கே.டி.எம் பட்டர்வொர்த், பினாங்கு சென்ட்ரல் மற்றும் பயணப்படகு சேவை இணைப்பை மேம்படுத்த திட்டம்

whatsapp image 2026 01 19 at 17.35.36

 

பட்டர்வொர்த் – மாநில அரசு கே.டி.எம் பட்டர்வொர்த்–பினாங்கு சென்ட்ரல் இணைப்பு மற்றும் பினாங்கு பயணபடகு சேவை தொடர்பாக பொதுமக்களின் கருத்துகள் மற்றும் புகார்களை கேட்கத் தயாராக உள்ளது.

மாநில போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் சாய்ரில் கீர் ஜோஹாரி நேற்று கே.டி.எம் பட்டர்வொர்த் மற்றும் பினாங்கு சென்ட்ரலுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது இவ்வாறு கூறினார்.

கடந்த ஆண்டு நவம்பரில் பட்டர்வொர்த் நிலையத்தில் ஆறு பெட்டிகள் கொண்ட காலியான KTM கொமுட்டர் இரயில் தண்டவாளத்தின் முடிவில் மோதி ஏற்பட்ட விபத்து சம்பவத்தைத் தொடர்ந்து ஏராளமான புகார்கள் வந்ததாக சாய்ரில் தெரிவித்தார்.

“அண்மையில், மாநில அரசு பொதுமக்களிடமிருந்து, குறிப்பாக சிரமங்கள் மற்றும் இணைப்பு சிக்கல்கள் தொடர்பான புகார்களை பெற்றுள்ளது.

இம்முறை வருகையின் போது, குறிப்பிடத்தக்க மேம்பாடுகள் நிறைவடைந்துள்ளதுடன், தொடர்புடைய நிறுவனங்களால் மேலும் பல பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் உரிமையாளரான ரயில்வே சொத்துடைமை கார்ப்பரேஷன் (RAC), Keretapi Tanah Melayu Bhd (KTMB), பொதுப்பணித் துறை (JKR) மற்றும் பினாங்கு சென்ட்ரலின் ஆபரேட்டரான மலேசியன் ரிசோர்சஸ் கார்ப்பரேஷன் பெர்ஹாட் (MRCB) ஆகியவை அடங்குகின்றன.

இரயில் நிலையக் கட்டிடத்தின் ஒரு பகுதியை ரயில் மோதிய சம்பவத்தைத் தொடர்ந்து, நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் முக்கிய புகார்கள் பெறப்பட்டதாக தள வருகையின் போது நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சாய்ரில் கூறினார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக, கே.டி.எம் பட்டர்வொர்த் நிலையத்தையும் பினாங்கு சென்ட்ரலையும் இணைக்கும் பாதசாரி பாதை ஒன்றரை மாதங்களுக்கு தற்காலிகமாக மூடப்பட்டதுடன், இதனால் பயணிகளுக்கு சிரமம் ஏற்பட்டதாக சாய்ரில் குறிப்பிட்டார்.

 

இந்தப் பிரச்சனைகள் தற்போது தீர்க்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். 200 மீட்டர் நீளமுள்ள இந்தப் பாதை குளிரூட்டி வசதிகளுடன், உலகளாவிய வடிவமைப்பு தரநிலைகள் மற்றும் தொழில்நுட்பத் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது.

 

“சில பயனர்கள் தங்கள் பொருட்களைப் பாதையில் எடுத்துச் செல்வது கூடுதல் சிரமமாக இருக்கலாம் என்றாலும், மெதுவான வேகத்தில் நடப்பது அதை எளிதாக்கும். ஏனெனில், இது உலகளாவிய வடிவமைப்பு தரநிலைகளுக்கு இணங்குகிறது,” என்று அவர் கூறினார்.

கூடுதலாக, பெரும்பாலான வசதிகள் நல்ல நிலையில் இருப்பதாகவும், கவனம் செலுத்த வேண்டியவை தற்போது தீர்க்கப்பட்டு வருவதாகவும் சாய்ரில் பகிர்ந்து கொண்டார்.

“உதாரணமாக, பழுதடைந்த மின் தூக்கி செயல்படாதபோது, பயனர்கள் படிக்கட்டுகளைப் பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை, இது கடினமாக இருக்கலாம்.

 

“இந்தப் பிரச்சனைகள் நிலைய மேம்படுத்தல் திட்டத்தின் மூலம் தீர்க்கப்படும். மத்திய அரசு இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது, இது விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.”

“இது தற்போது குத்தகை மதிப்பீட்டு கட்டத்தில் உள்ளது, மேலும், இரண்டு தளங்களிலும் மின் படிகட்டுகள் நிறுவுவதும் இதில் அடங்கும். கூடுதலாக, கே.டி.எம் நிலையத்தில் உள்ள “pick-up” மற்றும் “drop-off” பகுதிகள் பிரிக்கப்படும்,” என்று அவர் கூறினார்.

பட்டர்வொர்த் கே.டி.எம் நிலையத்தை ரிம30 மில்லியன் செலவில் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் அறிவித்ததாக முன்னர் தெரிவிக்கப்பட்டது. பட்டர்வொர்த் பயணபடகு முனையம் மற்றும் பினாங்கு சென்ட்ரல் ஆகியவற்றுடன் சேர்ந்து இந்த நிலையத்தை ஒருங்கிணைந்த பொது போக்குவரத்து மையமாக மாற்றுவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

தற்போது அனைத்து pick-up மற்றும் drop-off செயல்பாடுகளும் ஒரே இடத்தில் நடைபெறுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்று ஜைரில் கூறினார். கே.டி எம் நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதி தொடர்பான முக்கிய புகார்களில் இதுவும் ஒன்றாகும்.

” pick-up மற்றும் drop-off மண்டலங்களைப் பிரிப்பதன் மூலம், போக்குவரத்து கணிசமாக மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், பினாங்கு சென்ட்ரலில், இ-ஹெய்லிங் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் MRCB செயல்படுத்தியுள்ளது.

“இந்த சேவைகள் நிலை 2 மற்றும் நிலை 2A க்கு மாற்றப்படும், நிலை 2 வாடகை கார் ஓட்டுநர்களுக்கும் நிலை 2A கிராப்பிற்கும் ஒதுக்கப்படும், இதில் பிரத்யேக காத்திருப்பு இடப் பகுதிகள் அமைக்கப்படும்.

“ஒட்டுமொத்தமாக, அனைத்து தொடர்புடைய நிறுவனங்களாலும் பல்வேறு முன் எச்சரிக்கை முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதை நாங்கள் காண்கிறோம். அவர்களின் அக்கறை மற்றும் அர்ப்பணிப்புக்கு எங்கள் பாராட்டுகளைத் தெரிவிக்க விரும்புகிறோம்.

 

பயணப்படகு சேவை மற்றும் கே.டி.எம்., மின்சார இரயில் சேவை (ETS) மற்றும் பிற போக்குவரத்து முறைகள் இடையிலான அட்டவணைகளை சீரமைப்பது பயனர்களால் எழுப்பப்படும் மற்றொரு சவாலாகும் என்று சாய்ரில் கூறினார்.

“நேர அட்டவணை ஒருங்கிணைப்பை மேம்படுத்த நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், எந்தவொரு பொதுப் போக்குவரத்து அமைப்பையும் போலவே, குறிப்பாக பேருந்துகள் மற்றும் படகுகளில், அவ்வப்போது தாமதங்கள் ஏற்படலாம்.

“எனவே பயணிகள் தங்கள் பயணங்களை குறிப்பாக பயணப்படகு அல்லது பேருந்துகள் போன்ற தாமதங்களை அனுபவிக்க அதிக வாய்ப்புள்ள போக்குவரத்து முறைகளைப் பயன்படுத்தும் போது கவனமாக திட்டமிட வேண்டும்”, என சாய்ரில் அறிவுறுத்தினார்.