எஸ்.பி.எஸ் மாவட்டத்தில் மிகப் பெரிய விளையாட்டு மையம் நிர்மாணிப்பு

Admin

ஜாவி – மாநில அரசு பினாங்கின் தீவு மற்றும் பெருநிலப் பகுதியின் வளர்ச்சியை சமச்சீர் செய்ய உத்வேகம் கொள்கிறது. பினாங்கின் எதிர்காலம் செபராங் பிறை பகுதியை நோக்கி பயணிக்கிறது. மாநில அரசு இம்மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு செபராங் பிறை ஒரு திறவுக்கோளாக இருப்பதை உறுதிசெய்ய தொடர்ந்து பணியாற்ற உறுதிபூண்டுள்ளது.

1,808 ஏக்கர் அல்லது 7316.72 சதுர மீட்டர் பரப்பளவில் ஜே.கே.ஆர் (JKR) இன் பழைய குடியிருப்பின் அரசுக்கு சொந்தமான நிலத்தில், பூப்பந்து மைதானம் மற்றும் பல்நோக்கு அரங்கம் நிர்மாணிக்கும் திட்டம் தெற்கு செபராங் பிறை (எஸ்.பி.எஸ்) வளர்ச்சிக்கு மையக்கல்லாக அமைகிறது.

மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ் செபராங் பிறை அரேனா அடிக்கல் நாட்டு விழாவை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து இவ்வாறு தெரிவித்தார்.

நிபோங் திபால் அரேனா என அறியப்படும் செபராங் பிறையின் மிகப்பெரிய விளையாட்டு மையத்தின் கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு
முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் விளையாட்டு மற்றும் இளைஞர் ஆட்சிக்குழு உறுப்பினர் சூன் லிப் சீ; ஜாவி சட்டமன்ற உறுப்பினர் ஜெசன் எங் மோய் லாய்; பினாங்கு அரங்கம் & பொழுதுப் போக்கு தல கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குநர் ஜூல் கஹர் பின் காமிஸ்; செபராங் பிறை மாநகர் மேயர் டத்தோ அசார் அர்ஷாத் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இத்திட்டம் ரிம8.78 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் ஒன்பது பூப்பந்து மைதானங்கள் மற்றும் பல்நோக்கு அரங்கம் அமைக்கப்படும்.

இருப்பினும், இந்த மைதானத்தில் பூப்பந்து மட்டுமின்றி கூடைப்பந்து, சிலாட், செபக் தக்ரா, மேசைப்பந்தாட்டம் (பிங் பாங்), கராத்தே, வுஷு மற்றும் பல விளையாட்டுகளுக்கும் பயன்படுத்தலாம்.

நிபோங் திபால் அரங்க மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைந்தவுடன், செபராங் பிறை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் பொருளாதாரம் மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட இந்த விளையாட்டு மையம் முக்கியப் பங்காற்றும்.

“எனவே, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளை ஏற்று நடத்துவது தவிர, திருமண வைபவங்கள், கூட்டங்கள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகளை ஏற்பாடு செய்ய பொதுமக்கள் இந்தப் பல்நோக்கு மண்டபத்தைப் பயன்படுத்தலாம்.

“இந்த திட்டம் செபராங் பிறை சமூகத்திற்கு வழங்கப்படும் பொது உள்கட்டமைகளில் ஒன்றாகும். இது மக்களுக்கு நன்மைகளை கொண்டு வரும்,” என்று அவர் கூறினார்.