தேசிய பாதுகாப்பு கவுன்சில் சிறப்பு அமர்வில் நான்கு முதன்மை கூறுகளின் அடிப்படையில் விவாதிக்கப்படும் – முதல்வர்

ஜார்ச்டவுன் – மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் கோவிட்-19 நுண்ணுயிர் கிருமி பரவல் குறித்த பிரதமர் தலைமையிலான தேசிய பாதுகாப்பு கவுன்சில் சிறப்பு அமர்விற்கு இன்று புத்ராஜெயா செல்கிறார். இந்த அமர்வில் நான்கு முக்கிய கூறுகள் முன்வைக்க உத்தேசித்துள்ளதாக இன்று நடைபெற்ற முகநூல் வாயிலான நேரலை செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் முதல்வர் கூறினார்.

முதலாவதாக, நடமாட்டக் கட்டுப்பாடு ஆணையின் கீழ் (மார்ச் 18 முதல் 31 வரை) தொழிற்சாலைகளின் செயல்பாடுகள் குறித்த அமலாக்க நடவடிக்கைகளை கடுமையாக்கப்பட வேண்டும் என மத்திய அரசிடம் கேட்கப்படும் என கூறினார்.
“ஏனெனில் பினாங்கின் முதன்மை தொழிற்துறைகளில் உற்பத்தித் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. முழுமையான தகவல்கள் அல்லது வழிக்காட்டல் இல்லாமல் இத்தொழிற்சாலைகள் இயங்குவதில் குழப்பம் நிலவுகிறது.

இரண்டாவது, பினாங்கில் இயங்கும் மருத்துவமனைகள் மற்றும் அரசு கிளினிக்களுக்கு அனைத்து மருத்துவ உபகரணங்களும் போதுமானதாக இருப்பதை உறுதி செய்யுமாறு மத்திய அரசிடம் கோரப்படும்.

மூன்றாவது, தனியார் மற்றும் பொது மருத்துவப் பயிற்சியாளர்கள் மற்றும் பொது மக்களுக்குத் தேவையான முகக்கவசம், தெர்மோமீட்டர்கள், கைத்தூய்மி(sanitizer) மற்றும் பிற பாதுகாப்பு உபகரணங்களைப் பெறுவதற்கு எதிர்நோக்கும் சிரமத்திற்கு தீர்வுக்காணப்படும்.

கூட்டரசு அரசாங்கம் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு ஏற்றுமதி ஒதுக்கீடு மற்றும் மானியங்கள் வழங்கி பொது மக்களுக்கு முகக்கவசம் பெறுவதை உறுதிச்செய்ய வேண்டும். மேலும், அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான மருத்துவ உபகரணப்பொருட்கள் வழங்க வேண்டும்.

நான்காவது, முன்னால் பிரதமர் அறிவித்த பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் ரிம30 பில்லியன் மாநில அரசின் விண்ணப்பம் குறித்த நிலைப்பாடு அறியப்படும்.

இந்த முக்கியமான தருணத்தில் அரசியல் வேறுபாடுகள் என்ற சொல்லுக்கே இடமில்லை மாறாக பினாங்கு மாநில அரசு அனைத்து அரசியல் விவகாரங்களை ஒதுக்கி விட்டு, குறிப்பாக மலேசியா மற்றும் பினாங்கு மக்களைப் பாதுகாக்க கோவிட்-19ஐ எதிர்க்கும் போராட்டத்தில் கவனம் செலுத்தும் என முதல்வர் விளக்கமளித்தார்.

மேலும் , வருகின்ற 25 மார்ச் வழங்க வேண்டிய அரசு ஊழியர்களுக்கான ஊதியத்தை இன்று வழங்குவதாக முதல்வர் கூறினார்.

“துப்புரவுப்பணி முதல் அமலாக்கக் குழுவினர் வரை, மற்றும் முக்கிய சேவைத் துறையில் ஈடுப்பட்டிருக்கும் தொழிலாளர்களும் மாநிலத்தின் நலனுக்காக தங்கள் பணிகளைச் செவ்வென ஆற்றி வருகின்றனர்.

“அலுவலகத்திற்கு வர தேவையில்லாத ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியில் ஈடுப்படுகின்றனர்.

“இந்நிலையில் அரசு ஊழியர்களைக் கெளரவிப்பதோடு உதவிக்கரம் நீட்டும் வகையில், மார்ச் மாதத்திற்கான சம்பளத்தை இன்று முன்னதாக மாநில அரசு வழங்க முடிவு செய்துள்ளது” என முதல்வர் தெரிவித்தார்.