சுக்மாவில் வெற்றி வாகைச் சூட போட்டியாளர்களுக்கு மிதிவண்டிகள் அன்பளிப்பு

Admin

ஜார்ச்டவுன் – அடுத்த ஆண்டு சரவாக் மாநிலத்தில் நடைபெறவிருக்கும் சுக்மா போட்டியில் மிதிவண்டி ஓட்டும் போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்களுக்கு
RK South Asia சென் பெர்ஹாட் எனும் உள்ளூர் நிறுவனம் மிதிவண்டிகளை அன்பளிப்பாக வழங்கியது.

இந்த நிறுவனம் விளையாட்டு வீரர்கள் பயன்படுத்துவதற்காக மொத்தம் ஐந்து மிதிவண்டிகளை பினாங்கு மிதிவண்டி ஓட்ட சங்கத்திற்கு வழங்கியுள்ளது.

மாநில இளைஞர் மற்றும் விளையாட்டு ஆட்சிக்குழு தலைவர் சூன் லிப் சீ
மாநில அரசுடன் ஒன்றிணைந்து பினாங்கு மாநில விளையாட்டுத் துறையின் தரத்தை மேம்படுத்த RK South Asia நிறுவனம் அளித்த ஆதரவைப் பாராட்டினார்.

“விளையாட்டுத் துறையை மேம்படுத்துவதற்கு அதிகமான நிதி ஒதுக்கீடு தேவைப்படுகிறது. எனவே, மாநில அரசு, அரசு சாரா நிறுவனங்கள், பெருநிறுவனங்கள் என அனைத்து தரப்பினரிடமும் இருந்து உதவி மற்றும் ஆதரவை வரவேற்பதாகத் தெரிவித்தார்.

“கடந்த ஆண்டு சுக்மாவில், பினாங்கு மிதிவண்டி வீராங்கனை நூருல் அலியானா ஷாப்பிக்கா ‘Women’s Sprint, Women’s Time Trial (500மீ) மற்றும் Women’s Keirin’ ஆகிய போட்டிகளில் மூன்று வெள்ளிப் பதக்கங்களை வென்றார்,” என்று மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் சூன் இவ்வாறு கூறினார்.

கடந்த 20வது சுக்மாவுக்கு முன், பினாங்கு மாநிலம் கடைசியாக 16 ஆண்டுகளுக்கு முன்பு தான் மிதிவண்டி ஓட்டும் போட்டியில் பதக்கம் வென்றதாகச் செய்தியாளர்கள் சந்திப்பில் பகிர்ந்து கொண்டார்.

“இந்தச் சாதனையை 16 ஆண்டுகளுக்குப் பிறகு பினாங்கு மாநில சுக்மா மிதிவண்டி ஓட்டும் போட்டியாளர்கள் அடைந்துள்ளனர்.

“எனவே, எங்கள் மிதிவண்டி ஓட்டுநர்கள் RK South Asia நிறுவனப் பங்களிப்பின் மூலம் பயனடைய முடியும். மேலும், கூடுதலானப் பதக்கங்களை வெல்வதற்கும், மாநிலத்திற்கு பெருமை சேர்க்கவும் அவர்களை ஊக்குவிக்கும்,” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இதற்கிடையில், RK South Asia நிறுவன நிர்வாக இயக்குனர் டத்தோ லீ தியன் சாய் கூறுகையில், இந்நிறுவனம் அன்பளிப்பாக வழங்கும் அனைத்து மிதிவண்டிகளும் இலகுவான மற்றும் வேகமான ‘Battle Surmo-Co’ மாடல் ஆகும்.

“இந்த மிதிவண்டிகள் எந்தவொரு போட்டியிலும் பயன்படுத்த ஏற்றது. அவை ஐரோப்பிய மிதிவண்டிகள் போன்ற தரத்தையும் பூர்த்திச் செய்கின்றன.

“RK South Asia நிறுவனம் தனது
பெருநிறுவன சமூக பொறுப்பு (சி.எஸ்.ஆர்) திட்டத்தின் மூலம் நமது நாட்டு விளையாட்டு வளர்ச்சிக்கு ஆதரவளிக்கிறது,” என்று லீ கூறினார்.

பினாங்கு மாநில விளையாட்டு கவுன்சில் (எம்.எஸ்.என்.பி.பி) இயக்குனர் ஹாரி சாய் ஹெங் ஹுவா கூறுகையில், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப சில விளையாட்டு உபகரணங்களின் தரத்தையும் காலத்திற்கு ஏற்ப மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது, என்றார்.

மேலும், இந்நிகழ்ச்சியில் பினாங்கு மிதிவண்டி ஓட்டும் சங்கச் செயலாளர் முனீர் முகமது இஸ்மாயில் கலந்து கொண்டார்.