கல்வி வளர்ச்சிக்கு பினாங்கு அரசு தொடர்ந்து ஆதரவு – முதலமைச்சர்

Admin
img 20261120 wa0049

 

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநிலத்தில் அனைத்து மாணவர்களுக்கும் சமமான கல்வி வாய்ப்புகளை உறுதிப்படுத்தும் நோக்கில், 2026ஆம் ஆண்டுக்கான மாநில அரசின் உபகாரச் சம்பளத் திட்டத்தின் கீழ், 1,000 மாணவர்களுக்கு மொத்தம் ரிம684,720 நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் தெரிவித்தார்.

கடந்த 2025ஆம் ஆண்டில், 112 இடைநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 1,344 மாணவர்களுக்கு மொத்தம் ரிம926,160 உபகாரச் சம்பளமாக வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.

இந்த ஆண்டு 110 பள்ளிகளைச் சேர்ந்த 1,000 புதிய மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம் வழங்கப்படுவதாகவும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு சுமார் 26 விழுக்காடு குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை வழங்கல் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, மாநில அரசின் நிதி உதவியை உண்மையிலேயே தேவைப்படும் மாணவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் வகையில் இந்த ஒதுக்கீடு மறுசீரமைக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கமளித்தார்.

மாவட்ட வாரியான ஒதுக்கீட்டின்படி, வடகிழக்கு மாவட்டத்தில் 28 பள்ளிகளைச் சேர்ந்த 150 மாணவர்களுக்கு ரிம104,400 வழங்கப்பட்டுள்ளது. தென்மேற்கு மாவட்டத்தில் ஒன்பது பள்ளிகளைச் சேர்ந்த 120 மாணவர்களுக்கு ரிம81,240 ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், வட செபராங் பிறை மாவட்டத்தில் 28 பள்ளிகளைச் சேர்ந்த 270 மாணவர்களுக்கு ரிம185,760, மத்திய செபராங் பிறை மாவட்டத்தில் 29 பள்ளிகளைச் சேர்ந்த 243 மாணவர்களுக்கு ரிம165,960, தென் செபராங் பிறை மாவட்டத்தில் 16 பள்ளிகளைச் சேர்ந்த 212 மாணவர்களுக்கு ரிம147,360 ஒதுக்கப்பட்டுள்ளது.

பினாங்கு2030 தொலைநோக்குத் திட்டத்திற்கு ஏற்ப, தரமான மற்றும் போட்டித்திறன் மிக்க மனித வளத்தை உருவாக்குவதில் மாநில அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்ட அவர், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் மின்னணுத் தொழில்நுட்பங்கள் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் இக்காலகட்டத்தில், எதிர்காலச் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களின் அறிவாற்றலும் திறன்களும் மேம்படுத்தப்பட வேண்டியது அவசியம், என்றார்.

இதற்காக, பொருளாதாரச் சுமைகள் மாணவர்கள் கல்வியைத் தொடர்வதற்குத் தடையாக இருக்கக்கூடாது என்பதில் மாநில அரசு உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், உயர்கல்வி நிறுவனங்களில் தொடரும் மாணவர்களின் ஆரம்பச் செலவுகளைக் குறைக்கும் நோக்கில், மாநில அரசு IBITA கல்வி உதவித் திட்டத்தையும் தொடர்ந்து செயல்படுத்தி வருவதாக அவர் கூறினார்.

இத்திட்டத்தின் கீழ், தீபகற்ப மலேசியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களுக்கு ரிம1,000, சபா மற்றும் சரவாக் மாநிலங்களில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களுக்கு ரிம1,200, கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு ரிம300 வழங்கப்படுகிறது.

கடந்த 2025ஆம் ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் 3,863 மாணவர்களுக்கு மொத்தம் ரிம3.8 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டதாகவும், 2026ஆம் ஆண்டில் இதுவரை 4,144 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அவற்றைச் சரிபார்த்து ஒப்புதல் வழங்கும் பணிகள் மாவட்ட அலுவலகங்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த உபகாரச் சம்பளத் திட்டம் மற்றும் IBITA உதவித் திட்டம் ஆகியவற்றின் மூலம் தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை மாணவர்களுக்குத் தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதே மாநில அரசின் நோக்கமாகும், என்றார்.

இதற்கிடையில், மாணவர்களின் கல்வி வெற்றியில் பெற்றோரின் தியாகமும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பும் முக்கியப் பங்கு வகிப்பதாகக் குறிப்பிட்ட முதலமைச்சர், மாணவர்களின் எதிர்காலத்தைச் செம்மைப்படுத்தி வழிநடத்தும் கல்வியாளர்கள், குறிப்பாகப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குத் தனது நன்றியைத் தெரிவித்தார்.

img 20261120 wa0037

மாநில அரசின் உபகாரச் சம்பளத்தைப் பெறும் மாணவர்கள் அதனைச் சிறந்த முறையில் பயன்படுத்தி, கல்வியில் தொடர்ந்து முன்னேறி, அறிவாற்றல், நேர்மை மற்றும் போட்டித்திறன் கொண்ட இளம் தலைமுறையினராக உருவாக வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

“இன்று மாணவர்களுக்கு வழங்கப்படும் ஒவ்வோர் உதவியும் அவர்களின் எதிர்காலத்திற்கான முதலீடாகும். அவர்களின் வெற்றி குடும்பத்திற்குப் பெருமை சேர்ப்பதுடன், பினாங்கு மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சிக்கும் முக்கியப் பங்களிப்பாக அமையும்,” என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், பெங்காலான் கோத்தா சட்டமன்ற உறுப்பினர் வோங் இயூ ஹார்ங், மாநிலக் கல்வித் துறையின் மாணவர் மேம்பாட்டுப் பிரிவுத் துணை இயக்குநர் ஃபட்சில் சாதிக்கின் உள்ளிட்ட முக்கியப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.