தர்மன் தலைமையில் பினாங்கு இந்து சங்கம், மதம் மற்றும் சமுதாய முன்னேற்றத்தில் புதிய அத்தியாயம்

Admin
img 20250516 wa0152(1)

மலேசிய இந்து சங்கம் பினாங்கு மாநிலப் பேரவை விவேக ரத்னா ஏ. தர்மன் தலைமைத்துவத்தின் கீழ் இந்துச் சமூகத்தை மதம், கலாச்சாரம், கல்வி மற்றும் பல துறைகளில் முன்னெடுத்துச் செல்கிறார். இந்துச் சமூகத்தை முன்னேற்றம் அடைந்த சமூகமாக உருவாக்க மகளிர், இளைஞர் மற்றும் மாணவர்களின் பங்களிப்பிற்கு முன்னுரிமை அளிப்பது வரவேற்கத்தக்கது. விவேக ரத்னா தர்மன் அவர்களின் தலைமையில் மகளிர் மற்றும் இளைஞர்கள் பங்கேற்பாளர்களாக அல்லாது இந்து மதத்தின் மாண்பினைப் பறைச்சாற்றும் முன்னோடிகளாக திகழ்கிறார்கள்.

img 20250516 wa0155(1)
2024-ஆம் ஆண்டு நடைபெற்ற மாநில அளவிலான திருமுறை ஓதும் போட்டி வெற்றியாளர்களுக்கு மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் பரிசுகள் எடுத்து வழங்கினார் (உடன் இந்து சங்க பினாங்கு பேரவைத் தலைவர் தர்மன் மற்றும் உறுப்பினர்கள்).

“நாங்கள் பாரம்பரியத்தையும் புதுமையையும் இணைப்பதில் நம்பிக்கை கொள்கிறோம். உதாரணமாக, பங்கேற்பாளர்கள் புடவை மற்றும் வெஷ்டி அணிந்து பங்கேற்கும் கால்பந்துப் போட்டிகளை நடத்த இணக்கம் கொள்கிறோம். ஏனெனில், யாரு வேண்டுமானாலும் காற்பந்து விளையாடலாம்; ஆனால் அதை நாம் எப்படி விளையாடுகிறோம் என்பதே நம் அடையாளத்தை பிரதிபலிக்கிறது,” என தர்மன் முத்துச் செய்திகள் நாளிதழுக்கு அளித்தப் பேட்டியில் இவ்வாறு கூறினார்.

இந்து சங்கம் வருடாந்திர திட்டங்களில் கல்வி மற்றும் கலாசார மேம்பாட்டுக்கான முயற்சியில் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சி பெற்றுள்ளதாகவும் தர்மன் தெரிவித்துள்ளார்.

img 20250506 wa0156
மலேசிய இந்து சங்க பினாங்கு பேரவையின் ஆண்டுக் கூட்டத்தில் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தராஜு அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை வழங்கப்பட்டது.

பினாங்கு மாநிலம் முழுவதும், மலேசிய இந்து சங்கம் தலைமையில் 40 சமய வகுப்புகளை நடத்தி வருகிறது. இதில், இந்து சங்க வருடாந்திர மெகா திட்டமான திருமுறை ஓதும் போட்டி ஜூலை முதல் செப்டம்பர் வரை வட்டாரம், மாநிலம் மற்றும் இறுதியில் தேசிய அளவில் நடைபெறுகிறது.
[
மேலும், இந்து மத கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் கோலாட்டம், கபடி போன்ற நடவடிக்கைகளும் சமய வகுப்பில் ஓர் அங்கமாக இடம்பெறுகிறது. அதுமட்டுமின்றி, பினாங்கில் பிரசித்தி பெற்ற தெப்ப திருவிழா சமயம் மற்றும் சுற்றுச்சூழல் பாங்கான முறையில் கொண்டாடப்படுவதை உறுதிசெய்ய இந்து சங்கம் சிறந்த ஒத்துழைப்பை நல்கி வருகிறது.

img 20250604 wa0042
மலேசிய இந்து சங்க பினாங்கு மாநிலப் பேரவைத் தலைவர் விவேக ரத்னா தர்மன்

“இந்த முன்முயற்சி திட்டங்கள் சிறியதாகக் கருதக்கூடாது. ஏனெனில், ஒவ்வொரு ஆண்டும் எங்களின் கலாசாரம், மதம் மற்றும் கல்வி சார்ந்த திட்டங்களிலிருந்து 39,600க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைகின்றனர்,” என தர்மன் பெருமையாகத் தெரிவித்தார்.

“மேலும், எஸ்.பி.எம் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவு நோக்கில் மூன்று மாதங்களுக்கு ஆன்லைன் வகுப்புகள், பயிலரங்கள் ஏற்று நடத்த கல்விப் பிரிவையும் அமைத்துள்ளோம். மாணவர்களின் எதிர்காலத்தை நோக்கி தொழிற்கல்வி சார்ந்த துறைகளில் பயில்வதற்கும் வழிகாட்டியாகத் திகழ்வதற்கும், இது நம் கலாசாரத்தை பாதுகாப்பது மட்டுமல்லாமல் மாணவர்களின் கல்வியின் முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக செயல்படுகிறது, என்றார்.

“இந்து சங்கத்தின் கீழ் நடத்தப்படு திட்டங்களை நாங்கள் தனிநபராக நடத்துவதில்லை. அதேவேளையில், மாநில இந்து சங்க நிர்வாக உறுப்பினர்கள், மகளிர் மேம்பாட்டு கழகம் (PWDC), Harmonico மற்றும் பினாங்கு இந்து அறப்பணி வாரியம் (PHEB) ஆகியவற்றுடன் நெருக்கமாக இணைந்து செயல்படுகிறோம். ஏனெனில், ஒன்றியம் உறுதியை உருவாக்குகிறது; ஒத்துழைப்பு நன்மைகளை வழங்குகிறது,” என்றும் அவர் கூறினார்.

பினாங்கு மாநிலப் பேரவை செயற்குழுவில் 70% உறுப்பினர்கள் மகளிர் என்பது வரலாற்று சாதனையாகும். இது பாலின சமத்துவத்துக்கான உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது.
img 20250112 wa0137
“எனவே, இந்த ஆண்டு பினாங்கு மகளிர் மேம்பாட்டுக் கழகம் (PWDC) போன்ற நிறுவனங்களுடனான சிறப்பான கூட்டாண்மையின் மூலம், மாநில அளவில் பொங்கல் விழாக்கள், இளைஞர் விளையாட்டு போட்டிகள் மற்றும் கலாசார நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்தி வந்துள்ளோம்.

“எங்களின் முக்கிய முன்முயற்சி திட்டங்களில் ஒன்றான ‘இந்து நெடுவோட்டம்’, இளைஞர்களின் பங்களிப்பை நேரடியாக ஈடுபடுத்துவதோடு அதிகரிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டது. இது சுகாதாரம் மற்றும் கலாசார மாண்பினை ஒன்றாக இணைக்கிறது.

img 20250118 wa0131

எதிர்காலத்தை முன்னெடுத்து, மாநில வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினரான டத்தோ ஸ்ரீ சுந்தராஜு அவர்களின் முழுமையான ஆதரவுடன், கலாச்சாரம் மற்றும் சமூக நல நடவடிக்கைகளுக்கான மையம் ஒன்றை நிறுவும் மலேசிய இந்து சங்கத்தின் கனவு நனவாகி வருகிறது என்பதைத் தர்மன் மகிழ்ச்சியுடன் அறிவித்தார்.
img 20250118 wa0280
“இந்த திட்டத்திற்கான நிலம், செபராங் பிறை மாநகர் கழகத்திற்கு (எம்.பி.எஸ்.பி) சொந்தமானது. பினாங்கின் முதல் பசுமைத் தொழில்நுட்ப அடிப்படையிலான இந்து கட்டடமாக உருவாகவுள்ளது. இந்நிலம் வாடகை ஒப்பந்த முறையில் வழங்கப்படும்,” என்றார்.

“இந்த ஆண்டின் அக்டோபர் மாதத்தில் அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். இந்த கட்டிடத்தில் அமைக்கப்படும் பல்நோக்கு மண்டபத்தில் கலாச்சார நிகழ்ச்சிகளை மட்டுமல்லாது, அருகிலுள்ள தொழிற்சாலைகள், சங்கங்கள் சந்திப்புக் கூட்டம் நடத்துவதற்கு வாடகைக்கு அறைகள் வழங்குவதன் மூலம் நிதியளிக்கத் தேவையான நிலைத்துவமான வருமானத்தையும் உருவாக்க முடியும்,” என்றார்.

“இது வெறும் கட்டிடம் அல்ல, இது ஒரு பாரம்பரிய பதிவாகத் திகழும். நாடு முழுவதும் மலேசிய இந்து சங்கத்தின் கீழ் 2,000-க்கும் மேற்பட்ட இந்து கோயில்கள் பதிவாகி உள்ள நிலையில், அடுத்த தலைமுறைக்கு பெருமையுடன் அங்கீகரிக்கக்கூடிய ஒரு தளத்தை நாம் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்,” என்று அவர் கூறினார்.

பினாங்கின் கீழ் செயல்படும் 12 வட்டாரங்களுக்கும் மதம், கலாச்சாரம் பாதுகாக்கப்படுவதற்கு முன்னுரிமை அளிப்பதை உறுதி செய்வதில் முனைப்புக் காட்டி வருகிறேன்.

எதிர்காலத்தில் இளைஞர்களுக்கு மலேசிய இந்து சங்கத்தை தேசிய ரீதியிலும் மாநில ரீதியிலும் செயற்குழுவில் முன்னின்று வழிநடத்த வாய்ப்பு வழங்கப்படுவது அவசியம் என மலேசியாவிலே, இளம் தலைவராக வலம் வரும் தர்மன் தெரிவித்தார்.