LovePENANG நெடுவோட்டத்தில் கலந்து கொள்ள 10,000 பங்கேற்பாளர்களுக்கு வாய்ப்பு

Admin

ஜார்ச்டவுன் – பினாங்கை ❤️ (LovePENANG) பிரச்சாரத்தின் கீழ் மாநில அரசாங்க ஏற்பாட்டில் நடத்தப்படும் பினாங்கை நேசிக்கிறேன் நெடுவோட்டம் அனைத்து தரப்பினராலும் குறிப்பாக பினாங்கு வாழ் பொது மக்களால் வரவேற்கப்படுகிறது.

வருகின்ற மே,14 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 7.00 மணிக்கு விஷன் பார்க், கெபாலா பத்தாஸ், வட செபராங் பிறை (SPU) இல் நடைபெறும் LovePENANG நெடுவோட்டம் இந்த ஆண்டு தொடக்க நிகழ்ச்சியாக இடம்பெறுகிறது.

“அனைத்துத் தரப்பினரும், குறிப்பாக பினாங்கு வாழ் மக்கள், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுடன் சேர்ந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான வாய்ப்பைத் தவறவிட வேண்டாம். இது நமது மாநிலத்தின் மீதான நேசம் மற்றும் பக்தியை மேலோங்கச் செய்யும். நாம் அனைவரும் பினாங்கை நேசிக்கிறோம்,” என்று மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ் கொம்தார் கட்டடத்தில் LovePENANG நெடுவோட்ட நிகழ்ச்சியின் செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு கூறினார்.

“பினாங்கு மாநில குடிமக்கள், சகோதரத்துவப் பிணைப்புகளை மேலும் வலுப்படுத்த இந்நிகழ்ச்சியை ஒரு தலமாகப் பயன்படுத்த வேண்டும். இந்தத் திட்டத்திற்கானப் பதிவு செயல்முறை முன்னதாகவே தொடங்கப்பட்டு, மே,2-ஆம் தேதி வரை, 7,100 பங்கேற்பாளர்களைப் பதிவு செய்திருந்த வேளையில், இது நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டியது. எனவே, அனைத்துத் தரப்பினரும் கலந்துகொள்ளவும், நல்லிணக்கத்தைப் பேணவும் தற்போது 10,000 பங்கேற்பாளர்கள் வரை கலந்து கொள்ள பதிவு திறக்கப்பட்டுள்ளது.

“இந்த நெடுவோட்டத்தில் கலந்து கொள்ள நுழைவுக் கட்டணம் ரிம15 மட்டுமே விதிக்கப்படுகிறது. இதில் கலந்து கொள்ளும் பங்கேற்பாளர்கள் அதிர்ஷ்டக் குலுக்கலில், குறிப்பாக 5 மோட்டார் சைக்கிள்கள், 30 மிதிவண்டிகள், 142 பரிசுக் கூடைகள் என பல பரிசுகள் வெல்லவும் வாய்ப்பளிக்கப்படுகிறது.

இந்த ஐந்து (5) கிலோமீட்டர் தூரம் கொண்ட நெடுவோட்டம் விஷன் பார்க், கெபாலா பத்தாஸில் தொடங்கி ஜாலான் துன் ஹம்டான் ஷேக் தாஹிர் – லெபோ பெர்தாம் பெர்டானா – பெர்சியாரான் பெர்தாம் பெர்டானா 6 வழியாக விஷன் பார்க், கெபாலா பத்தாஸுக்கு மீண்டும் வந்தடையும்.

அன்றைய தினம், நெடுவோட்டம் மட்டுமின்றி மாநில அரசு நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள், ஆதரவாளர்கள் என கண்காட்சிக் கூடங்கள், உணவுக் கடைகள், தகவல் மையம் என ஓரங்கே கார்னிவலில் இடம்பெறும்.

LovePENANG நெடுவோட்டம் பொது மக்களிடையே சிறந்த வரவேற்புப் பெற உதவிய ஆதரவாளர்கள் அனைவருக்கும் இளைஞர் மற்றும் விளையாட்டு ஆட்சிக்குழு உறுப்பினரான சூன் லீப் சீ நன்றித் தெரிவித்தார்.

பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்படும்
பங்கேற்பு பைகளை மே,12 (வெள்ளிக்கிழமை) மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை பினாங்கு விளையாட்டு மன்றம் (Majlis Sukan Negeri Pulau Pinang) அல்லது மே,13 (சனிக்கிழமை) மதியம் 1.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை மில்லேனியம் அரங்கம், கெப்பாலா பத்தாஸ் ஆகிய இடங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த நெடுவோட்டத்தில் கலந்து கொள்ள விரும்பும் பொது மக்கள் https://howei.com/event_details/lovepenangrun2023 எனும் அகப்பக்கத்தில் பதிவு செய்யலாம். மேல் விபரங்களுக்கு, LovePENANG Run முகநூலை அணுகவும்.

இந்தச் செய்தியாளர் கூட்டத்தில், பினாங்கு இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறையின் இயக்குநர் மொஷாகீர்; பினாங்கு இளைஞர் மேம்பாட்டு வாரிய தலைமை இயக்குநர் கிவீ சாய் லிங்; பினாங்கு மகளிர் மேம்பாட்டுக் கழக தலைமை நிர்வாக இயக்குநர் ஒங் பீ லேங் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.