தொழிலாளர்களின் சேவை அங்கீகரிக்கப்பட வேண்டும் – பேராசிரியர்

Admin

பிறை – ” உலக முழுவதும் இன்று (1/5/2019) தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது. இத்தினம் தொழிலாளர்களின் சேவையை அங்கீகரிக்கும் வகையில் பொது விடுமுறை அனுசரிக்கப்படுகிறது. பொதுவாகவே, இந்நாளில் பொது மக்கள் ஓய்வு எடுக்கும் வேளையில் இந்த ஆண்டு ‘Mayday walk 2019’ எனும் நடைப்பயணத்தில் கலந்து கொள்ள வருகையளித்த  அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன், ” என மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி கூறினார்.

தாமான் கிம்சார், பிறையில் நடைபெற்ற இந்நிகழ்வினை பிறை சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ப.இராமசாமி அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தார்.

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இன்று அயராது உழைக்க வேண்டும் என்ற சில அமைச்சின் கருத்துக்கு இணக்கம் தெரிவிக்காத பேராசிரியர் இன்று மட்டுமின்றி நாம் எப்பொழுதும் சிறந்த சேவையைப் புரிய வேண்டும் என எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வில் செபராங் பிறை நகராண்மைக் கழக உறுப்பினர்களான டேவிட் மார்ஷல், ஜெசன் ராஜ் , இரண்டாம் துணை முதல்வர் அலுவலகம் மற்றும் பிறை சேவை மன்ற ஊழியர்களும் கலந்து சிறப்பித்தனர்.

பிறை சட்டமன்ற சேவை மையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வு தொழிலாளர்களின் சேவையைப் பறைச்சாற்றுவதற்கும்  அவர்களுக்கு மரியாதை செலுத்துவதற்கும் இடம்பெற்றதாகப் பேராசிரியர் மேலும் தெரிவித்தார்.

5 கிலோ மீட்டர் தூர நடைப்பயணத்தில் ஏறக்குறைய 500-க்கும் மேற்பட்ட பல்லின மக்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் அதிஷ்ட குலுக்கல் நடத்தப்பட்டு பொது மக்கள் பரிசுகளைத் தட்டிச்சென்றனர்