வெள்ள நிவாரணம் மற்றும் வடிகால் அமைப்பு மேம்பாட்டுத் திட்டம் நிறைவடைந்தது

ஜாலான் ஹட்டோன் மற்றும் ஜாலான் திரான்ஸ்வர் வெள்ள நிவாரணம் மற்றும் வடிகால் அமைப்பு திட்டத்தை துவக்கி வைத்தார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் மற்றும் அரசியல் தலைவர்கள்

பினாங்கு மாநகர் கழகத்தின் முயற்சியில் ஜாலான் ஹட்டோன் மற்றும் ஜாலான் திரான்ஸ்வர் சாலைகளில் வெள்ள நிவாரணம் மற்றும் வடிகால் அமைப்பு மேம்பாட்டுத் திட்டம் நிறைவடைந்து அதனை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தார் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் .

நிகழ்வில் சிறப்புரை வழங்கிய மாநில முதல்வர் இம்மேம்பாட்டுத் திட்டத்திற்காக ரிம6,053,050.00 கோடி செலவிடப்பட்டதைக் குறிப்பிட்டார். வெள்ள நிவாரணம் மற்றும் வடிகால் அமைப்பு மேம்பாட்டுத் திட்டத்திற்காக திறந்த குத்தகை முறையில் தனியார் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டு கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கதாகும். இத்திட்டத்தில் 4.8மீட்டர் அளவு வரை பெரிய சாக்கடைகள் நிறுவுதல்,
சாலைகள் பராமரிப்பு, புதிய பாதசாரி நடைப்பாதைகள் நிர்மாணிப்பு ஆகியவை அடங்கும் என செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார் மாநில முதல்வர்.

2016-ஆம் ஆண்டு பினாங்கு மாநில தீவு மற்றும் செபராங் பிறை முழுவதும் வெள்ள நிவாரணப் பிரச்சனைக்கு தீர்வுக்காணும் வகையில் ரிம220 கோடியை மாநில அரசு ஒதுக்கியுள்ளது பாராட்டக்குறியதாகும். இத்திட்டங்களின் மூலம் வெள்ள நிவாரணப் பிரச்சனைக்கு தீர்வுக்காண முடியும் என நம்பிக்கை தெரிவித்தார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங்.

ஜாலான் ஹட்டோன் மற்றும் ஜாலான் திரான்ஸ்வர் வெள்ள நிவாரணம் மற்றும் வடிகால் அமைப்பு

2014-ஆம் ஆண்டு பினாங்கு மாநகர் கழகம் ரிம3,230,295,.95 மற்றும் 2015-ஆம் ஆண்டு ரிம5,293,491.08 நிதி ஒதுக்கீட்டின் வழி பீகேட் நெடுஞ்சாலை, ஜாலான் லோகான், ஜாலான் கன்தொன்மேன்ட், ஜாலான் ரெசிடிசி, ஜாலான் மேக்கலிஸ்தர், மற்றும் ஜாலான் காட் லேபோ பாசார் ஆகிய சாலைகளின் வடிகாலமைப்பை மேம்படுத்தியது குறிப்பிடத்தக்கதாகும். மேலும், இவ்வாண்டு மாநில அரசு இரண்டு ஊராட்சி மன்றங்களின் மூலம் ரிம59 கோடியை வெள்ள நிவாரண ஆய்வுகளுக்கும் திட்டங்களுக்கும் அரசு இயக்கங்களுக்கு வழங்கியது. மேலும், இந்நிகழ்வில் பினாங்கு மாநகர் மன்ற தலைவர் டத்தோ பண்டார் பத்தாயா இஸ்மாயில், மாநில சட்டமன்ற உறுப்பினர்கள், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.