பாகான் -பினாங்கு இந்து அறப்பணி வாரியம், முதல் முறையாக பினாங்கில் உள்ள 28 தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் 283 மாணவர்களுக்கு புறப்பாட நடவடிக்கைகளுக்கான சீருடைகளை வழங்கியது. வசதியற்ற பி40 குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் இந்தத் திட்டத்தின் மூலம் சீருடைகளைப் பெற்றுக்கொண்டனர்.
பொருளாதாரச் சிரமம் காரணமாக தமிழ்ப்பள்ளி மாணவர்கள் புறப்பாட நடவடிக்கைகளில் இருந்து விலக வேண்டிய நிலை ஏற்படக்கூடாது என்பதையும், அண்மையில் சில ஆசிரியர்கள் முன்வைத்த கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் துணைத் தலைவரும் செனட்டருமான டாக்டர் லிங்கேஸ்வரன், பினாங்கு மாநில இந்துகளின் சமூகநலனை பாதுகாப்பதில் அறப்பணி வாரியம் மேற்கொண்டு வரும் முன்முயற்சிகளை அடிக்கோடிட்டுக் காட்டினார்.
மேலும் அவர் பேசுகையில், புறப்பாடச் சீருடை இயக்கங்கள் என்பது வெறும் பள்ளி நடவடிக்கைகள் மட்டுமல்ல. அவை ஒழுக்கம், தன்னம்பிக்கை, தலைமைத்துவம் மற்றும் குழுப்பணி உணர்வு போன்ற வாழ்க்கைக்குத் தேவையான பண்புகளை மாணவர்களிடையே உருவாக்கும் முக்கிய அம்சமாகும், என வலியுறுத்தினார்.
இதனிடையே, இந்தத் திட்டத்தின் மூலம் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் பெற்றோரின் பொருளாதாரச் சுமை குறைவதுடன், பி40 மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் புறப்பாட நடவடிக்கைகளில் பங்கேற்கும் வாய்ப்பு உருவாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு துணை அமைச்சர் லிம் ஹுய் யிங், பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவர் ஆர். எஸ். என். இராயர், துணைத் தலைவர் செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன், பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன், பாகான் ஜெர்மால் சட்டமன்ற உறுப்பினர் சீ யீ கீன், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளிகளின் புறப்பாட இயக்கங்களுக்குச் சீருடை வழங்கும் திட்டத்திற்கு பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் ரிம50,000 மானியத்தை வழங்கி ஆதரவு நல்கினார். பினாங்கு இந்து அறப்பணி வாரியத்திற்கு அவர் வழங்கி வரும் தொடர் ஆதரவுக்காக, வாரியத்தின் துணைத் தலைவர் செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் நன்றியும் பாராட்டுகளையும் தெரிவித்தார்
தொடர்ந்து, கல்வி களத்தில் இன மத பேதமின்றி யாரும் பின் தங்கிவிடக்கூடாது என்ற நோக்கில் உதவிகள் வழங்கப்பட்டு வருவதையும்
துணை அமைச்சர் லிம் ஹுய் யிங்,
சுட்டிக்காட்டினார்.
இம்மாதிரியான உதவித் திட்டங்கள் வாயிலாக பி40 குழுவினருக்கு உதவிகள் சென்றடைவதை உறுதி செய்வதோடு, ஒற்றுமையுடன் பினாங்கு மாநில இந்திய மாணவர்களின் எதிர்காலத்தை நாம் கட்டியெழுப்ப முடியும்,” என நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த முயற்சி அனைத்து மாணவர்களிடமும் தொடர்ச்சியான நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

பினாங்கு இந்து அறப்பணி வாரியம் தொடர்ந்து இந்திய மாணவர்களின் கல்விக்கு உதவிகள் வழங்கி வருவது பாராட்டக்குரியதாகும்.