ஜார்ச்டவுன் – இன்று மாநில சட்டமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மற்றும் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் (ஊதியம்) (திருத்தம்) சட்ட மசோதா 2025, பதவி ஓய்வுக்குப் பிறகு ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மற்றும் மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் நல்வாழ்வை மேலும் மேம்படுத்தும் என்று முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் நம்பிக்கை தெரிவித்தார்.
நிதி, பொருளாதார மேம்பாடு & நிலம் மற்றும் தகவல்தொடர்பு ஆட்சிக்குழு உறுப்பினருமான சாவ்வின் கூற்றுப்படி, இந்த மசோதாவின் ஒப்புதல், அந்தந்த ஓய்வூதிய முறைகளில் வழங்கப்படும் ஓய்வூதியங்கள் மற்றும் வெகுமதிக்கான பங்கு விநியோக விகிதத்தைத் தீர்மானிக்கும்.
“(இந்த மசோதா) பணிக்குப் பிந்தைய ஊதிய முறை பொருத்தமானதாகவும், நியாயமானதாகவும், போட்டித்தன்மையுடனும் இருப்பதை உறுதி செய்வதாகும்,” என்று 15வது பினாங்கு மாநில சட்டமன்றத்தின் மூன்றாவது தவணையின் இரண்டாவது கூட்டத்தில் மசோதாவை தாக்கல் செய்தபோது அவர் இவ்வாறு விளக்கமளித்தார்.
கூடுதலாக, மக்களுக்குச் சேவை செய்தவர்களின் சேவைக்குப் பாராட்டு தெரிவிப்பதில் மாநில அரசின் உறுதிப்பாட்டை இந்த மசோதா நிறைவேற்றுகிறது என்று கொன் இயோவ் கூறினார்.
பாடாங் கோத்தா சட்டமன்ற உறுப்பினரும், பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர், இந்த மசோதாவை தாக்கல் செய்வது, பணிக்குப் பிந்தைய ஊதியத்தை நிர்வகிப்பதில் நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் நல்லாட்சி கொள்கைகளைப் பேணுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் கூறினார்.