நடமாட்டக் கட்டுப்பாட்டு தளர்வில் 1.8 மில்லியன் மக்களின் உயிர்களுக்காக வழக்குத் தொடரவும் தயார் – முதல்வர் பதிலடி

Admin

ஜார்ச்டவுன் – மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் பினாங்கு மாநில 1.8 மில்லியன் பொது மக்களின் நல்வாழ்வுக்காக நேற்று தொடங்கி பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் திறக்காததற்காக வழக்குத் தொடர தயாராக இருப்பதாகக் கூறினார்.

மே மாதம் 4-ஆம் தேதி முதல் நிபந்தனை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை (பி.கே.பி.பி) அமல்படுத்த மறுக்கும் மாநில அரசிற்கு பாதிக்கப்பட்ட துறைகள் வழக்கு தொடரலாம் என மூத்த அமைச்சரும் அனைத்துலக வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சருமான (எம்.ஐ.தி.ஐ) டத்தோ ஶ்ரீ முகமது அஸ்மின் அலி விடுத்த அறிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக இது அமைகிறது, என்றார்.

இரண்டு நாட்களுக்கு முன்னதாக நிபந்தனை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.பி) பினாங்கில் வருகின்ற மே மாதம் 8-ஆம் தேதி முதல் கட்ட கட்டமாக அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டதை முதல்வர் தெளிவுப்படுத்தினார்.

“மூத்த அமைச்சரான (அஸ்மின்) பொருளாதார மேம்பாடு குறித்து எதனை எதிர்ப்பார்கிறார் என கேட்க விரும்புகிறேன். ஏனெனில், இந்த பி.கே.பி.பி அமலாக்கம் குறித்து அனைத்து மாநில அரசாங்கத்துடன் சோம்பலின் காரணமாக கலந்தாலோசிக்காமல் கூடிய விரைவில் அனுமதி பெற விரும்புகிறார்.

“பினாங்கின் 1.8 மில்லியன் மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்காக வழக்குத் தொடர மாநில அரசு தயாராக உள்ளது, அதே வேளையில், பி.கே.பி.பி-யின் கீழ் பொருளாதாரத் துறையைத் தொடங்கவும் மாநில அரசு தயாராக உள்ளது என வலியுறுத்தினார்.
“மூத்த அமைச்சர் பினாங்கு மாநிலத்தை அச்சுறுத்த அவசியமில்லை மாறாக பினாங்கை அனைத்துலக வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் (எம்.ஐ.தி.ஐ) பிரதான பங்குதாரராக கருதி மதிப்பளித்து நாட்டின் பொருளாதார மறுமலர்ச்சி திட்டத்தை நோக்கி பயணிக்க வேண்டும்.

“எனவே, அஸ்மின் அலி எங்களுடன் ஒன்றிணைந்து செயல்பட தயாரா அல்லது நேர்மாறாக செயல்பட தயாரா என முடிவு செய்யுங்கள்” என்று மாநில பாதுகாப்பு குழு (ஜே.கே.கே.என்) தலைவருமான சாவ் இன்று நடைபெற்ற முகநூல் நேரலையில் இவ்வாறு கூறினார்.
மேலும், மாநில அரசாங்கம் பின்பற்ற வேண்டிய இந்த பி.கே.பி.பி நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறை (எஸ்.ஒ.பி) முழுமையாக தயார்செய்யாததாலும் அதனை மிக அவசரமாக நடைமுறைப்படுத்துவதால் ஜே.கே.கே.என் மூன்று முறை அவசர சந்திப்புக் கூட்டம் நடத்தியது என முதல்வர் விளக்கமளித்தார்.

“நாங்கள் பி.கே.பி.பி கீழ் பொருளாதாரத் துறைகள் மீண்டும் செயல்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்ற நிலைப்பாட்டினை வலியுறுத்த விரும்புகிறேன்.

“கடந்த மே மாதம் 1-ஆம் தேதி, பிரதமர் அறிவிப்பிற்கு பினாங்கு மாநிலத்தில் அனைத்து பொருளாதார துறைகளும் மீண்டும் செயலபடுவதற்கு ஆதரவு நல்குவதாக செய்தியாளர் அறிவிப்பில் அறிவித்தேன், என முதல்வர் கூறினார்.

எனவே, மாநில முதல்வர் மீண்டும் “பினாங்கு மறுமலர்ச்சி திட்டம்’ செயல்பாடு பற்றி விளக்கமளித்தார்.

முதல் பிரிவு: வருகின்ற மே மாதம் 4 முதல் 7-ஆம் தேதி வரை கூடுதலாக அனுமதிக்கப்பட்டத் துறைகள் எஸ்.ஓ.பி பின்பற்றுவதற்கு தயார் நிலைப் படுத்துதல்.

இரண்டாம் பிரிவு: வருகின்ற மே மாதம் 8 முதல் 12-ஆம் தேதி வரை பி.கே.பி.பி-யின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட கூடுதல் துறைகள் செயல்படுவதற்கு அனுமதி பெறுதல் மற்றும் பொது மக்கள் புதிய எஸ்.ஒ.பி மற்றும் விதிமுறைகள் பின்பற்ற தயார்படுத்துதல்.
மூன்றாம் பிரிவு: வருகின்ற மே மாதம் 13-ஆம் தேதி தொடங்கி பி.கே.பி.பி-யின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து துறைகளும் முழுமையாகச் செயல்படத் தொடங்கும் என கூறினார்.

ஜே.கே.கே.என் இரண்டு முதன்மை கூறுகளை அடிப்படையாகக் கொண்டு இத்திட்டத்தை முன்மொழிந்தது.

முதலாவதாக , தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பினாங்கு மாநிலத்தில் மக்கள் கூட்டம் மிக நெருக்கமாக இருப்பதால் நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் . எனவே, பி.கே.பி-யின் தளர்வு மக்களின் நெரிசல் காரணமாக கட்டம் கட்டமாக தான் செயல்படுத்த முடியும்.

இரண்டாவது, அனைத்து துறைகளும் அறிவிக்கப்பட்ட எஸ்.ஒ.பி தயார் படுத்துவதற்கு கால அவகாசம் தேவை. மேலும், கடந்த மே மாதம் 1-ஆம் தேதி வெளியிட்ட எஸ்.ஒ.பி-யில் சில மாறுதல்கள் அறிவிக்கப்பட்டன, எடுத்துக்காட்டாக, கட்டுமானத் துறையில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கோவிட்-19 சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று மே மாதம் 4-ஆம் தேதி அன்று கூட்டரசு அரசாங்கம் அறிவித்தது, ”என்று அவர் கூறினார்.