ஜார்ச்டவுன் – இந்து சமயப் பொருட்களை ஆகம நெறிகளுக்கு ஏற்ப முறையாகக் கையாள்வதுடன், சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில், மலேசிய இந்து சங்கத்தின் (MHS) பினாங்கு மாநிலப் பேரவை, ஆலயங்கள் மற்றும் வட்டாரப் பேரவைகளுடன் இணைந்து தெய்வீகப் பொருட்கள் மறுசுழற்சித் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது.

மலேசிய இந்து சங்கத்தின் தேசிய அளவிலான இந்த முன்முயற்சி திட்டம், குறைத்தல், மீண்டும் பயன்படுத்துதல், மறுசுழற்சி செய்தல் ஆகிய 3R நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பினாங்கில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டம், ஆண்டுக்கு மூன்று முறை செயல்படுத்தப்பட்டு வருவதுடன், பொதுமக்களிடமிருந்தும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இத்திட்டத்தின் வெற்றிக்கு மலேசிய இந்து சங்கத்தின் வட்டாரப் பேரவைகளும் ஆலயங்களும் ஒருங்கிணைந்து செயல்படுவது மிகவும் அவசியம் என்று அச்சங்கத்தின் பினாங்கு மாநிலப் பேரவைத் தலைவர் விவேக நாயகன் தர்மன் தெரிவித்தார்.

ஆலயங்கள், அரச மரங்களின் அடிப்பகுதிகள் மற்றும் பொது இடங்களில் இறை உருவப் படங்களும் சிலைகளும் முறையற்ற வகையில் வீசப்படுவதைத் தவிர்க்கும் வகையில், அவற்றை உரிய முறையில் சேகரித்து மறுசுழற்சி செய்வதற்கான வாய்ப்பை இத்திட்டம் ஏற்படுத்துகிறது, என்றார்.

இம்முயற்சிக்கு பினாங்கு மாநகர் கழகம் (எம்.பி.பி.பி), செபராங் பிறை மாநகர் கழகம் (எம்.பி.எஸ்.பி) மற்றும் பினாங்கு பசுமை கழகம் (PGC) ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளதை வரவேற்ற அவர், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் மறுசுழற்சி நடவடிக்கைகளையும் வலுப்படுத்த இந்த அமைப்புகளுடன் இணைந்து தொடர்ந்து செயல்பட விருப்பம் தெரிவித்தார்.
இதற்கிடையே, பெர்மாத்தாங் திங்கியில் உள்ள ஸ்ரீ அக்னி முனீஸ்வரர் ஆலயத்துடன் இணைந்து தெய்வீகப் பொருட்கள் மறுசுழற்சித் திட்டத்தை வெற்றிகரமாக ஏற்பாடு செய்த மலேசிய இந்து சங்கத்தின் அல்மா வட்டாரப் பேரவைக்கும், ஆலய நிர்வாகத்தினருக்கும் தர்மன் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்தார்.
இத்திட்டத்தைச் சிறப்பாக முன்னெடுத்த ஏற்பாட்டாளர்கள், தொண்டூழியர்கள் மற்றும் ஆலயப் பிரதிநிதிகளின் அர்ப்பணிப்பும் ஒருங்கிணைந்த செயல்பாடுகளுமே பொதுமக்களிடமிருந்து கிடைத்த வரவேற்புக்குக் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதுவரை நான்கு வட்டாரப் பேரவைகள் ஆலயங்களுடன் இணைந்து இத்திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளன. மேலும் நான்கு வட்டாரப் பேரவைகள் தத்தம் வட்டார ஆலயங்களுடன் இணைந்து இத்திட்டத்தை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளன.
மலேசிய இந்து சங்கத்தின் வட்டாரப் பேரவைகள், ஆலயங்கள், அரசாங்க அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்த முடியும் என்று தர்மன் நம்பிக்கை தெரிவித்தார்.
சமய நெறிகளைப் பேணுவதுடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பொது இடங்களின் தூய்மை மற்றும் நிலையான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதற்கும் இந்து சமூகத்தினர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.