ஜாலான் பெதெக் நீச்சல் குளம் மேம்பாட்டுப் பணிகள் 80 சதவீதம் நிறைவு – கூய் ஜி சென்

img 20260117 092525

பாடாங் லாலாங் – ஜாலான் பெதெக் நீச்சல் குளத்தை மேம்படுத்தும் பணிகள் 2025,பிப்ரவரி மாதத்தில் தொடங்கப்பட்டன. தற்போது இப்பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் முழுமையாக முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செபராங் பிறை மாநகர் கழகம் (எம்.பி.எஸ்.பி) ரிம3.6 மில்லியன் செலவில் மேற்கொண்டு வரும் இத்திட்டம், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவின்படி செயல்படுத்தப்பட்டு வருவதாக இளைஞர், விளையாட்டு மற்றும் சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் டேனியல் கூய் ஜி சென் தெரிவித்தார்.

“இந்த மேம்பாட்டின் அடிப்படைப் பணிகள், குறிப்பாக கசிவுகள் தொடர்பான மறுசீரமைப்புகள், தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளன. மேலும், இந்த பிப்ரவரி மாதத்தில் முழு நீச்சல் குளத்திற்கும் பளிங்கு கற்கள் பொருத்தும் பணி தொடங்கும் என எதிர்பார்க்கிறோம்,” என்றும் அவர் கூறினார்.

“இந்தத் திட்டம் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடிக்கப்படும். இதன் மூலம் பொதுமக்கள், குறிப்பாக புக்கிட் மெர்தாஜாம் பகுதியில் வசிப்பவர்கள், இந்த வசதியை மீண்டும் பயன்படுத்த முடியும்,” என்று அவர், இங்கு அருகிலுள்ள நீச்சல் குள மேம்பாட்டுப் பணிகளின் அடைவுநிலையை நேரில் ஆய்வு செய்த பின்னர் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
எம்.பி.எஸ்.பி கவுன்சில் உறுப்பினர்களான யோகன்ராஜ் தேவர் மற்றும் லிண்டா எக் கெர் வெய், எம்.பி.எஸ்.பி பொறியியல் துறையின் மூத்த உதவி இயக்குநர் கைரோன் மிசா காலித் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பாடாங் லாலாங் மாநில சட்டமன்ற உறுப்பினரும் (ADUN) ஜி சென், ஜாலான் பெத்தெக் நீச்சல் குளத்தை மேம்படுத்தும் பணி, சமூகத்தினரிடையே ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை மேம்படுத்துவதற்கும், நீச்சல் விளையாட்டில் புதிய திறமைகளை வெளிக்கொணர்வதற்கும் மிகவும் அவசியம், என்றார்.

img 20260118 wa0031

“பினாங்கு மாநிலம் உண்மையில் பல விளையாட்டு வீரர்களை உருவாக்கியுள்ளது, குறிப்பாக நீச்சல் துறையில், எங்கள் விளையாட்டு வீரர்கள் அண்மையில் தாய்லாந்தில் நடந்த சீ விளையாட்டுப் போட்டியில் நம் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தியதில் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம்,” என்று அவர் கூறினார்.

இந்த மேம்பாட்டுப் பணிகள் முடிந்ததும் ஜாலான் பெதெக் நீச்சல் குளம் எம்.பி.எஸ்.பி தரப்பிடம் திரும்ப ஒப்படைக்கப்படும் என்று ஜி சென் கூறினார்.

இதற்கிடையில், ஜாலான் பெதெக் நீச்சல் குளம் மேம்படுத்தல் திட்டத்தின் முக்கிய பணிகளில் நீர்ப்புகா கான்கிரீட் கட்டமைப்பை அமைத்தல், புதிய பளிங்குக் கற்கள் பதித்தல் மற்றும் குளத்தின் உட்புற அழகமைப்பு பணிகள், அதேபோல் புதிய நீர் பம்ப் மற்றும் வடிகட்டல் அமைப்பை நிறுவுதல் ஆகியவை அடங்குகின்றன என்று லிண்டா எங் தெரிவித்தார்.

“கூடுதலாக, மேம்பாட்டுத் திட்டத்தில் கட்டிடங்கள், மின் அமைப்புகள் போன்ற மிகவும் வசதியான மற்றும் பாதுகாப்பான உபகரணங்களின் கட்டுமானம் மற்றும் புதுப்பித்தல் ஆகியவை அடங்கும்.

“இந்த நீச்சல் குளம் எம்.பி.எஸ்.பி தரப்பிடம் முழுமையாக ஒப்படைக்கப்படுவதற்கு முன்பு 12 மாத சோதனைக் காலத்தையும் மேற்கொள்ளும்” என்று அவர் கூறினார்