2022-ஆம் ஆண்டில் குறைந்த கார்பன் & விவேக நகரமாக உருமாற்றம் காண எம்.பி.எஸ்.பி இலக்கு

 

புக்கிட் மெர்தாஜாம் – செபராங் பிறை மாநகர் கழகம் (எம்.பி.எஸ்.பி) 2022-ஆம் ஆண்டில் குறைந்த கார்பன் & விவேக நகரமாக மாறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. எனவே, எம்.பி.எஸ்.பி இன்னும் பத்தாண்டுகளுக்குள் அதாவது 2030-க்குள் கார்பன் அற்ற நகரமாக மாற வேண்டும் எனும் புதிய இலக்கை நிர்ணயித்துள்ளது.

இத்திட்டத்தை வழிநடத்தும் பொருட்டு, எம்.பி.எஸ்.பி மற்றும் சுல்தான் இட்ரிஸ் கல்வி பல்கலைக்கழகம் (யு.பி.எஸ்.ஐ) இணைந்து  இத்திட்டத்தை வடிவமைப்பதற்கான முன்முயற்சியை எடுத்துள்ளது. மேலும், தாசெக் குளுகோரின் பாடாங் செம்படாக்கில் கல்வி பசுமை மையத்தை உருவாக்கவுள்ளது.

“இப்பட்டறையில் மொத்தம் ஏழு  எம்.பி.எஸ்.பி ‘ஆரஞ்சு வீரர்கள்’ பங்கேற்றனர். ஹைட்ரோபோனிக் அடிப்படை உள்கட்டமைப்பு வடிவமைப்பு தொழில்நுட்பம் NFT (Nutrient Film
Technique) மற்றும் DFT (Deep Flow Technique) பிரிவு I ஆகியவற்றில் விடாமுயற்சியுடன் கற்று தேர்ந்துள்ளனர்,” என எம்.பி.எஸ்.பி வளாகத்தில் நடைபெற்ற உள்கட்டமைப்பு வடிவமைப்பு தொழில்நுட்ப பட்டறையில் பங்கேற்பு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் மேயர் டத்தோ ரோசாலி மாமுட் இவ்வாறு குறிப்பிட்டார்.

எம்.பி.எஸ்.பி-யின்  சுகாதாரம், அழகு, பசுமை மற்றும் சுற்றுச்சூழல் நல்வாழ்வு இலக்கை அடைய அதிக அர்ப்பணிப்பையும் உறுதியான ஆதரவையும் வழங்கிய  யு.பி.எஸ்.ஐ மற்றும் எம்.பி.எஸ்.பி ‘ஆரஞ்சு வீரர்களுக்கு’  மேயர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

எனவே, ‘செபராங் பிறை நெகிழ்திறன், உள்ளடக்கம், பசுமை மற்றும் ஈடுபாடு’ அடிப்படையில் எம்.பி.எஸ்.பி-யை குறைந்த கார்பன் நகரமாக உருமாற்ற அனைவரின் அர்ப்பணிப்பும் இம்முயற்சிகளில் வெளிப்படையாக காணமுடிகிறது.