பாகான் – தாமான் பாகான் பொதுச் சந்தை அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் தாமான் பாகான் உணவக வளாகம் 70% நிறைவடைந்து திட்டமிட்ட கால அட்டவணைப்படி முன்னேறி வருகிறது என்று பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் தெரிவித்தார்.
கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி அவர் கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்தைப் பார்வையிட்டபோது இதனை தெரிவித்தார். அவருடன் செபராங் பிறை மாநகர் கழக கவுன்சிலர் லிங்கேஸ்வரன் சர்மார் கலந்து கொண்டார்.
இந்த திட்டம், எம்.பி.எஸ்.பி உடன் இணைந்து, வியாபாரிகளுக்கும் உள்ளூர் மக்களுக்கும் நவீன, வசதியான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தை வழங்கும் முயற்சியின் ஒரு பகுதியாகும் என குமரன் கூறினார்.
இத்திட்டம் சுமார் ரிம2.72 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்டு, கடந்த ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி தொடங்கப்பட்டது. 18 மாதங்களுக்கான செயல்பாட்டு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் தேதிக்குள் முழுமையாக நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த உணவக வளாகத்தில் 14 உணவுக் கடைகள் அமைக்கப்படவுள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கான (OKU) சிறப்பு கழிப்பறைகள் உட்பட பல்வேறு வசதிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. மேலும், 27 கார் நிறுத்துமிடங்கள், 20 மோட்டார் சைக்கிள் நிறுத்துமிடங்கள் மற்றும் 2 OKU வாகன நிறுத்துமிடங்களும் இத்திட்டத்தில் இடம்பெறுகின்றன. மின்சாரம், விளக்குகள், விசிறிகள், பிரிமிக்ஸ் தரை ஓடுகள் மற்றும் பாதுகாப்பு வேலிகள் போன்ற நவீன வசதிகளும் இதில் அடங்கும்.
“இந்தத் திட்டம் காலக்கெடுவுக்குள் அல்லது அதற்கு முன்னதாகவே நிறைவு செய்யப்பட வேண்டும் என்று ஒப்பந்ததாரருக்கும் எம்.பி.எஸ்.பி தரப்பிடமும் வலியுறுத்தியுள்ளேன். எனவே, பொதுமக்கள் இதனால் விரைவில் பயன்பெற வேண்டும்,” என்று அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
சந்தைக்கு வருபவர்கள் அருகிலேயே உணவக வசதி இருந்தால், அவர்கள் சுலபமாக பொருட்கள் வாங்கியும் உணவு சாப்பிட்டு செல்லவும் முடியும் என்று அவர் கூறினார்.
இந்த திட்டம் நிறைவடைந்ததும், தற்போது சந்தை அருகே செயல்பட்டு வரும் வியாபாரிகள் இங்கு மாற்றப்படுவார்கள். இதன் மூலம் அவர்கள் சிறந்த சூழலில் வியாபாரம் செய்ய முடியும் என்றும், வருகை தரும் மக்களுக்கு கூடுதல் வசதி கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.
எம்.பி.எஸ்.பி இன் வழக்கமான உரிமம் வழங்கும் நடைமுறைகளின் அடிப்படையில் பொதுமக்களுக்கு புதிய உணவுக் கடை இடங்கள் வழங்கப்படும். தாமான் பாகான் வியாபாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதேவேளையில், லிங்கேஸ்வரன் 2025ஆம் ஆண்டில் தாமான் பாகான் பொதுச் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டுப் பணிகள் குறித்தும் விளக்கமளித்தார். பொதுக் கழிப்பறைகள் புதுப்பித்தல் மற்றும் பாதுகாப்பு கம்பிகள் பொருத்துதல், ஈரச்சந்தையின் பன்றி மற்றும் இறைச்சி பிரிவில் சீலிங் பலகைகள் பொருத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன என்றும், இவற்றுக்கான மொத்த ஒதுக்கீடு ரிம169,500 ஆகும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த ஆண்டில் முழு சந்தையையும் மீண்டும் வண்ணம் பூசுதல் மற்றும் வடிகால் மூடிகளை கான்கிரீட் தகடுகளால் அமைத்தல் போன்ற பணிகளும் திட்டமிடப்பட்டுள்ளன.
மேலும், ஜெத்தி லாமா பொதுச் சந்தை வியாபாரிகள் சீனப் புத்தாண்டு, நோன்பு மாதம் மற்றும் வரவிருக்கும் ஹரி ராயா கொண்டாட்டத்தை கருத்தில் கொண்டு, ஏப்ரல் மாதம் இரண்டாம் அல்லது மூன்றாம் வாரம் வரை தற்காலிக இடத்திற்கு மாற்றுவதற்கான அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக குமரன் தெரிவித்தார்.
அவர்கள் மாற்றப்பட்ட பிறகு, மேம்பாட்டுப் பணிகள் மே மாதத்தில் தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார்.