15-வது முறையாக தமிழ்ப்பள்ளிகளுக்கு மானியம் – முதல்வர்

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசு 15-வது முறையாக இம்மாநிலத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கு வித்திடும் வகையில் இன்று மானியம் வழங்கியது.

இன்று 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு ரிம2 மில்லியன், 19 தமிழ் பாலர்பள்ளிகளுக்கு ரிம150,000, 3 பஞ்சாபி பள்ளிகளுக்கு ரிம90,000 மற்றும் தமிழ்ப்பள்ளிகளுக்கான சிறப்பு நிதியம் ஒதுக்கீடாக ரிம150,000 என மாநில அரசு வழங்கியுள்ளது. மாநில அரசு இவ்வாண்டு ரிம 2.39 மில்லியன் நிதி ஒதுக்கீடு வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

“வழங்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடு அதிகமாக இல்லாவிட்டாலும், மாநில அரசு சிறந்த உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளை வழங்குவதன் மூலம் நிலையான கற்பித்தல் மற்றும் கற்றல் சூழ்நிலை உருவாக்க முடியும் என நம்புகிறேன்.

“இன்று, பினாங்கு மாநிலத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகள், அடிப்படை வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகளில் நாட்டிலேயே சிறந்த தமிழ்ப் பள்ளிகளாக வெற்றிகரமாக செயல்பட்டு வருவதை எண்ணி நாம் பெருமைக் கொள்ளலாம்.

“கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ்ப் பள்ளிகளில் தொழில்நுட்ப (ICT) வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டத்தை ஆதரிப்பது உட்பட, மாநில அரசின் முயற்சியால் பல பள்ளிகளில் கணினிகள் மையங்கள், ‘LCD Projectors’, ‘visualizer’, ‘SWIPE’ dan ’21st Century Smart Boards’ போன்ற நவீன தகவல் தொழில்நுட்ப வசதிகள் மாணவர்களின் வளர்ச்சிக்காக வழங்கப்பட்டுள்ளன,” என கொம்தாரில் நடைபெற்ற தமிழ்ப்பள்ளிகளுக்கு மானியம் வழங்கும் நிகழ்ச்சியில் மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் பேசிய சாவ், பினாங்கில் உள்ள 29வது தமிழ்ப்பள்ளி நிறுவுவதற்காக, பட்டர்வொர்த், தாமான் பாகானில் நான்கு ஏக்கர் நிலத்தை பினாங்கு மாநில அரசு அங்கீகரித்துள்ளது. இப்பள்ளிக்காக ஒதுக்கப்பட்ட நிலம் வட செபராங் பிறை, தாமான் பாகான், லாட் 5083 மற்றும் 5084, பிரிவு 3, பண்டார் பட்டர்வொர்த்தில் அமைந்துள்ளது, என்றார்.

இந்த இறுதி செய்யப்பட்ட நில ஒப்புதலுடன் கெடா, கோலா கெட்டில் உள்ள பெட்னோக் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் உரிமத்தை தாமான் பாகான், பினாங்கிற்கு மாற்றுவதற்கான செயல்முறை உடனடியாகத் தொடங்கும் என்று சாவ் நம்பிக்கை தெரிவித்தார்.

இதனிடையே, நிகழ்ச்சியில் சிறப்புரை வழங்கிய இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி, தமிழ்ப்பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருவது குறித்து வன்மையாக சாடினார். இப்பிரச்சனை தொடர்பாக பள்ளி வாரிய நிர்வாகக் குழு, பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் விரைவில் கலந்துரையாடல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, என்றார்.

இதன்வழி, தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க பல ஆக்கப்பூர்வமானத் திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

“நம் நாட்டில் தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகிறது. மூடப்படும் நிலையில் இருக்கும் தமிழ்ப்பள்ளிகளின் உரிமங்களை பயன்படுத்தி அதிகமாக இந்தியர்கள் வாழும் இடங்களில் புதிய பள்ளிகளை நிறுவ வேண்டும்.

“தற்போது பினாங்கு மாநில அரசு 29-ஆவது தமிழ்ப்பள்ளியை நிறுவ பல சவால்களையும் சிக்கல்களையும் எதிர்நோக்கியிருந்தாலும் விரைவில் இத்திட்டம் இங்கு செயல்படுத்தப்படும்”, என பேராசிரியர் ப.இராமசாமி நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், இம்மாதிரியான மானியம் வழங்குதல் மாணவர்களுக்கு சிறந்த எதிர்காலத்திற்குப் பயனளிக்கும், அத்துடன் பினாங்கு மாநிலத்திற்கான நல்ல மனித வள முதலீட்டிற்கான முதல் படியாகவும் இருக்கும் என்பது பினாங்கு மாநில அரசின் உறுதிப்பாடாகும்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்ப்பள்ளி சிறப்புக்குழுத் தலைவர் டத்தோ அன்பழகன், மாநில சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமையாசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க பிரதிநிகள், பினாங்கு மாநில கல்வி இலாகா தமிழ்ப்பள்ளிகளுக்கான துணை அதிகாரி சந்திரவதனி சிவசுந்தரம், பினாங்கு கல்வி இலாகா பள்ளி மேலாண்மை துறையின் துணை இயக்குநர் அப்துல் சாயிட் உசேன் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.