ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசு, மாநிலத்தில் உள்ள 28 தமிழ்ப்பள்ளிகளுக்கும் ரிம2.42 மில்லியன் நிதியை ஒதுக்கீடு செய்வதன் மூலம், மாணவர்களின் கல்வி வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டுள்ளது. இந்நிதி ஒதுக்கீடு பள்ளி பொது வசதிகளை மேம்படுத்துதல், டிஜிட்டல்மயமாக்கல் திட்டங்களை விரிவுபடுத்துதல் மற்றும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) திறன்களை மேம்படுத்த துணைபுரிகிறது.

மேலும், திறன் மேம்பாடு மற்றும் தரமான கல்வி மூலம் மக்களுக்கு அதிகாரமளித்தலை வலியுறுத்தும் பினாங்கு2030 தொலைநோக்குப் பார்வையுடன் இந்த முன்முயற்சி திட்டம் அமைகிறது என மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் தெரிவித்தார்.
கல்வி என்பது ஒவ்வொரு குழந்தையின் அடிப்படை உரிமை என்ற கொள்கையை மாநில அரசு வலியுறுத்துகிறது. தமிழ்ப்பள்ளி மாணவர்கள் உட்பட அனைத்து மாணவர்களும் மாநிலத்தின் எதிர்கால முன்னேற்றத்திற்கு முக்கிய பங்காற்றும் ஆற்றல் மிக்க தலைமுறையாக உருவாக வேண்டும்.

மாநில முதலமைச்சர், 2026-ஆம் ஆண்டுக்கான வருடாந்திர தமிழ்ப்பள்ளிகள், பாலர்பள்ளிகள், பஞ்சாபி மற்றும் தெலுங்கு கல்வி மையங்களுக்கு நிதி ஒதுக்கீடு வழங்கும் நிகழ்ச்சியில் இதனைத் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் இரண்டாம் துணை முதலமைச்சர் ஜக்தீப் சிங் டியோ, வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினரும் தமிழ்ப்பள்ளிகளுக்கான சிறப்புக் குழுத் தலைவருமான டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ, உள்ளாட்சி, நகரம் மற்றும் புறநகர் திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜேசன் ஹெங் மூய் லாய் மற்றும் மாநில சட்டமன்றத்தின் துணை சபாநாயகர் டத்தோ அஸ்ருல் மகாதீர் அஜீஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மேலும், பாகான் டாலாம் மாநில சட்டமன்ற உறுப்பினர் குமரன், பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன், பாகான் ஜெர்மால் சட்டமன்ற உறுப்பினர் சீ யீ கீன் ஆகியோருடன் தமிழ்ப்பள்ளிகளுக்கான சிறப்புக் குழு உறுப்பினர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிரமுகர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.

மேலும் கருத்து தெரிவித்த கொன் இயோவ், மொத்த ஒதுக்கீட்டில் இருந்து ரிம768,901 தொகை 28 தமிழ்ப்பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் சங்கங்களுக்கு (PIBG) வழங்கப்பட்டதாக தெரிவித்தார். இதன் மூலம் பள்ளிகளில் தேவையான பராமரிப்பு மற்றும் வசதிகள் மேம்படுத்தப்படுவதோடு, மாணவர்களுக்கு சிறந்த கற்றல் சூழல் உருவாக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

“மேலும், மனித மூலதன மேம்பாட்டிற்கான ஆரம்ப முதலீடாக 11 தமிழ்ப்பள்ளி பாலர்பள்ளிகளுக்கு ரிம194,400 ஒதுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், உள்கட்டமைப்பு, டிஜிட்டல் கல்வியறிவு மற்றும் STEM திறன்களை வலுப்படுத்த பினாங்கு கல்வி மன்றத்திற்கு (PEC) ரிம1.336 மில்லியன் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், மூன்று பஞ்சாபி கல்வி மையங்களுக்கு ரிம120,000 மற்றும் தெலுங்கு சங்கத்திற்கு ரிம30,000 வழங்கப்பட்டுள்ளது,” என்று அவர் விளக்கமளித்தார்.

இதற்கிடையில், இராஜாஜி மற்றும் பைராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி உள்ளிட்ட புதிய கட்டிட கட்டுமானத் திட்டங்களையும் மாநில அரசு தற்போது தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும், அத்துடன் பத்து காவான் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் இடத்தை தயார் செய்வதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இன்றைய கல்விச் சவால்களுக்குத் தயாராகும் வகையில், ஒவ்வொரு தமிழ்ப்பள்ளிகளிலும் ஸ்மார்ட் போர்டு வசதிகள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பொருத்துவதற்கான முன்முயற்சிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.
“தாய்மொழியில் தேர்ச்சி பெறுவது மட்டுமல்லாமல், தொழில்நுட்பம் மற்றும் உலகளாவிய புத்தாக்கத் துறையிலும் போட்டித்தன்மை வாய்ந்த ஒரு தலைமுறையை நாங்கள் உருவாக்க விரும்புகிறோம்,” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்
முன்னதாக, சுந்தராஜு தனது வரவேற்புரையில், மாநிலம் முழுவதும் உள்ள தமிழ்ப்பள்ளிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். குறிப்பாக, மாணவர்களின் கற்றல் சூழலை மேம்படுத்தும் வகையில் பழைய நாற்காலிகள் மற்றும் மேசைகளை மாற்றும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
“அடுத்த ஆண்டு (2027), மாநிலத்திலுள்ள அனைத்து தமிழ்ப்பள்ளிகளிலும் வழிபாட்டுத் தலங்கள் அமைக்கப்படுவதுடன், அனைத்துப் பள்ளிகளிலும் புதிய நாற்காலிகள் மற்றும் மேசைகளும் வழங்கப்பட்டிருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
அனைத்து தரப்பினரின் ஒருங்கிணைப்பின் மூலம், எதிர்காலத்தில் தமிழ்ப்பள்ளிகள் தங்களுக்கென சொந்த நிலத்தைப் பெறும் என்பதில் நம்பிக்கை கொள்கிறேன்.
மேலும், கல்வி மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சியைத் தொடர்ந்து உறுதி செய்ய, ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கம் (PIBG) மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு (LPS) உறுப்பினர்களுக்குத் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.
பினாங்கு தமிழ்ப்பள்ளிகளின் சிறப்புக் குழுவின் துணைத் தலைவருமான குமரன் உரையாற்றுகையில், மாநிலத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகள், பஞ்சாபி மற்றும் தெலுங்கு கல்வி மையங்களுக்கு மாநில அரசு வழங்கும் தொடர்ச்சியான ஆதரவுக்கு தனது பாராட்டைத் தெரிவித்தார்.
தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே தேசிய மொழியில் திறமை மற்றும் புலமை வளர்க்கும் வகையில் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்த இணக்கம் கொண்டுள்ளதாக குமரன் தெரிவித்தார்.