பிறை – ஐந்தாம் படிவம் பயிலும் மாணவர்கள் மற்றும் மலேசிய கல்விச் சான்றிதழ் (எஸ்.பி.எம்) முடிவுகள் பெற்ற மாணவர்களுக்கு எதிர்கால கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகளுக்கு தயார்ப்படுத்தும் நோக்கில் அகாடமி மற்றும் உயர்கல்வி வழிகாட்டி பட்டறை நடத்தப்பட்டது.

“இந்தப் பட்டறை மாணவர்களுக்கு கல்வி திட்டமிடல், பல்கலைக்கழக தேர்வுகள், உயர்கல்வி தேர்வு மற்றும் மேம்பட்ட கற்றல் நெறிகள் போன்ற முக்கிய அம்சங்களில் வழிகாட்டுகிறது.
“பட்டறையில் மாணவர்கள் தங்களது கல்வி இலக்குகளை தெளிவுபடுத்தி, முன்னேற்றம் அடைவதற்கான வழிகாட்டியாகவும் சமூக மற்றும் தொழில் சூழலில் வெற்றிபெறுவதற்கான வழிகாட்டல்களைப் பெறுவதும் முக்கிய அம்சமாக இடம்பெற்றது.

பிறை எம்.பி.கே.கே ஏற்பாட்டில் நடைபெற்ற அகாடமி மற்றும் உயர்கல்வி வழிகாட்டி பட்டறையை வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு தொடக்கி வைத்தார்.

இளைஞர் மேம்பாட்டு முயற்சிகளுக்குத் தனது ஆதரவையும், எதிர்காலத்தின் அடித்தளமாகக் கல்வி விளங்குவதன் முக்கியத்துவத்தையும் அவர் மேற்கோள் காட்டிப் பேசினார்.
இந்தப் பட்டறையில் டாக்டர் புனிதன் மற்றும் டாக்டர் சஞ்சய் ஆகியோருடனான கலந்துரையாடல் அமர்வுகள் இடம்பெற்றன.
மேலும் இந்த நிகழ்ச்சி வெற்றி பெற APPGMSDG மற்றும் Yayasan Hasanah முழு ஆதரவு வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
இத்திட்டத்தில், 200 இளைஞர்கள், குறிப்பாக எஸ்.பி.எம் மாணவர்கள் தங்களின் கல்வி மற்றும் தொழில் பாதைகளைத் திட்டமிடுவதற்குப் பயனளித்தது, என எம்.பி.கே.கே பிறை தலைவர் ஸ்ரீ சங்கர் தெரிவித்தார்.
அடுத்து, எஸ்.பி.எம் தேர்வில் பின்தங்கிய மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டலை வழங்கும் வகையில் பட்டறை நடத்த திட்டமிட்டுள்ளதாக ஸ்ரீ சங்கர் தெரிவித்தார்.
மேலும், எம்.பி.கே.கே பிறை தலைமையில் நடைபெறும் முதல் கல்வி வழிகாட்டி பட்டறை இதுவாகும் என்றும், தொடர்ந்து கல்வி சார்ந்த திட்டங்களை ஏற்று வழிநடத்த இணக்கம் கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.