ஜார்ச்டவுன் – 15-ஆவது மாநில சட்டமன்றத்தின் (DUN) நான்காவது பதவிக்காலத்தின் முதல் கூட்டம், 2026 மே 8ஆம் தேதி, இங்குள்ள லெபு லைட் அருகே அமைந்துள்ள மாநில சட்டமன்றக் கட்டிடத்தின் முன்புறத்தில் அதிகாரப்பூர்வ தொடக்க விழாவுடன் நடைபெற்றது.

இந்த விழா தேசியப் பண் மற்றும் மாநிலப் பண் பாடல்களுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, மாநில ஆளுநர் (TYT) துன் ரம்லி ங்கா தாலிப் அவர்களுக்கு பினாங்கு கூட்டரசு பாதுகாப்புப் படையின் (PSP) அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
பிரதான கூடாரத்தில் மாநில சட்டமன்ற சபாநாயகர் டத்தோ ஸ்ரீ லாய் சூ கியாங் மற்றும் அவரது துணைவியார், முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் மற்றும் அவரது துணைவியார், இரண்டாம் துணை முதலமைச்சர் ஜக்தீப் சிங் டியோ மற்றும் அவரது துணைவியார் மற்றும் மாநில அரசின் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், மாநில சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில செயலாளர் டத்தோ ஸ்ரீ சுல்கிஃப்லி லாங் மற்றும் மாநில நிதி அதிகாரி டத்தோ ஜைரி மாட் அலி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
தனது தொடக்க உரையில், மாநில ஆளுநர் துன் ரம்லி, அதிகரித்து வரும் சவாலான மற்றும் நிச்சயமற்ற உலகச் சூழலை எதிர்கொள்ள, உள்நாட்டு திறன்களையும் பொருளாதார மீள்திறனையும் வலுப்படுத்துவதில் மாநில அரசு தொடர்ந்து முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பல மூலோபாயப் பகுதிகளில், குறிப்பாக மத்திய கிழக்கில் நிலவும் பதற்றங்கள், உலகளாவிய சந்தையின் நிலைத்தன்மையில், குறிப்பாக எரிசக்தித் துறை மற்றும் விநியோகச் சங்கிலியில் தொடர்ச்சியான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.

“திறந்த பொருளாதாரக் கொள்கையைப் பின்பற்றும் நாடு என்பதால், இந்தச் சவால்களின் தாக்கத்திலிருந்து மலேசியாவும் விதிவிலக்கல்ல என்று அவர் தெரிவித்தார்.
“நாட்டின் சார்புநிலை இப்பகுதியை கணிசமாகச் சார்ந்துள்ளது. மேலும், ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் நாட்டின் எண்ணெய் இறக்குமதியில் சுமார் 61 சதவீதத்திற்கும், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) இறக்குமதியில் 30 சதவீதத்திற்கும், மற்றும் கச்சா எண்ணெய் ஓட்டத்தில் கிட்டத்தட்ட 40 சதவீதத்திற்கும் இது காரணமாக அமைகிறது,” என்று அவர் கூறினார்.
மேலும் கருத்து தெரிவித்த துன் ரம்லி, உலகளாவிய சவால்களை எதிர்கொண்டபோதிலும், மத்திய அரசின் தீர்க்கமான நடவடிக்கைகளின் விளைவாக நாட்டின் பொருளாதார அடிப்படைகள் வலுவாக நிலைத்திருப்பதற்கு நன்றித் தெரிவித்தார்.
“மலேசிய புள்ளியியல் துறை (DOSM) கணிப்புகளின்படி, 2026ஆம் ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி 4.0 முதல் 5.0 சதவீதம் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பணவீக்க விகிதம் 1.5 முதல் 2.5 சதவீதம் வரை மிதமான நிலையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது,” என்று அவர் கூறினார்.
“எனவே, பினாங்கு மாநில ஒரு பார்வையாளராக மட்டுமே செயல்பட முடியாது; மாறாக, இந்த மாநிலம் ஆற்றல் திறனில் கவனம் செலுத்தவும், உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்தவும், முறைமான மற்றும் தொலைநோக்குப் பார்வையுள்ள நிதி நிர்வாகத்தை உறுதி செய்யவும் வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.
பினாங்கு மாநில சட்டமன்றத்தின் நிலைப்பாடு மக்களால் தொடர்ந்து மதிக்கப்படும் வகையில், உண்மையான தகவல்களையும் ஆக்கப்பூர்வமான முன்மொழிவுகளையும் அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு, விவாத நெறிமுறைகளை எப்போதும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் அவர் வலியுறுத்தினார்.
“இந்த நிச்சயமற்ற சூழலில், உண்மைகளின் அடிப்படையில் இல்லாத அல்லது ஊகத்தின் அடிப்படையிலான எந்தவொரு கூற்றும் மக்களிடையே தேவையற்ற பதற்றத்தை மட்டுமே ஏற்படுத்தும்,” என்று அவர் தெரிவித்தார்.
“நாம் பேசும் பொருத்தமற்ற வார்த்தைகள் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்,” என்று அவர் தனது உரையில் அறிவுறுத்தினார்.
இதனிடையே, மாண்புமிகு மாநில ஆளுநரின் உரை மீதான விவாத அமர்வு 2026 மே,11 முதல் 15 வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது என அறியப்படுகிறது.