளர்களின் தங்குமிடங்களில்  மிகவும் நெரிசலாக இல்லாமல் இருப்பதை  உறுதிப்படுத்த நிறுவனங்கள் அல்லது தொழிற்சாலைகளை ஒத்துழைப்பு நல்க வேண்டும். இதை பின்பற்றுவதை உறுதி செய்ய ஊராட்சி மன்றங்கள் அமலாக்கம் பணியில் ஈடுபட வேண்டும்.  ஏனெனில்,இச்சூழல்  அவர்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும்.

“மாநிலத்தில் உள்ள வணிகக் கட்டிடங்கள் தொழிலாளர் தங்கும் விடுதிகளாக மாற்றுவதற்கு மதிப்பாய்வு செய்து பரிசீலிக்க ஒப்புக்கொண்ட இரு ஊராட்சி மன்றங்களுக்கும் நன்றிக் கூற விரும்புகிறேன்.

“நிறுவனம் அல்லது தொழிற்சாலை நடத்துனர்கள் தங்கள் ஊழியர்களின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை வழங்கி மாநில அரசுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும்,” என்றார்.

இதற்கிடையில், சம்பந்தப்பட்ட தரப்பினர் தங்கள் ஊழியர்களுக்கு தங்குமிடம் வழங்குவதற்கான விண்ணப்பம் சமர்ப்பித்தால் அத்திட்டத்தை செயல்படுத்த    எம்.பி.பி.பி தயாராக இருப்பதாக அட்னான் கூறினார்.