கோவிட்-19ஐ எதிர்க்க மாநில பாதுகாப்புக் குழுவின் தலைவராக மாநில முதல்வர் நியமனம்

Admin

 

ஜார்ச்டவுன் – பிரதமர் தலைமையிலான கோவிட்-19ஐ குறித்த தேசிய பாதுகாப்புக் கவுன்சில் சிறப்பு அமர்வில் சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக இன்று கொம்தாரில் நடைப்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் அறிவிப்புச் செய்தார்.

முதலாவதாக, ஒவ்வொரு மாநிலத்தின் முதல்வர் அல்லது மந்திரி பெசார் மாநில பாதுகாப்புக் குழுவின் தலைவர்களாக நியமிக்கப்படுகிறார்கள், இது மாநில அளவில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்துவதற்கான பிரதான குழுவாக செயல்படும்.

நடமாட்டக் கட்டுபாட்டு உத்தரவுகளுக்கு பொதுமக்கள் இணங்குவதை உறுதிச் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க அமலாக்கப் பிரிவை வழிநடத்தும் அதிகாரம் இந்த சிறப்பு செயற்குழுவின் தலைவருக்கு உள்ளது.

இரண்டாவதாக, அத்தியாவசிய சேவைகள் பிரிவில் இல்லாத அனைத்து தொழிற்சாலைகளும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு ஏற்ப மூடப்பட வேண்டும் என்று பிரதமர் ஒப்புக்கொண்டுள்ளார்.

எனவே, சம்பந்தப்பட்ட பட்டியலில் இல்லாத தொழிற்சாலைகள் அனைவரின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வழங்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்குமாறு மாநில முதல்வர் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பரிந்துரைத்தார்.

“தேவைப்பட்டால், இந்த இணக்கத்திற்கு எதிராக செயல்படும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசு தயங்காது,” என்றார்.

மூன்றாவதாக, மருத்துவ உபகரணங்கள் போதுமானதாக இருப்பதை உறுதிப்படுத்த மலேசியா சுகாதார அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

நான்காவதாக,முகக்கவசம் பொறுத்தவரை, உள்நாட்டு வர்த்தக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சு, உள்ளூர் தொழிற்சாலைகள் போதுமான முகக்கவசங்கள் வழங்குவதை உறுதிச் செய்யும் என்றும், முன்னதாக பொருட்கள் ஏற்றுமதி செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதை பிரதமர் சுட்டிக்காட்டினார். மத்திய அரசும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்ய தக்க நடவடிக்கை எடுக்கும்.

முகக்கவசம் பற்றாக்குறை பொதுமக்களுக்கு கவலை அளிப்பது குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட கருத்துக்களை மத்திய அரசு வலியுறுத்தினாலும், பினாங்கு மக்களின் பயன்பாட்டிற்காக முகக்கவசத்தைப் பெற மாநில அரசும் எல்லா முயற்சிகளையும் செயல்படுத்தும். முகக்கவசம் விநியோகத்தைப் பெற முடிந்தால் உடனடியாக பினாங்கு மக்களுக்கு அறிவிப்பு செய்யப்படும் என மாநில முதல்வர் குறிப்பிட்டார்.

தற்போதைய நிலவரப்படி, வீட்டிலேயே இருக்கவும், வீட்டிற்கு வெளியே நடமாட்டத்தைக் குறைக்குமாறு மாநில முதல்வர் கோரிக்கை விடுத்தார். நீங்கள் அத்தியாவசிய சேவைகள் அல்லது அத்தியாவசிய சேவைகளில், உணவு மற்றும் அடிப்படை தேவைகளுக்காக அல்லது உயிருக்கு ஆபத்தான காரணிகளில் ஈடுபட்டிருந்தால் மட்டுமே வீட்டை விட்டு வெளியேறுங்கள். இந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் போது நடைபயிற்சி, ஷாப்பிங், சுற்றித் திரிதல் அல்லது பொது இடங்களில் விளையாட்டு போன்ற சமூக நடவடிக்கைகள் அனைத்தும் தடைசெய்யப்பட்டுள்ளன.

“இதனிடையே, தீவில் சந்தையில் ஏற்படும் நெரிசல் குறித்து இன்று காலை எனக்குக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, பினாங்கு மாநகர் கழகம் (எம்.பி.பி.பி) ஆயிர் ஈத்தாம் சந்தை, பாயான் பாரு சந்தை, ஜாலான் பேராக் சந்தை மற்றும் ஜெலுதோங் சந்தை (காய்கறி வியாபாரிகளை தவிர) பிற வியாபாரிகள் (வீதி உணவுக் கடை வியாபாரி உட்பட) ஆகியோர் நாளை (22 மார்ச் 2020) தொடங்கி கடைகளை மூட வேண்டும்.

மேலும், பினாங்கு நீர் விநியோக வாரியம் (பி.பி.ஏ) சார்பாக, இந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் காலத்தில் நீர் மீட்டர் வாசிப்பு எதுவும் நடத்தப்படாது, எல்லா சந்தர்ப்பங்களிலும், இணையத்தள முறையைப் (ஆன்லைன்) பயன்படுத்துவது நல்லது.

தொடர்ந்து, உண்மையான மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ ‘சேனல்களை’ அணுகவும். சமூக ஊடக தளங்களுக்கு, மாநில முதல்வரின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கமான https://www.facebook.com/ChowKonYeow/ அல்லது COVID-19 இன் பினாங்கு பிரச்சாரப் பக்கமான www.facebook.com/penanglawancovid19-ஐப் பார்க்கவும்; வலைத்தளம், www.PenangLawanCovid19.com. ஹாட்லைனில் உள்ள பினாங்கு மாநில அரசின் சிறப்பு பணிக்குழு COVID-19 இயக்க அறையை 04 – 262 1207/04 – 262 1819 என்ற எண்களில் தொடர்புக் கொள்ளுங்கள், தினமும் 24 மணிநேரமும் இயங்குகிறது.

பினாங்கில் கோவிட்-ஐ எதிர்ப்போம்!