ஜார்ச்டவுன் – மாநில அரசு, பினாங்கு மாநில வீட்டுவசதி வாரியம் (LPNPP) மூலம், இலக்கு குழுவினர் சொந்த வீடு வாங்குவதை உறுதி செய்வதற்காக, தனியார் மேம்பாட்டாளர்களிடமிருந்து ரிம42,000 மதிப்புள்ள முத்தியாரா வீடுகளை (RMKu) நேரடியாக வாங்க திட்டமிட்டுள்ளது.
மாநில அரசு வழங்கும் வாடகை கொள்முதல் திட்டத்தின்(RTO) மூலம் தகுதியுள்ள குடிமக்கள் ‘ஏ’ வகை வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகளை (RMM A) வாங்குவதை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டது. இது பொது மக்கள் சொந்த வீடு வாங்க உதவும் முன்னெடுப்பு நடவடிக்கை என்று வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ எஸ்.சுந்தரராஜூ கூறினார்.
“பொது மக்கள் ரிம42,000 மதிப்புள்ள வீட்டை வாங்கும்போது வங்கிகள் கடன் வழங்குவதில் சிரமத்தை எதிர்நோக்குகிறது.

“நான் வீடமைப்பு நிர்வாக ஆட்சிக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டதிலிருந்து, நாங்கள் வீட்டுவசதி வாரியம் மூலம் மேம்பாட்டாளர்களிடமிருந்து வீடுகளை வாங்கி வருகிறோம். அந்த வீடுகள் வீட்டுவசதி வாரியத்தின் கீழ் இடம்பெறுகிறது.
“இலக்கு குழுவினர் இனி வங்கியிடமிருந்து கடன் ஒப்புதலைப் பெறுவது குறித்து கவலைப்பட தேவையில்லை. மாதம் ரிம250 மட்டுமே செலுத்தி இரண்டு மாத வைப்புத்தொகையை வீட்டுவசதி வாரியத்திற்கு செலுத்துங்கள்,” என்று சுந்தராஜு தெரிவித்தார்.

“இந்த RTO திட்டத்தின் கீழ், 15 ஆண்டுகளுக்குள், வீடு உங்களுடையதாகிவிடும்,” என்று அவர் அண்மையில் மைடின் பெர்தாம் பேரங்காடி வாகன நிறுத்துமிடத்தில் நடைபெற்ற வடக்கு செபராங் பிறை மாவட்ட அளவிலான வாடிக்கையாளர் சந்திப்பு நாள் தொடக்க விழா இதனைத் தெரிவித்தார்.
மேலும், ஏ வகை வீடு அல்லது 650 சதுர அடி பரப்பளவு கொண்ட வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகள் ஒரு யூனிட்டுக்கு அதிகபட்சமாக ரிம42,000 விலையில் தகுதி பெறுபவர்களுக்கு வழங்கப்படுகின்றன என அறியப்படுகிறது.

வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகளை வாங்குவதற்கான அடிப்படைத் தகுதிகளில், நாட்டில் இதுவரை சொந்த குடியிருப்பு வீடு இல்லாதவர்களும், மாதாந்திர குடும்ப வருமானம் ரிம2,500-ஐ மீளாத குடிமக்களும் அடங்குவர்.
தொடக்க உரையை நிகழ்த்திய பிறகு, பிறை சட்டமன்ற மாநில சட்டமன்ற உறுப்பினருமான சுந்தரராஜூ, விஸ்தா பெர்டானா அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்திற்கான முத்தியாரா வீடமைப்புத் திட்ட (RMKu) வகை ஏ கொள்முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் விழாவையும் பார்வையிட்டார்.
வீட்டுவசதி வாரிய பொது மேலாளர் கைருல்னிசாம் ஹாஷிம், பெர்தாம் மேம்பாட்டாளர் சென் பெர்ஹாட் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ தி.எஸ் அஹ்மத் நோர் சபுவுடன் கட்டாய கொள்முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
இந்நிகழ்ச்சியில், பெர்தாம் சட்டமன்ற உறுப்பினர், டத்தோ ஸ்ரீ ரீசல் மெரிக்கன் நைனா மெரிக்கன் மற்றும் செபராங் பிறை மாநகர் கழகம் (எம்.பி.எஸ்.பி) மேயர், டத்தோ படேருல் அமின் அப்துல் ஹமீத் ஆகியோரும் கொள்முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் விழாவில் கலந்து கொண்டனர்.