ஸ்ரீ ஐயப்பன் சேவை சமாஜம் ஏற்பாட்டில் கல்வி பிராத்தனை பூஜை

ஸ்ரீ ஐயப்பன் சேவை சமாஜம் கடந்த 31-8-2013-ஆம் நாள் கல்வி பிராத்தனைப் பூஜையை விமரிசையாக நடத்தியது. இந்தப் பூஜை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய ஆயிரவைசியர் அரங்கில் இனிதே நடைபெற்றது. இந்த பூஜை காலை மணி 8.00 தொடங்கி மதியம் மணி 12.00க்கு முடிவுற்றது. யூ.பி.எஸ்.ஆர், பி.எம்.ஆர், எஸ்.பி.எம், எஸ்.தி.பி.எம் ஆகிய அரசு தேர்வுகளை எதிர்நோக்கும் இந்திய மாணவர்களுக்காக நடத்தப்படும் சிறப்புப் பூஜையாகும். இந்த பூஜையின் வாயிலாகக் கல்வி கேள்விகளில் இந்திய மாணவர்கள் குன்றின் மேலிட்ட விளக்கு போல பிரகாசிக்கும் பொருட்டு நடத்தப்படுவதாக ஐயப்பன் சேவை சமாஜத்தின் செயலாளர் திரு தமோதரன் தெரிவித்தார்.

இந்த சேவை சமாஜம் ஆன்மீகம் மட்டுமின்றி சமூகத்தினருக்கும் பல வழிகளில் சேவையாற்றுகிறது என்றால் மிகையாகாது. அவ்வகையில் இந்த பிராத்தனைப் பூஜையின் மூலம் இந்திய மாணவர்கள் கல்விக்கு அதிபதியான அன்னை சரஸ்வதியின் தெய்வீக அருளைப் பெற்று தேர்வை எதிர்நோக்குகின்றனர்.

கல்வி பிராத்தனை பூஜையில் கலந்து கொண்ட மாணவர்கள்.
கல்வி பிராத்தனை பூஜையில் கலந்து கொண்ட மாணவர்கள்.

 

இந்தக் கல்வி பிராத்தனைப் பூஜையன்று மாணவர்கள் அனைவருக்கும் இலவசமாகப் பால் வழங்கப்பட்டு அன்னை சரஸ்வதிக்கு அபிஷேகம்  செய்யப்பட்டது. தொடர்ந்து, மாணவர்கள் தேர்வைச் சிறந்த முறையில் எழுத வேண்டும் என்ற நோக்கத்தில் ஹோமம் நடைபெற்றது.

இந்தப் பூஜையில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாணவர்களுக்கு எழுதுகோல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. ஸ்ரீ ஐயப்பன் சேவை சமாஜத்தின் சார்பில் மாணவர்களுக்குக் காலை உணவு மற்றும் மதியம் அன்னதானம் வழங்கப்பட்டன.

மேலும் இந்தப் பூஜையில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களும் அன்னை சரஸ்வதியின் ஆசிர்வாதம் மற்றும் ஸ்ரீ ஐயப்பன் சேவை சமாஜத்தின் குருநாதர் திரு ஞானசேகரன் அவர்களின் ஆசியும் பெற்று அகம் மகிழ்ந்தனர்.

 

ஸ்ரீ ஐயப்பன் சேவை சமாஜத்தின் சமூக சேவைத் தொடர்ந்து நடைபெறும் எனத் தலைவர் திரு டவிந்திரன் கூறினார்.