2023 வரவு செலவு திட்டத்தில் சமூகநலன் மற்றும் வீடமைப்புத் திட்டங்களுக்கு முன்னுரிமை

Admin

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசாங்கம் அடுத்த ஆண்டு பொது மக்கள் எதிர்கொள்ளவிருக்கும் பொருளாதார சவால்களுக்கு ஏற்ப 2023-ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் சமூகநலன் மற்றும் வீடமைப்புத் திட்ட மேம்பாட்டுக்கு முன்னுரிமை அளித்துள்ளது.

மாநில அரசு i-Sejahtera திட்டத்தின் மூலம் நிதி உதவிக்கான ஒதுக்கீட்டை கடந்த ஆண்டின் ரிம50 மில்லியனுடன் ஒப்பிடுகையில் வருகின்ற 2023ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டை ரிம53 மில்லியனாக உயர்த்த இணக்கம் கொண்டுள்ளதாக மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ் கூறினார்.

“i-Sejahtera என்பது பினாங்கு மக்களின் சமூகநலன் பராமரிக்கும் நிதியுதவித் திட்டமாகும்.

“மூத்த குடிமக்கள், ஊனமுற்றோர் (OKU), தனித்து வாழும் தாய்மார்கள், முழுநேர இல்லத்தரசிகள் போன்ற பிரிவுகளில் இந்த மாநில மக்களின் சேவைக்குப் பாராட்டு மற்றும் அங்கீகாரம் வழங்கும் வகையில் இந்நிதியுதவி வழங்கப்படுகிறது,” என்று 14வது சட்டமன்ற ஐந்தாவது தவணைக்கான சந்திப்புக் கூட்டத்தில் மாநில முதல்வர் 2023 ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்யும் போது இவ்வாறு கூறினார்.

கோன் இயோவின் கூற்றுப்படி, பினாங்கு மாநில அரசாங்கம் சமத்துவப் பொருளாதாரத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை ரிம8.2 மில்லியன் என மீண்டும் நிலைநிறுத்துகிறது.

“குறைந்த வருமானம் பெறுநர்கள் மற்றும் வசதிக் குறைந்தவர்களின் நல்வாழ்வுக்கு உத்தரவாதம் அளிப்பதற்காக இந்த திட்டம் அமலாக்கம் காண்கிறது. இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை மொத்தம் 1,305 பெருநர்கள் இத்திட்டத்தில் பயனடைந்துள்ளனர்,” என்று அவர் கூறினார்.

மேலும், மாநில அரசாங்கம் ரிம35.9 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் மூலம் இந்த மாநிலத்தில் உள்ள மக்களுக்கு வசதியான வாழ்க்கைச் சூழல் உருவாக்கவும் முக்கியத்துவம் அளிக்கிறது என்று கொன் இயோவ் வலியுறுத்தினார்.

இந்நிதி ஒதுக்கீட்டில், வசதிக் குறைந்த பொது மக்கள் வீடமைப்புப் பராமரிப்புத் திட்டத்தின் கீழ் புதிய வீடுகளைக் கட்டுவதற்கும், அசல் வீடுகளைப் பழுது பார்ப்பதற்கும் ரிம3.1 மில்லியன் ஒதுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

“மேலும், பினாங்கு 80 விழுக்காடு அதிகபட்ச பராமரிப்பு நிதியம் (TPM80PP) முன்முயற்சியின் மூலம் தனியார் குறைந்த அல்லது நடுத்தர குறைந்த விலை வீட்டுத் திட்டங்களைப் பராமரிப்பதற்காக ரிம6.8 மில்லியனையும் ஒதுக்கீடுச் செய்கிறது.

“பினாங்கு மாநில வீட்டுவசதி ஆணையத்திற்கு 2023 ஆம் ஆண்டில் நிர்வாகச் செலவுகளுக்காக மொத்தம் ரிம13 மில்லியன் வழங்கப்படும்,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், நிலம் & பொருளாதார மேம்பாடு மற்றும் தொலைதொடர்பு ஆட்சிக்குழு உறுப்பினருமான கொன் இயோவ், உலகத்தையும் நாட்டையும் தாக்கியுள்ள பருவநிலை மாற்றம் தற்போது மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

எனவே, மாநில அரசாங்கம், மாநில நீர்ப்பாசனம் மற்றும் வடிக்கால் துறையுடன் (JPS) இணைந்து ரிம29.85 மில்லியன் ஒதுக்கீட்டின் மூலம் பல வெள்ள நிவாரணத் திட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலம் வெள்ளம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.

“இதில் வெள்ள நிவாரணத் திட்டங்கள்; ஆற்றை ஆழப்படுத்துதல் மற்றும் பராமரித்தல்; விவசாய நீர்ப்பாசனம் மற்றும் வடிக்கால்; நீர்ப்பாசனத்திற்கான நீர் பாய்ச்சும் திட்டங்கள்; கடலோர மேம்பாடு; நதி பராமரிப்பு மேம்பாடு; சுற்றுச்சூழலுக்கு உகந்த வடிக்கால்; நீர்த்தேக்கக் குளங்கள் மற்றும் பிற அடங்கும்.

“2021 இல் ஐந்து உயர் தாக்கம் கொண்ட வெள்ள நிவாரணத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. இது தவிர, மேலும் இரண்டு திட்டங்கள் 2022, ஜூன் மாதம் தொடங்கப்பட்டன. அதாவது வான் பிராக் வெள்ள நிவாரணத் திட்டம் மற்றும் பொக்கோ அஸ்ஸாம் வடிக்கால் வெள்ள நிவாரணத் திட்டம் ஆகியவை தத்தம் ஆறு சதவீதம் மற்றும் 2 சதவீதம் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

“இந்த இரண்டு திட்டங்களும் வருகின்ற 2024 இல் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று அவர் விளக்கமளித்தார்.

2023 பினாங்கு வரவு செலவு திட்டம் ‘ ‘மக்களின் நல்வாழ்வுக்கான நிலையான மேம்பாடு’ என்ற கருப்பொருளில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் நிர்வாகச் செலவுகளுக்கு ரிம989.47 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது, இது 2022 உடன் ஒப்பிடும்போது ரிம54.25 மில்லியன் அதிகமாகும்.

இதற்கிடையில், மேம்பாட்டு நிர்வாகம் அதாவது ஒன்பது மாநிலத் துறைகள் உட்பட வரவு செலவு திட்டத்தில் ரிம326.8 மில்லியன் ஒதுக்கப்படுகிறது.

2023 ஆம் ஆண்டிற்கான மதிப்பிடப்பட்ட ரிம522.35 மில்லியன் வருவாயுடன் ஒப்பிடும்போது இந்த வரவு செலவு திட்டம் ரிம467.12 மில்லியன் பற்றாக்குறையைக் காண்பிக்கிறது. இது கடந்த ஆண்டு ரிம449.8 மில்லியனுடன் ஒப்பிடும்போது ரிம17.32 மில்லியன் அதிகமாகும்.

“இருப்பினும், மாநிலத்தின் வளர்ச்சியை மேம்படுத்தவும், அதே நேரத்தில் மக்களின் நல்வாழ்வைப் பராமரிக்க உறுதி செய்யவும் மாநில அரசின் வாக்குறுதியைக் கருத்தில் கொண்டு, இந்தப் பற்றாக்குறை மிக்க வரவு செலவு திட்டம் செயல்படுத்த இணக்கம் கொள்கிறது.

2023 வரவு செலவில் எதிர்பார்க்கப்படும் ரிம467.12 மில்லியன் பற்றாக்குறை, 2021 ஆம் ஆண்டின் இறுதியில் மாநிலத்தில் திரட்டப்பட்ட சேமிப்பான ரிம848.82 மில்லியன் நிதியில் இருந்து நிதியளிக்கப்படும்.

“2021 ஆம் ஆண்டின் இறுதியில் மாநில அரசு கையிருப்பின் மொத்தத் தொகை, ஒருங்கிணைந்த அறக்கட்டளைக் கணக்கு உட்பட ரிம2.117 பில்லியன் ஆகும்,” என்று கொன் இயோவ் கருத்து தெரிவித்தார்.