பத்து உபான் – “சமூக விளையாட்டுகளை ஏற்பாடு செய்வது, சமூக உறவுகளை வலுப்படுத்தும் முக்கிய முன்முயற்சி திட்டமாகத் திகழ்கிறது. இது ஒற்றுமை உணர்வை ஊக்குவிக்கவும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்தவும், சமுதாய உறுப்பினர்களிடையே நல்லிணக்கத்தை மேம்படுத்தவும் வழிவகுக்கிறது.
“பொதுவாக, சமூக விளையாட்டுகளில் காற்பந்து, வலைப்பந்து, குடும்பங்கள் பங்கேற்கும் சுவாரசியமான விளையாட்டுகள், ஓட்டப்பந்தயம் மற்றும் பாரம்பரிய விளையாட்டுகள் உள்ளடங்கும். இந்தப் போட்டிகள் அனைத்து வயதினரையும் ஈர்க்கக்கூடியவையாக இருப்பதால், வயது வரம்பின்றி அனைத்து சமூகத்தினரின் பங்களிப்பையும் ஈர்க்கிறது.

பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் ஆறுமுகம், மடானி திறந்த கேரம் போட்டியை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து இவ்வாறு கூறினார்.
இந்தக் கேரம் போட்டி பத்து உபான் சட்டமன்ற சேவை மைய அலுவலகம், கேரம் கழகம் & வேளாண் விளையாட்டுக் கழகத்துடன் இணைந்து, மலேசியா அறிவியல் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டிக்கு சமூகத்தின் பல்வேறு மட்டங்களிலிருந்தும், 12 வயது முதல் 60 வயது பெரியவர்கள் வரை, சிறந்த விளையாட்டுத் திறனைக் காட்டும் வகையில், சிறந்த வரவேற்பு கிடைத்தது. இந்தப் பாரம்பரிய விளையாட்டில் 160 பேர் கலந்து கொண்டு உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
மேலும், இத்தகைய போட்டிகள் புதிய திறமைகளை வெளிக்கொணரவும், சமூக ஒற்றுமையை வலுப்படுத்தவும், நேர்மறையான சமூக உறவுகளை உருவாக்கவும் பெரிதும் உதவுகின்றன. இதன் மூலம் இளைய தலைமுறையினருக்குப் பொறுப்புணர்வு மற்றும் சமூக பங்களிப்பு பற்றிய விழிப்புணர்வும் உருவாகிறது என்று சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் தெரிவித்தார்.

“இது பினாங்கின் உண்மையான முகம், பல்வேறு தலைமுறைகள் மற்றும் பின்னணிகள், விளையாட்டு மற்றும் நல்லினக்கம் மூலம் ஒன்றுபட்டுள்ளன,” என்று அவர் மகிழ்ச்சியுடன் கூறினார்.
மேலும், இது போன்ற சமூக விளையாட்டுகள் வெறும் போட்டிகள் மட்டுமல்ல, மக்களிடையே ஒழுக்கம், நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை வளர்ப்பதற்கான தளங்களும் கூட என்று அவர் வலியுறுத்தினார்.

பத்து உபானில் சமூக விளையாட்டுகளை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள், ஆரோக்கியமான, இணக்கமான மற்றும் ஒன்றுபட்ட சமூகத்தை உருவாக்க தொடர்ந்து உதவும். இத்தொகுதியில் சமூக மேம்பாட்டுக்காக பல முன்முயற்சித் திட்டங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று வலியுறுத்தினார்.
இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக்க உதவிய அனைவருக்கும் அவர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். மேலும், எதிர்கால சமூக நிகழ்ச்சிகளில் அவர்களை மீண்டும் சந்திக்க விரும்புவதாகவும் அவர் கூறினார்.
இந்தப் போட்டியின் வெற்றியாளர்கள் ரொக்கப்பணமாக ரிம1,500 மற்றும் ‘மாண்புமிகு குமரேசன் ஆறுமுகம் கோப்பை’-ஐ வென்றனர்.