சி.எஸ்.ஆர் திட்டங்கள் சமூக மேம்பாட்டுக்கு துணைபுரிகிறது- பேராசிரியர்

நேஷன்கேட் சொலுஷன் கூட்டமைப்பு நிறுவன சமூக பொறுப்பு (சி.எஸ்.ஆர்) திட்டத்தின் மூலம்  பினாங்கு மாநில சமூக மேம்பாட்டுக்கு 2015-ஆம் ஆண்டு  முதல் ரிம1,327,497 பங்களித்துள்ளது.

“நேஷன்கேட் நிறுவனம் இத்திட்டத்தின் மூலம் கல்வி மையங்கள், பள்ளிக்கூடங்கள் மற்றும் சுகாதாரப் பாதுகாப்புக்கு உதவ நன்கொடைகள் வழங்குகிறது. மேலும், சமூகத்தில் வசதிக் குறைந்த தரப்பினருக்கு உதவிகள் சென்றடைவதையும் உறுதிப்படுத்துகிறது. 

“கோவிட்-19 தொற்றுநோய் பரவலின் தொடக்கத்திலிருந்து, நம் வாழ்க்கை முறையில் பல மாற்றங்கள் ஏற்பட்டு புதிய இயல்பில் பயணிக்கிறோம். நாமும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் போல் புதிய கற்றல் மற்றும்  கற்பித்தல் முறைகளை ஏற்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். 

“2021-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நேஷன் கேட்  சி.எஸ்.ஆர் திட்டத்தின் கீழ் ரிம38,935 மதிக்கத்தக்க 103 மடிக்கணினிகளை மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி, நிபோங் திபால் தமிழ்ப்பள்ளி மற்றும்  மேலும் ஏழு தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த

தகுதி பெற்ற மாணவர்களுக்கு வழங்கியுள்ளது. இம்மாதிரியான சமூக பங்களிப்பு திட்டங்களில் பிற பெருநிறுவனங்களும் பங்களிப்பு அளிக்க வேண்டும்,” என இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி கேட்டுக் கொண்டார்.

“சில மாணவர்களுக்கு வீட்டில் கணினிகள் இல்லாமையால், மாணவர்கள் இணைய வழி
கல்வியைத் தொடர கடினமாக இருப்பதை அறிய முடிகிறது. எனவே,  இந்த மாணவர்களின் சுமையை எளிதாக்க விரும்புவதோடு, அவர்கள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க உதவ வேண்டும்,” என நேஷன் கேட் தலைமை நிர்வாக அதிகாரி உய் எங் லியோங் தமதுரையில் குறிப்பிட்டார்.

நேஷன் கேட் தொடர்ந்து இம்மாதிரியான திட்டங்களை முன்னெடுத்து, சமூக பொறுப்புணர்வு முயற்சிகளில் முன்னணியில் இருப்பதோடு மற்ற மலேசிய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ஒரு சிறந்த முன்மாதிரியாக இருக்க வேண்டும். ஒவ்வொரு நிறுவனமும் சேர்ந்து சமுதாயத்திற்காக தங்கள் பங்கை வழங்குவதன் மூலம், சிறு துளி பெருவெள்ளம்  என்பதற்கு ஏற்ப மிக பெரிய பங்களிப்பிற்கு வழிவகுக்கும். எனவே, நேஷன் கேட் பினாங்கு மாநிலத்தின் மேம்பாட்டிற்கான சமூகப்பணியைத் தொடர்ந்து செயல்பட வழி வகுக்க வேண்டும் என நம்பிக்கைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் இளைஞர் மற்றும் விளையாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் சூன் லிப் சீ மற்றும் ஜாவி சட்டமன்ற உறுப்பினர் ஜெசன் எங் மொய் லாய் கலந்து சிறப்பித்தனர்.