இந்தியர்களிடையே சிந்தனை மாற்றம் அவசியம் – பேராசிரியர்.

ஜாவி – “நம் நாட்டில் வாழும் இந்தியர்களிடையே சிந்தனை மாற்றம் மிக அவசியம்; எந்த ஒரு சூழ்நிலையிலும் யாரையும் சார்ந்திருக்கும் பழக்கம் நீங்கி சுயமாக விவேகமான முடிவுகளை எடுக்கவும் அதில் உறுதிக்கொண்டிருப்பதும் முக்கியம்”, என கலிடோனியா தோட்டத்தில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் வழங்கிய உரையில் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்தியர்கள் நன்மை தீமைகளை ஆராயாமல் பொறுப்பற்ற தரப்பினரின் கூற்றுகளுக்கு செவிச்சாய்ப்பதால் பல இன்னல்களை எதிர்நோக்குகின்றனர். இந்நிலை மாற வேண்டுமெனில் அவர்கள் எடுக்கும் முடிவினில் நிலையாக நின்று எக்காரியத்தையும் சாதித்துக் கொள்ள வேண்டும் என பிறை சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ப.இராமசாமி விவரித்தார்.

பொங்கல் கொண்டாட்டத்தில் கலிடோனியா தோட்ட மக்கள் கலந்து சிறப்பித்தனர்

தொடர்ந்து, கலிடோனியா தோட்டத்தில் கூடிய விரைவில் மேம்பாட்டுப் பணிகள் தொடரப்படும் என பேராசிரியர் சூளுரைத்தார். ஆலயத்தை மறுசீரமைப்புச் செய்தல், பொது மண்டபம் அமைத்தல் என முக்கிய பணிகள் விரைவில் மலரப்படும். ஒவ்வொரு மேம்பாட்டுப் பணிகளையும் மேற்கொள்ள அரசு நிர்ணயித்துள்ள சட்டத்திட்டங்களை பின்பற்ற வேண்டியுள்ளது.

எனவே, அனைவரும் ஒவ்வொரு திட்டத்தையும் அமல்படுத்தும் வரை பொறுமையுடன் இருக்க வேண்டும். மேலும், இந்த 12 ஆண்டுகளில் பினாங்கு மாநில அரசு இந்தியர்களின் நலனில் அக்கறைக் கொண்டு அரிய திட்டங்கள் வகுத்துள்ளதைப் பேராசிரியர் தமதுரையில் சுட்டிக்காட்டினார்.

கலிடோனியா தோட்டத்தில் பொங்கல் கொண்டாட்டம் தழிழர்களின் மரபினை நிலைநாட்டி கொண்டாடப்பட்டது. மூன்று கரும்புகளை பிரமிட் வடிவத்தில் நிறுத்தி அதில் மண் பானை வைத்து பொங்கல் கொண்டாடினர். மேலும், அத்தினத்தன்று சிறுவர்களுக்கு போட்டிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் வெற்றிப் பெற்ற சிறுவர்களுக்கு ஜாவி சட்டமன்ற உறுப்பினர் எங் மோய் லாய் பரிசுக்கூடை எடுத்து வழங்கினார். பொங்கல் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட அவர் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

இதனிடையே, பாகான் டாலாமில் புதிய தமிழ்ப்பள்ளி அமைக்கும் இலக்கு பல ஆண்டுகளாக திட்டத்தில் இருக்கிறது; இதனை அமல்படுத்த திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என பேராசிரியர் நம்பிக்கை தெரிவித்தார்.