2023 ஆண்டின் பினாங்கு இந்து அறப்பணி வாரிய ஆணையர்களாக 13 பேர்கள் நியமனம்

Admin

ஜார்ச்டவுன் – பினாங்கு இந்து அறப்பணி வாரிய ஆணையர்களாக இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி உட்பட 13 ஆணையாளர்களுக்கான நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டனர்.

இம்முறை மூன்று புதிய முகங்கள் ஆணையர்களாக நியமிக்கப்பட்டனர்.
13 ஆணையர்களில் பத்து பேர் மீண்டும் நியமிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்து அறப்பணி வாரிய ஆணையர்களின் நியமனம் ஜனவரி,1 முதல் டிசம்பர்,31 வரை என ஓர் ஆண்டுகாலம் அமலாக்கம் காணும்.

மூன்று புதிய முகங்களில் ஒருவரான டத்தோ செல்வகுமார் சண்முகம் செட்டி, பினாங்கு இந்து அறப்பணி வாரியத்துடன் (PHEB) இணைந்து சேவையாற்ற ஆவலுடன் காத்திருப்பதாகக் கூறினார்.

ஷான் பூர்ணம் மெட்டல் சென் பெர்ஹாட் இன் தலைமைச் செயல் அதிகாரியான டத்தோ செல்வகுமார், இந்த ஆண்டு (ஜனவரி 1 – டிசம்பர் 31) புதிய PHEB ஆணையராக நியமிக்கப்பட்டார். மற்ற இரண்டு புதிய முகங்கள் மலேசிய இந்து சங்கத்தின் தேசிய கௌரவப் பொருளாளர் முனியாண்டி மாணிக்கம் மற்றும் பினாங்கு குடிநுழைவுத் துறையின் துணை இயக்குநர் அரவிந்த் பூபாலன் ஆவர்.

ஒரு தொழிலதிபராக தனது அனுபவத்தைப் பயன்படுத்தி விஷயங்களை வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்ப்பதன் மூலம் PHEB-க்கு உதவ முடியும் என்று செல்வகுமார் கூறினார்.

வாரியத்தின் வழிகாட்டுதலின்படி நான் ஒரு PHEB ஆணையராக என்னால் முடிந்ததைச் செய்வேன்,” என்று அவர் கூறினார்.

அவருடைய குறிக்கோள் என்னவென்று கேட்டதற்கு, இந்திய மாணவர்களிடையே கல்வியை மேம்படுத்த வேண்டும் என்று பதிலளித்தார்.

“கல்வி மிகவும் முக்கியமானது. இந்திய மாணவர்களிடையே கல்வியை மேம்படுத்தவும், தேர்ச்சிப் பெறாத மாணவர்களுக்கு உதவுவதும், மாணவர்கள் பள்ளிப்படிப்பை இடையிலே நிறுத்தப்படாமல் இருக்க பல ஆயுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

“கல்வியில் சிறந்து விளங்கும் சமூகம் அடுத்த தலைமுறையை முன்னோக்கிக் கொண்டு செல்லும்,” என்று அவர் இன்று கொம்தாரில் தனது நியமனத்தை ஏற்றுக்கொண்ட பிறகு இவ்வாறு கூறினார்.

மலேசிய இந்து சங்க கெளரவச் செயலாளருமான திரு முனியாண்டி பினாங்கு மாநிலத்தில் இருக்கும் இந்து ஆலயங்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வுக் காண உத்தேசிப்பதாகக் கூறினார். மேலும், இம்மாநிலத்தில் இயங்கும் 28 தமிழ்ப்பள்ளிகளிலும் இந்து சமயம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த சமயம் வகுப்புகள் நடத்த அறப்பணி வாரியத்திடம் பரிந்துரைக்கவிருப்பதாகக் கூறினார்.

இந்த ஆண்டுத் தவணைக்கான இந்து அறப்பணி வாரிய ஆணையர்களாக பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி; ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். இராயர்; Jordan Lee & Jaafar (PG) Sdn Bhd நிர்வாக இயக்குநர் டத்தோஸ்ரீ குவேனராஜூ பச்சையப்பன்; வழக்கறிஞர் டத்தோ முரளிதரன் நவரத்தினம்; தாமான் பிராவுன் எம்.பி.கே.கே தலைவர் சாந்தா முத்து, அஸ்பென் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் அனிலராசு அமரநேசன்;
Jade Micron Pte Ltd (Singapore)
விற்பனை மற்றும் சேவை மேலாளர் காளியப்பன் இரங்கநாதன்;
மலேசிய இந்துமாமன்ற பினாங்கு அருள்நிலையத் தலைவர் தனபாலன் நந்தகுமார், மற்றும் கம்டார் சென்.பெர்ஹாட் (செயல்பாடுகள் மற்றும் மனித வளங்கள்) பொது மேலாளர் டத்தோ ஜுகல் கிஷோர் ஷிவ்லால் ஆவர்.