‘தி ஜென்’ வீடமைப்புத் திட்டம்  அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நிறைவுப்பெறும்

குளுகோர் – ஆசியா கிரீன் குழுமத்தின் வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடமைப்புத் திட்டமான ‘தி ஜென்’ தற்போது சீரான மேம்பாடுக் கண்டு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நிறைவுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என வீடமைப்பு, உள்ளாட்சி, கிராமம்  மற்றும் நகர்ப்புற திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ தெரிவித்தார்.

ஜெக்டிப்  மற்றும் பினாங்கு வீட்டுவசதி வாரியத்தைச் சேர்ந்த அதிகாரிகள், கட்டிடக்கலை நிபுணர்கள் மற்றும் ஆசியா கிரீன் பிரதிநிதிகள் ஆகியோர் குளுகோர்,  பெர்சியாரன் பாயான் முத்தியாராவில் உள்ள தி ஜென் கட்டுமானப் பணியின் நிலையை நேரடியாகக் கண்காணிக்க அத்தலத்திற்கு வருகையளித்தனர்.

“இத்திட்டம் இப்போது 60 சதவீதம் நிறைவடைந்துள்ளது, மேலும் அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்திற்குள் நிறைவுப்பெறும் என்று எதிர்பார்க்கிறேன்.

“கோவிட்-19 தொற்றுநோய்  தாக்கத்தின் காரணமாக, கட்டுமானத் துறை மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பினாங்கில் பல குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டது.

“இது ஒரு கலப்பு மேம்பாட்டுத் திட்டம் என்பதால், அதில் ஆடம்பர அடுக்குமாடி வீடுகளும்  உள்ளன. ஆனால், வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடு, ஒரு யூனிட் 850 சதுர அடியில் நிர்மாணிக்கப்படுகிறது. அனைத்து வாங்கும் சக்திக்கு உட்பட்ட 1,200 யூனிட் வீடுளும் விற்கப்பட்டன என அறிவித்தார்.

“பினாங்கு வாழ் மக்களின் நலனுக்காக இதுபோன்ற வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடமைப்புத் திட்டங்களை செயல்படுத்தும்  தனியார் மேம்பாட்டு நிறுவனங்களுக்கு மாநில அரசு நன்றிக் கூற கடமைப்பட்டுள்ளது

“மாநில அரசு தொடர்ந்து வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகள் அமைத்து, அனைவருக்கும் குறிப்பாக  முதல் முறையாக வீடு வாங்குபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும்,” என்று ஜெக்டிப் கூறினார்.

தி ஜென் குடியிருப்பின் எதிர்கால உரிமையாளர்கள் நீச்சல் குளம், பொழுதுபோக்கு இடம் மற்றும் பிற பொது வசதிகளை அனுபவிக்க முடியும்.

மாநில அரசு வருகின்ற 2030-க்குள் 220,000 வீடுகளை அமைக்க இலக்குக் கொண்டு பினாங்கு மக்களுக்காக வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகள் நிர்மாணிக்க  உறுதிப்பாடுக் கொண்டுள்ளது.

“தற்போதைய நிலவரப்படி, பல்வேறு வாங்கும் சக்திக்கு உட்பட்ட  வீடமைப்புத் திட்டங்களில் 133,313 யூனிட் வீடுகள் பல கட்டங்களில் உள்ளன. அதில் 38,190 கட்டப்பட்டும், 19,640 கட்டுமானத்திலும், 74,956 கட்டுவதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது,” என ஜெக்டிப் விவரித்தார்.

“2030 ஆம் ஆண்டளவில் 220,000 யூனிட்களை வழங்குவதற்கான எங்கள் இலக்கில் 60.6 சதவீதத்தை  அடைந்துள்ளோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

வீட்டுவசதி வாரியம், 220,000 யூனிட் வீடுகளில்,  10 சதவீதத்தை வாடகை கொள்முதல் திட்டத்தின் கீழ், தகுதிப்பெற்றவர்களுக்கு வழங்குமாறு,  அறிவுறுத்தியுள்ளேன். இன்னும் வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகளை வாங்க முடியாத நிலையில் பலர் உள்ளனர். எனவே, இத்திட்டத்தின் மூலம் அனைவருக்கும் சொந்தமாக வீடு கிடைப்பதை உறுதி செய்வதற்கான ஒரு வழியாகும்,” என்றார்.