ஶ்ரீ அருளொளி திருமுருகன் ஆலய 45-ஆம் ஆண்டு திருவிழா

மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் இராமகிருஷ்ணா ஆசிரம தலைவர் திரு இராமசாமியிடம்  காசோலை வழங்கினார்.
மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் இராமகிருஷ்ணா ஆசிரம தலைவர் திரு இராமசாமியிடம் காசோலை வழங்கினார்.

பினாங்கு கொடி மலையில் அமைந்துள்ள ஶ்ரீ அருளொளி திருமுருகன் ஆலயத்தில் 45-ஆம் ஆண்டு ஆடி கார்த்திகை திருவிழா சிறப்பாக நடைபெற்றது. சுற்றுலாத் தளத்திற்கு புகழ்ப்பெற்று விளங்கும் கொடி மலையில் வீற்றுள்ள இந்த ஆலய ஆண்டு விழாவிற்குப் பக்தர்கள் மட்டுமின்றி சுற்றுப்பயணிகளும் புற்றீசல் போல் திரண்டனர். ஒவ்வொரு ஆண்டும் ஆடிக் கார்த்திகை உற்சவ தினத்தன்று ஆண்டு விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
ஶ்ரீ அருளொளி திருமுருகன் ஆலய திருவிழாவிற்குச் சிறப்பு பிரமுகராக மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் வருகையளித்தார். இந்த ஆலயத்தில் அமைதி மற்றும் சுபிட்சம் நிறைந்திருப்பதற்கு காரணம் “தீயவர்கள் வீழ்ந்து நல்லவர்கள் வெற்றிப்பெறுவதே” என்றார் மாநில முதல்வர். மேலும், நல்லவர்கள் ஒன்றிணைந்து ஆட்சிப்புரிyuம் போது உங்கள் பிள்ளைகள் புறக்கணிக்கப்படமாட்டார்கள். ஆனால் கண்ணியத்துடன் வாழ்வார்கள் என எடுத்துரைத்தார். இந்த 8 ஆண்டு காலக்கட்டத்தில் பினாங்கு மாநிலம் மற்றும் கொடி மலை துரித வளர்ச்சியடைந்துள்ளது. எனவே, பொது மக்கள் சிறந்த ஆட்சியைத் தேர்வுச்செய்ய வேண்டும் என்றார்.

ஆலய ஆண்டு விழாவில் கலந்து கொண்ட மாநில முதல்வருக்குப் பொன்னாடை போற்றி மாலை அணிவித்து சிறப்புச் செய்யப்பட்டது. மாநில முதல்வர் இந்த ஆலய வளர்ச்சிக்கு ரிம5,000 உதவித்தொகை வழங்கினார். மேலும் , இராமகிருஷ்ணா ஆசிரம மேம்பாட்டுத் திட்டத்திற்கும் மாநில அரசு சார்பில் அதன் தலைவர் திரு இராமசாமியிடம் ரிம5,200-க்கான காசோலை வழங்கப்பட்டது.
ஆடிக்கார்த்திகை திருவிழா அன்று காலையில் பக்த கோடிகள் புடைசூழ மேளவாத்தியங்களுடன் பால் குடங்கள் ஏந்தி திருமுருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் தொடர்ந்து இடம்பெற்ற பூஜையிலும் அன்னதானத்திலும் கலந்து கொண்டனர்.}