நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறை (எஸ்.ஓ.பி) கடைப்பிடித்து நோன்புப் பெருநாளை கொண்டாடுவோம் – குமரேசன்

Admin

பத்து உபான் – இம்முறை நிபந்தனைக்கு உட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது நோன்புப் பெருநாள் கொண்டாடவிருப்பதால் மத்திய அரசு நிர்ணயித்துள்ள நிர்வாக நடைமுறையைக் (எஸ்.ஓ.பி) கடைப்பிடித்து கொண்டாட வேண்டும் என பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் வலியுறுத்தினார்.

இஸ்லாமிய நண்பர்கள் தங்கள் குடும்பத்துடன் வீட்டிலேயே ஒன்றிணைந்து கொண்டாட வேண்டும்; முடிந்த வரையில் விருந்தினர்களின் வருகையை தவிர்ப்பது அவசியம்; இதன் வழி கோவிட்-19 பரவுவதை தவிர்க்க முடியும் என சுங்கை டுவா சுகாதார கிளினிக்கு வருகையளித்த பின்னர் செய்தியாளர்களிடம் இதனைக் குறிப்பிட்டார்.

பத்து உபான் சேவை மையமும் பெண்கள் மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைப்புடன் இணைந்து முன்னணி வரிசை பணியாளர்களுக்கு
முதல் முறையாக ‘குவே ராயா’ (பண்டிகை பலகாரம்) அன்பளிப்பாக சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார். நடமாட்டுக் கட்டுப்பாட்டு முதலாம் கட்டத்தில் இருந்தே கூடாரம், மருத்துவ உபகரணங்கள் என சுங்கை டுவா சுகாதார கிளினிக்கு உதவிக்கரங்களை நீட்டி வருவது பாராட்டக்குரியதாகும்.

தொண்டு அடிப்படையில் பலகாரங்களை அவ்வட்டார நல்லுள்ளங்கள் வாங்கி கொடுத்து மொத்தமாக 125 பொட்டலங்கள் சுங்கை டுவா சுகாதார கிளினிக் (78) மற்றும் புக்கி ஜம்புல் சுகாதார கிளினிக்கு (47) என இன்று வழங்கப்பட்டன.

சுங்கை டுவா, சுகாதார கிளினிக் நுழைவாயில் பழுதாகியுள்ள நிலையில் அதனை மேம்படுத்த பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் உதவ வேண்டும் என அதன் சுகாதாரக் குழுத் தலைவர் முகமட் இப்ராஹிம் முகமட் ஷரிப் கோரிக்கை விடுத்தார். இந்த மேம்பாட்டுத் திட்டம் தொடர்பாக சட்டமன்ற கூட்டத்தொடருக்கு கொண்டுச் சென்று குமரேசன் தீர்வுக்கண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கோவிட்-19 நெருக்கடியில் தொடர்ந்து உதவிகளை நல்கி வரும் சட்டமன்ற உறுப்பினருக்கு நன்றி நவிழ்ந்தார்.