பினாங்கு மாநிலத்தில் 136 பள்ளிகளில் மேக்கர்லேப் வசதிகள் மேம்பாடு – ஜக்தீப்

Admin
whatsapp image 2026 05 14 at 3.28.55 pm

ஜார்ச்டவுன்: பினாங்கு முழுவதும் மொத்தம் 136 பள்ளிகளில் மேக்கர்லேப் வசதிகள் இடம்பெறுகின்றன. பினாங்கு அறிவியல் கிளஸ்டர் (PSC) மூலம் STEM (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்) கல்வியை நடைமுறை சார்ந்த முறையில் வலுப்படுத்தும் நோக்கில் மேக்கர்லேப் முன்முயற்சி செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் மூலம், மாணவர்கள் நேரடி அனுபவத்தின் அடிப்படையில் கற்றல் வாய்ப்புகளை பெறுகின்றனர். மேலும், தொழில்முறை வழிகாட்டிகளின் வழிகாட்டுதலுடன் தொழில் துறையின் வலுவான ஆதரவும் இந்த முன்முயற்சி திட்டத்திற்குப் பெற்று வருகிறது.

இந்தத் திட்டம், முப்பரிமாண (3D) அச்சுப்பொறிகள் மற்றும் ரோபோட்டிக்ஸ் கருவிகள் போன்ற நவீன உபகரணங்களுடன் கூடிய புத்தாக்க இடங்களை பள்ளிகளில் வழங்குகிறது என்று இரண்டாம் துணை முதலமைச்சர் ஜக்தீப் சிங் டியோ கூறினார்.

“மாநிலத்தில் உள்ள இளம் தலைமுறையினரிடையே படைப்பாற்றல் மற்றும் சிக்கல் தீர்க்கும் திறன்களை வளர்ப்பதே இதன் நோக்கமாகும். மேலும், தேசிய அளவில் STEM கல்வியில் ஆர்வத்தை வளர்ப்பதில் மாநில அரசு முன்னணி வகிக்கிறது.

மேலும், மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான தொழில்நுட்பத் திறன் கற்றல் (TSL) திட்டம் நாட்டிலேயே முதன்மையானது என்பதுடன், மாநில அரசு பினாங்கு STEM முன்முயற்சி மூலம் STEM மற்றும் தொழில்நுட்ப, தொழிற்கல்வி மற்றும் பயிற்சி (TVET) துறைகளில் திறன் மேம்பாட்டுப் பாதைகளை உருவாக்கி வருகிறது.

“TSL முன்முயற்சியின் கீழ், இந்தத் திட்டம் மேல்நிலைப்பள்ளி மட்டத்தில் உள்ள தொழில்துறை அகாடமி (ADI) மாணவர்களையும், நான்காம் மற்றும் ஐந்தாம் படிவ மாணவர்களையும் உள்ளடக்கியது. மேலும், இந்த இரண்டு வருடத் திட்டம் தேசிய தொழிற்கல்வித் தரநிலை (NOSS) பாடத்திட்டத்தையும், திறன் மேம்பாட்டுத் துறை (JPK) அங்கீகாரத்தையும் ஒருங்கிணைக்கிறது,” என்று அவர் தெரிவித்தார்.

பினாங்கு மாநில 15-வது சட்டமன்றத்தின் (DUN) நான்காவது பதவிக்காலத்தின் முதல் கூட்டத்தின் தொகுப்புரை ஆற்றியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மனித மூலதன மேம்பாடு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான ஆட்சிக்குழு உறுப்பினரும், டத்தோ கெராமாட் சட்டமன்ற உறுப்பினருமான ஜக்தீப், செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு தொடங்கும் வழக்கமான தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி பயிற்சி (TVET) அணுகுமுறையிலிருந்து வேறுபட்டது என்று விளக்கமளித்தார்.

“இந்தத் திட்டம், ‘பள்ளியிலிருந்து தொழில்துறைக்கு’ என்ற கொள்கையைப் பின்பற்றுகிறது. இதன் மூலம், மாணவர்கள் செய்முறைப் பயிற்சிகள் வழியாக ஆரம்பத்திலேயே தொழில்துறை சார்ந்த அனுபவத்துக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

“இந்த அணுகுமுறை மாணவர்களின் சந்தை மதிப்பை உயர்த்துவதோடு மட்டுமல்லாமல், பி40 பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு ‘வேலை–படிப்பு’ (work-study) மாதிரியின் மூலம் வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்புகளையும் வழங்குகிறது,” என்று அவர் தெரிவித்தார்

“இரண்டு வருட TSL திட்டத்தை நிறைவு செய்த பிறகு, மாணவர்கள் தொழில்துறை அகாடமி (ADI) திட்டத்தில் தங்கள் பயணத்தைத் தொடருவார்கள். மேலும், தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் அவர்கள் தொழில்துறையில் நிபுணத்துவம் பெறுகிறார்கள்,” என்று அவர் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், இந்தக் காலகட்டத்தில் TSL திட்டப் பட்டதாரிகள் தொழிற்பயிற்சியாளர்களாகப் பயிற்சி பெறுவார்கள், உதவித்தொகைகளைப் பெறுவார்கள், அதே நேரத்தில் மலேசியத் திறன் சான்றிதழை (SKM) பெறுவதற்கு அங்கீகரிக்கப்படுவார்கள்.

பினாங்கு திறன் மேம்பாட்டு மையம் (PSDC) மாணவர்கள் வேலை செய்து கொண்டே கல்வி கற்கும் வாய்ப்புகளை வழங்கும் தொழிற்பயிற்சி மற்றும் பயிற்சித் திட்டங்களை வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டங்கள் பட்டதாரிகளுக்கு நிலையான மற்றும் சிறந்த எதிர்காலத்தையும் உருவாக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தி தருகின்றன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மனித மூலதன மேம்பாட்டுச் சூழலமைப்பு, குறிப்பாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில், அடிமட்டம் முதல் வேலை இடம் வரை பல்வேறு நிலைகளில் இருந்து வலுவாக ஆதரிக்கப்படுகிறது என்பதற்கும் இது ஒரு சான்றாகும் என்று அவர் விளக்கமளித்தார்.