ஜார்ச்டவுன் – பினாங்கு மாநிலத்தில் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்துவதையும், டிஜிட்டல் கல்வி அணுகலை விரிவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் தலைமையில் 100 மடிக்கணினிகளை மாணவர்களுக்கு வழங்கும் சிறப்பு திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

“இத்திட்டம் குறிப்பாக பி40 வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த முயற்சி, கல்வியில் சமத்துவத்தை உறுதிப்படுத்துவதோடு, தகவல் தொழில்நுட்பத் திறன்களை வளர்க்கும் ஒரு முக்கியமான படியாகக் கருதப்படுகிறது,” என 100 மடிக்கணினிகள் வழங்கும் விழாவில் செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் கூறினார்.

மேலும், இத்திட்டம் மூலம் மாணவர்கள் ஆன்லைன் கற்றல், ஆராய்ச்சி மற்றும் கல்வி சார்ந்த பணிகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்பதுடன், எதிர்காலத்தில் போட்டித்திறன் மிக்க தலைமுறையை உருவாக்கும் நோக்கத்தையும் கொண்டுள்ளது, என மேலும் தெரிவித்தார்.

இந்த மடிக்கணினிகள் அனைத்தும் மொத்தம் 200,000 ரிங்கிட் செலவில் வழங்கப்படவுள்ளதாகவும், இதற்கான அனைத்து நிதியுதவையும் அவர் ஏற்றுக்கொண்டதாகவும், தெரிவித்தார்.
முதல் முறையாக சிட்டி பேவியூ தங்கும் விடுதியில் அமைந்த மந்திரா உணவகத்தில் நடைபெற்ற விழாவில், 31 மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

இரண்டாவது முறையாக நடத்தப்பட்ட மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்ச்சியில் 20 மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.
ஜெயா கேத்தரிங் உணவக வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் கலந்து கொண்டு, இத்திட்டத்தை வரவேற்பதோடு செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரனின் முயற்சிகளையும் பாராட்டினார்.
கடந்த ஆண்டு 80 புதிய மடிக்கணினிகள் மாணவர்களுக்கு வெற்றிகரமாக விநியோகிக்கப்பட்டன.
அதிகரித்து வரும் மாணவர்களின் தேவைகளையும், வரவேற்பையும் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு மாணவர்களுக்கு 100 மடிக்கணினிகள் வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இனம் மற்றும் மதம் பேதமின்றி பினாங்கில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் இந்த மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு மாணவருக்கும் தங்கள் கல்வியில் வெற்றி பெற சம வாய்ப்பு வழங்கப்படுவதை உறுதி செய்வதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இத்திட்டத்திற்கு மாணவர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதோடு, பதிவு தொடங்கிய 72 மணி நேரத்திற்குள் மொத்தம் 352 மாணவர்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தனர். தீவிர பரிசீலனைக்குப் பிறகு, இந்த ஆண்டுக்கான 100 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.