பட்டர்வொர்த் – பினாங்கு இந்து அறப்பணி வாரியம் (PHEB),Penang Hindu Endowments Board (PHEB) மாநில இந்து சமூகத்தினருக்காக நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட மின்சுடலை அமைக்கும் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த மின்சுடலை பாகான் டாலாமில் வாரியத்தின் சொந்த நிலத்தில் கட்டப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் நிறைவேறிய பின்னர், பினாங்கில் உள்ள அனைத்து இந்துக்களும் அன்புக்குரியவர்களின் இறுதி சடங்குகளை சீராக மற்றும் வசதியான முறையில் நடத்தக் கூடிய வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
“இந்த மின்சுடலை திட்டத்தின் கீழ் இரண்டு நவீன எரியூட்டிகள் பொருத்தப்படவுள்ளது. இதன் மூலம் செயல்பாடுகள் சீரான, நவீனமாக மற்றும் சுற்றுச்சூழல் &
சுகாதார தரநிலைகளை பின்பற்றி நடைபெறும்,” என இந்து அறப்பணி வாரியத்தின் தலைவரும் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினருமான
ஆர்.எஸ்.என் இராயர் செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் இதனைத்
தெரிவித்தார்.
இத்திட்டம் காத்திருப்பு நேரத்தை குறைக்கும், சேவை திறனை அதிகரிக்கும் மற்றும் சமூகத்தின் தற்போதைய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்படும்.
இத்திட்டத்தை செயல்படுத்த பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒப்புதல் அளித்து, ரிம1.5 மில்லியன் நிதி ஒதுக்கீட்டை வழங்கினார். இதன் மூலம், இந்து சமூகத்தின் அடிப்படை தேவைகள் மற்றும் மத உணர்வுகள் மதிப்பளிக்கப்படுகிறது என இராயர் தெரிவித்தார்.
ஓர் அறங்காவலர் அமைப்பாக, இந்து அறப்பணி வாரியம் இத்திட்டத்தை திறந்த குத்தகை செயல்முறை மூலம் செயல்படுத்தும். திறந்த குத்தகை முறை தொடர்பான விவரங்கள் பிப்ரவரி,16 முதல் PHEB இன் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவேற்றப்படும். தகுதியான அனைத்து ஒப்பந்ததாரர்களும் விண்ணப்பிக்க வரவேற்கப்படுவதாக
பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினரும் இந்து அறப்பணி வாரிய ஆணையருமான குமரன் கிருஷ்ணன் தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும், ஒருமைப்பாடு, பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை மற்றும் நிர்ணயிக்கப்பட்ட தொழில்நுட்ப தரநிலைகள் நிலைநிறுத்தப்படுவதை வாரியம் உறுதி செய்யும் என குமரன் கிருஷ்ணன் தெரிவித்தார்.
இந்த மின்சுடலை திட்டம் 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் முழுமையாக முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தொழில்நுட்ப மற்றும் சுற்றுச்சூழல் தரநிலைகளுக்கு இணங்க செயல்படும் வகையில் வடிவமைக்கப்படுவதை உறுதி செய்யப்படும் என்று இந்து அறப்பணி வாரியத் துணைத் தலைவரும் செனட்டருமான டாக்டர் லிங்கேஸ்வரன் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங், பாகான் ஜெர்மால் சட்டமன்ற உறுப்பினர் சீ யீ கின் மற்றும் இந்து அறப்பணி வாரிய ஆணையர்கள் கலந்து கொண்டனர்.