Comet நிறுவனம் பினாங்கில் அதன் செயல்பாட்டை விரிவாக்கம் செய்வதாக அறிவித்தது

Admin

பத்து காவான் – சுவிட்சர்லாந்தை மையமாகக் கொண்ட புத்தாக்கமிக்க தொழில்நுட்ப நிறுவனமான Comet குழுமம், பத்து காவான் தொழிற்பேட்டையில், பெர்சியாரான் காசியா செலாத்தான் 3 இல் உள்ள தற்போதைய ஆலையில் அமைந்துள்ள புதிய வசதியுடன் பினாங்கில் அதன் செயல்பாட்டை விரிவுபடுத்துகிறது.

புதிய 30,000 சதுரஅடி வசதியின் விரிவாக்கத் திட்டம் அடுத்த ஆண்டு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அதன் நிறுவன தலைமை செயல்முறை அதிகாரி ஸ்டீபன் ஹஃபர்ல் தெரிவித்தார்.

“நாங்கள் ஆகஸ்ட் 2020 முதல் பினாங்கில் உள்ள பத்து காவான் தொழிற்பேட்டையில் செயல்பட்டு வருகிறோம். ஏனெனில், எங்கள் அசல் உபகரண உற்பத்தி (OEM) வாடிக்கையாளர்கள் ஆசியாவில் குறிப்பிடத்தக்க உற்பத்தி நடவடிக்கைகளைக் கொண்டுள்ளதால் ஆசியாவில் எங்களது உற்பத்தியை விரிவாக்கம் செய்ய முற்படுகிறோம்.

“அதிகரிக்கும் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும், வேகமாக வளர்ந்து வரும் இந்த பிராந்தியத்தில் உள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்துவதற்கும், Comet தற்போதைய இடத்தில் கூடுதலாக 30,000 சதுரஅடியை வாடகைக்கு எடுத்து உயர்-அதிர்வு பொருட்களை உருவாக்க இணக்கம் கொள்கிறது.

“உலகின் தற்போதைய நிச்சயமற்ற சூழலால், ‘semiconductor’ மற்றும் எலக்ட்ரானிக்ஸ் தேவைக்கான நீண்ட கால வளர்ச்சி இயக்கம் குறித்து கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது.

“தற்போது, ​​இனாரி தொழிற்சாலை கட்டிடத்தின் ஒரு பகுதியை வாடகைக்கு எடுக்கப்பட்டது.

“இந்த நிறுவன விரிவாக்கம் உயர்-அதிர்வு கூறுகளுக்கான உற்பத்தி மற்றும் சேவை மையமாக செயல்படும். இது ‘மைக்ரோசிப்’ உற்பத்திக்கான ‘பிளாஸ்மா’ செயல்முறைகளைக் கட்டுப்படுத்த பயன்படும் முக்கிய தயாரிப்பு ஆகும்.

“மேலும், Comet நிறுவனம் மொத்தமாக 60,000 சதுர அடி இடத்தைக் கொண்டிருக்கும். மேலும், வாடிக்கையாளர்களின் ‘semiconductor’ உபகரணங்களுக்கானத் தேவைகளைப் பூர்த்தி செய்ய சுமார் 500 பேர் பணியமர்த்தப்படுவார்கள்,” என்று ஹஃபர்ல் தனது உரையில் கூறினார்.


மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ் Comet நிறுவன தொடக்க விழாவை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து பினாங்கில் உற்பத்தி வசதியை நிறுவுவதில் தொடர்ந்து வழங்கும் நம்பிக்கை மற்றும் ஆதரவிற்காக Comet குழுமத்திற்கு நன்றித் தெரிவித்தார்.

Comet நிறுவன முதலீடு மற்றும் அதன் விரிவாக்கத்துடன், வரும் ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என மாநில அரசு எதிர்பார்க்கிறது, என்றார்.

“உற்பத்தி, பொறியியல் மற்றும் விநியோகத் துறைகளில் திறன் மிக்க மனித வளத்தை உருவாக்க வித்திடும்.

“பினாங்கு மாநிலம் தொழில்துறையில் அதன் கால் தடம் பதித்து 50வது ஆண்டு நிறைவு விழாக் கொண்டாடும் வேளையில், இன்வெஸ்ட் பினாங்கு மற்றும் பிற தொடர்புடைய மாநில ஏஜென்சிகள் மூலம் இம்மாநில முதலீட்டாளர்களுக்கு அசைக்க முடியாத ஆதரவை வழங்க உறுதி பூண்டுள்ளது,” என்றார்.

இந்த விழாவில் இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப. இராமசாமி; புக்கிட் தம்புன் சட்டமன்ற உறுப்பினர் கோ சூன் ஐக்; செபராங் பிறை மாநகர் கழக(எம்.பி.எஸ்.பி) மேயர் டத்தோ அசார் அர்ஷாத், இன்வெஸ்ட் பினாங்கு தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ லூ லீ லியான், மலேசிய முதலீட்டு மேம்பாட்டு ஆணையம் (Mida) துணை தலைமை நிர்வாக அதிகாரி (முதலீடு மேம்பாடு) லிம் பீ வியன் மற்றும் Comet நிறுவன குழும இயக்குநர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.