எம்.பி.எஸ்.பி  சூரிய சக்தி பயன்பாட்டைப் பரிந்துரைக்கிறது  

எம்.பி.எஸ்.பி  சூரிய சக்தி பயன்பாட்டைப் பரிந்துரைக்கிறது

செபராங் பிறை – செபராங் பிறை மாநகர் கழக (எம்.பி.எஸ்.பி) கட்டிடத்தில் இப்போது 40% புதுப்பிக்கத்தக்க சக்தியை சூரிய சக்தி பேனல்களில் இருந்து பயன்படுத்துகிறது.

அதன் மேயர் டத்தோ ரோசாலி மொஹமட், கார்பன் தடம் மற்றும் விவேக  நகர உருமாற்றம் திட்டத்தை நோக்கி செயல்படுவதில் கார்பன் பயன்பாட்டைக் குறைப்பதற்கான அதன் இலக்கை அடைய இக்கழகம் தொடர்ந்து உறுதிக்கொள்கிறது என்று கூறினார்.

அண்மையில் தொடங்கப்பட்ட பினாங்கு மாநகர் கழகத்தின்  வாகன நிறுத்துமிடத்தில் சோலார் முறை பயன்பாடு அக்கழகத்தின் கட்டணத்தைக் குறைக்க உதவுகிறது, என்றார்.

“நவம்பர்,8 ஆம் தேதி எம்.பி.எஸ்.பி மற்றும் Tetuan Pekat Solar Sdn Bhd தனியார் நிறுவனம் இடையிலான  மின் கொள்முதல் ஒப்பந்தம் உடன்படுக்கையில் அதன்  விலையை ரிம0.365 kWh  என  நிலைநிறுத்தப்பட்டதாக இக்கழகம்  உறுதிசெய்கிறது.

“அடுத்த 15 ஆண்டுகளுக்கு இந்த நிலையான கட்டணம் நிர்ணயிக்கப்படும்.  அதே வேளையில், இந்த கழகத்தின் இம்முயற்சியின் மூலம் ஒரு வருடத்திற்கு  ரிம38,148.30 செலவினத்தை குறைக்க முடிகிறது.

“நன்கு புகழ்ப்பெற்ற Tetuan Pekat Solar தனியார் நிறுவனம் இத்திட்டம் செயல்படுத்த எங்களுக்கு சிறந்த சலுகையை வழங்கியுள்ளது.

“அடுத்த ஆண்டுக்குள் செபராங் பிறை குறைந்த கார்பன் நகரமாக உருமாற்றம் காண்பதில் உறுதிகொள்கிறது,” என்று அவர் பண்டார் பெர்டாவில் உள்ள எம்.பி.எஸ்.பி தலைமையகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு  கூறினார்.

இந்த மின்சார கொள்முதல் ஒப்பந்தத்தின் மூலம் பொதுமக்களும் பயனடைவார்கள் என்று ரோசாலி
மேலும் கூறினார்.

“அவர்கள் இலவச இணைய சேவை மற்றும் அவர்கள் எம்.பி.எஸ்.பி கட்டிடத்தில் இருக்கும்போது அவர்களின் மின்சார சாதனங்களை  இலவசமாக மின்னுட்டல் செய்ய முடியும்,” என்று அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியின் துவக்க விழாவின் போது கலந்து கொண்ட மாநில உள்ளாட்சி, வீட்டுவசதி, நகர்ப்புற மற்றும் கிராமப்புற திட்டமிடல் ஆட்சிக்குழுத் தலைவர் ஜெக்டிப் சிங் டியோ, எம்.பி.எஸ்.பி-யின் முயற்சியினைப் பாராட்டினார்.

பசுமையான நகரமாக உருமாற்றம் காணும் அதன் நோக்கத்தை அடைய சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதால், இது இக்கழகத்திற்கு ஒரு முக்கியமான மையல்கல்லாகத் திகழ்கிறது, என்றார்.

“இது  பெருநிலத்தில் வாழும் மக்களுக்கு முக்கிய சாதனையாக அமைகிறது.

எதிர்காலத்தில் அனைத்து அரசாங்க பொது வசதிகளிலும் சூரிய சக்தி முறையைப் பயன்படுத்த முடியும்.  எம்.பி.எஸ்.பி தொடர்ந்து மக்களுக்கு சிறந்ததை வழங்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்,” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

முன்னதாக எம்.பி.எஸ்.பி  கடந்த 2019-இல் தேசிய மின்சார வாரியம் (தி.என்.பி) மற்றும் GSPARX தனியார் நிறுவனத்துடன் உடன் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (SARE) திட்டத்திற்கான விநியோக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

சூரிய சக்தி பேனல்கள் எம்.பி.எஸ்.பி அலுவலகக் கட்டிடம், ஜாலான் பெதெக்கில் உள்ள எம்.பி.எஸ்.பி விளையாட்டு வளாகம் மற்றும் பெர்தாம், கேபாலா பத்தாஸில் உள்ள எம்.பி.எஸ்.பி விளையாட்டு வளாகம் ஆகியவற்றில் நிறுவப்பட்டுள்ளன.

மற்றொரு வளர்ச்சியில், பினாங்கு தேசிய மீட்சித் திட்டத்தின் (NRP) நான்காம் கட்டத்திற்குள் நுழைந்தப் பிறகு, எம்.பி.எஸ்.பி செபராங் பிறைக்கான செயல் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.

பொதுச் சந்தைகள், நடைபாதை வளாகம்,இரவுச் சந்தை, காலை சந்தை, நடமாடும் உணவு வாகனம், பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் அடுக்குமாடி கட்டிடங்கள் ஆகியவற்றில் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக  நடைமுறைகள் (எஸ்.ஓ.பி) தொடர்ந்து கண்காணிக்கப்படும், என்று ரோசாலி கூறினார்.