ஆலயங்கள் சேவை மையங்களாக உருமாற்றம் கண்டு இளைய தலைமுறையை நெறிப்படுத்த வேண்டும்.

Admin

பிறை – “ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்பதற்கு ஒப்ப ஆலயங்கள் சேவை மையங்களாக உருமாற்றம் காண வேண்டும். தற்போது 20 முதல் 35 வயதுக்கு உட்பட்ட இந்திய இளைஞர்கள் அதிகமாக குற்றச்செயல்களில் ஈடுப்படுகின்றனர். எனவே, இம்மாதிரியான இளைஞர்களை நல்வழிப்படுத்துவதற்கு ஆலயம் சிறந்த பங்கு வகிக்கிறது. இளைய தலைமுறையினர் ஆலயத்திற்கு அதிகமாக வழிப்பட வருவதற்கு ஆலய நிர்வாகம் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்,” என மலேசிய குற்றத்தடுப்பு அறவாரியத்தின் பினாங்கு மாநில தலைவர் டத்தோ புலவேந்திரன் கூறினார்.

பொதுவாகவே, ஆலயங்களில் நிகழும் நிர்வாகப் பிரச்சனைகளைக் களைத்து ஆலயம் பொது மக்களின் சேவை மையங்களாக உருமாற்றம் காண்பது அவசியம் என இந்து ஆலய மாநாட்டை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்து இவ்வாறு தெரிவித்தார்.

இந்த மாநாடு மலேசிய இந்து சங்க பினாங்கு மாநில பேரவையின் ஏற்பாட்டில் அண்மையில் ஜாலான் பாரு, ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய அரங்கத்தில் இனிதே நடைபெற்றது.

“மலேசியாவில் பல்லின மக்கள் ஒற்றுமையுடன் பல வகையான கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை அனுசரிக்கின்றனர். பொதுவாகவே அனைத்து சமயமும் அனைவருக்கும் நல்லதையே செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது. சமய இயக்கங்கள் சமூகநலன் மற்றும் தொண்டு திட்டங்கள் வழிநடத்துவது பாராட்டக்குறியது என மகளிர் & குடும்ப மேம்பாடு, பாலின ஈடுபாடு, இஸ்லாம் அல்லாத மத விவகார ஆட்சிக்குழு உறுப்பினர் சொங் எங் நிறைவு விழாவில் உரையாற்றினார்.

மேலும், மாநில அரசு இஸ்லாம் அல்லாத வழிப்பாட்டு தல நிதியம்(ரிமி) தொடங்கி வழிப்பாட்டு தலங்களில் மேம்பாடு அல்லது பராமரிப்புப் பணி, நிலம் வாங்குதல் என அனைத்திற்கும் நிதியுதவி வழங்குகிறது. எனவே, உதவிக்கோரும் ஆலயங்கள் முறையான ஆவணங்களுடன் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வில் காவல் துறை அதிகாரி டிஎஸ்பி சதாசிவம், மலேசிய இந்து சங்க தேசியச் செயலாளர் ஸ்ரீ காசி சங்க புஷன் கணேசன், மலேசிய இந்து சங்க  பினாங்கு மாநிலத் தலைவர் முனியாண்டி, முனீஸ்வரர் ஆலயத் தலைவர் டத்தோ கோபாலகிருஷ்ணன் மற்றும் இந்து சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

2017-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்து ஆலய மாநாடு, பொது மக்களுக்கு நெறியான இந்து ஆலய வழிப்பாடு, சமயம், கலை, கலாச்சாரத்தை அடுத்த தலைமுறைக்கு முறையாகக் கொண்டு செல்லும் வகையில் இம்மாநாடு ஒவ்வொரு மாநிலங்களிலும் நடத்தப்பட்டு இறுதியில் தேசிய ரீதியில் நடத்தப்படும்.