PBIM 2026 பினாங்கின் பொருளாதாரத்தையும் உலகளாவிய அந்தஸ்தையும் உயர்த்துகிறது

whatsapp image 2026 03 17 at 1.46.10 pm

ஜார்ச்டவுன் – பினாங்கு பாலம் அனைத்துலக நெடுந்தூர ஓட்டப்போட்டி 2026 (PBIM), மாநிலத்திற்குத் தொடர்ந்து உறுதியான பொருளாதார மற்றும் சமூக பலன்களை வழங்கி வருகிறது என்று முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோ அதிகாரப்பூர்வ தொடக்க விழாவில் தெரிவித்தார்.

whatsapp image 2026 03 17 at 1.46.11 pm
“நாடு முழுவதிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் ஓட்டப்பந்தய வீரர்கள் வரும்போது, ​​அவர்கள் பத்து காவான் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள உள்ளூர் தொழில், தங்கும் விடுதிகள், உணவு மற்றும் பானக் கடைகளுக்கு உறுதியான பொருளாதாரத் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள்,” என்று அவர் கொம்தாரில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

“இது ரிங்கிட் மற்றும் சென் மதிப்பைத் தாண்டியது. இந்த நிகழ்ச்சி சமூகத்தை ஒரே மேடையில் ஒன்றிணைக்கவும், ஒருவருக்கொருவர் ஊக்கமளிக்கவும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கவும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது,” என்றும் அவர் மேலும் கூறினார்.

20 ஆண்டுகளுக்கும் மேலாக ஏற்பாடு செய்யப்பட்டு வரும் இந்த நெடுந்தூர ஓட்டப்போட்டி, ஓர் உள்ளூர் பந்தயத்திலிருந்து மலேசியாவின் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துலக ஓட்டப் பந்தய நிகழ்வுகளில் ஒன்றாக வளர்ச்சி கண்டுள்ளது என்றும், இது பெரிய அளவிலான விளையாட்டு நிகழ்ச்சிகளை நடத்தும் பினாங்கின் திறனை வலுப்படுத்துகிறது என்றும் சாவ் சுட்டிக்காட்டினார்.

PBIM 2026 வரும் டிசம்பர்,13 அன்று நடைபெற உள்ளது. இதற்கான பதிவு இன்று மதியம் 12.30 மணிக்கு தொடங்குகிறது. கடந்த ஆண்டு 23,000 பேர் பங்கேற்றதைத் தொடர்ந்து, இந்த ஆண்டில் 23,000 முதல் 25,000 வரை ஓட்டப்பந்தய வீரர்கள் பங்கேற்பதை ஏற்பாட்டாளர்கள் இலக்காகக் கொண்டுள்ளனர்.

அண்மைய ஆண்டுகளில் நெடுந்தூர ஓட்டப்போட்டி போட்டியை பத்து காவானுக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. பந்தய ஏற்பாட்டையும் பங்கேற்பாளர்களின் அனுபவத்தையும் கணிசமாக மேம்படுத்தியுள்ளது என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.

“நவீன உள்கட்டமைப்பு மற்றும் சிறந்த அணுகல் வசதிகளுடன், பத்து காவான் ஒரு பொருத்தமான இடமாக நிரூபிக்கப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

“ஜார்ச்டவுனைத் தாண்டி” என்ற சுற்றுலா மூலோபாயத்தை முன்னேற்றி, செபராங் பிறை மற்றும் பினாங்கின் பிற பகுதிகளுக்கும் வருகையாளர்களை ஈர்க்கிறது.

மாநில சுற்றுலா மற்றும் படைப்பாற்றல் பொருளாதார ஆட்சிக்குழு உறுப்பினர் வோங் ஹொன் வாய், PBIM பினாங்கின் விளையாட்டு சுற்றுலா சூழலை வலுப்படுத்தும் முக்கிய அம்சமாக திகழ்கிறது என்று விளக்கமளித்தார்.

“PBIM, மலேசியாவில் நடைபெறும் மிகப்பெரிய மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஓட்டப்பந்தய நிகழ்ச்சிகளில் ஒன்றாக தொடர்ந்து வலுப்பெறுகிறது,” என்று அவர் கூறினார். மேலும், அஸ்பென் விஷன் சிட்டியில் அமைந்துள்ள வசதிகள் மேலும் திறம்பட்ட மற்றும் ஒருங்கிணைந்த போட்டி சூழலை உருவாக்கியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

2026 முதல் PBIM உலகளாவிய ‘Abbott World Marathon Majors’ அமைப்பின் கட்டமைப்பிற்குள் அங்கீகரிக்கப்படும் என்றும், அதோடு ‘Association of International Marathons and Distance Races’ அமைப்பின் சான்றிதழையும் பெற்றுள்ளதாக வோங் அறிவித்தார்.

“இந்த மைல்கல், PBIM-இன் அனைத்துலக நம்பகத்தன்மையை கணிசமாக மேம்படுத்துவதோடு, உலகத் தரம் வாய்ந்த
நெடுந்தூர ஓட்டப்போட்டிகளுக்கான இடமாக பினாங்கை நிலைநிறுத்துவதற்கான எங்கள் முயற்சிகளையும் வலுப்படுத்துகிறது,” என்று அவர் கூறினார்.

உலகின் மிகவும் மதிப்புமிக்க நெடுந்தூர ஓட்டப்போட்டிகளில் பங்கேற்பதற்கான தகுதிப் பயணத்தின் ஒரு பகுதியாக, ஓட்டப்பந்தய வீரர்கள் தங்கள் PBIM முடிவுகளைப் பயன்படுத்த இந்தப் புதிய அங்கீகாரம் அனுமதிக்கிறது என்றும் அவர் மேலும் கூறினார்.

போட்டித்தன்மையை மேலும் உயர்த்துவதற்காக, தீவிர மற்றும் உயர் செயல்திறன் கொண்ட ஓட்டப்பந்தய வீரர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ‘முழு மராத்தான் சவால்'(Full Marathon Challenge) மற்றும் ‘அரை மாரத்தான் சவால்’ என்ற இரண்டு புதிய உயர்மட்டப் பிரிவுகளை அறிமுகப்படுத்துவதாக வோங் அறிவித்தார்.

இதற்கிடையில், அஸ்பென் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் அனிலரசு, இந்நிகழ்ச்சி வெறும் பந்தயத்தைத் தாண்டி, சமூகத்தை ஒன்றிணைக்கும் ஒரு தளமாக உருவெடுத்துள்ளது என்று கூறினார்.

அதிகரித்து வரும் பங்கேற்பும் சமூக ஈடுபாடும், பினாங்கில் வளர்ந்து வரும் ஓட்டப்பந்தய கலாச்சாரத்தை தெளிவாக பிரதிபலிக்கின்றன என்றும் அவர் மேலும் கூறினார்.

முன்னதாக, மாநில வர்த்தக மற்றும் தேசிய ஒற்றுமை ஆட்சிக்குழு உறுப்பினர் கோ சூன் ஐக் அவர்களும் கலந்து கொண்டார்.