பசுமை தொழில்நுட்ப பூங்கா  பிராந்திய தொழில்துறை மையமாக உருமாற்றம் காணும்

Admin

ஜார்ச்டவுன்- தீவு ஏ-வின் 2,300 ஏக்கர் பரப்பளவில்  700 ஏக்கர் தொழில்துறையின் தேவைகளைப்  பூர்த்தி செய்வதற்காக பசுமை தொழில்நுட்ப பூங்காவாக உருமாற்றம் காணும் என மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் தெரிவித்தார். 

“மாநில அரசு  எஸ்.ஆர்.எஸ் கூட்டமைப்புடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட இணக்கம் கொண்டுள்ளது.

தனியார் நிதி முயற்சியின் (PFI) கீழ் மற்றொரு ஒப்பந்தம் காமுடா பொறியியல் நிறுவனத்துடன் கையெழுத்திட்டு  ஏறக்குறைய 1,200 ஏக்கர் பரப்பளவில்  தீவு ஏ-வின் முதல் கட்ட நில மீட்புத் திட்டம் தொடங்கப்படும். 

பினாங்கு அரசாங்கத்தின் சார்பாக பினாங்கு உள்கட்டமைப்பு கார்ப்பரேஷன் சென் பெர்ஹாட்(Corporation Sdn Bhd) நிறுவனம், எஸ்.ஆர்.எஸ் கொன்சோர்த்தியம் நிறுவனத்துடன்  ஒரு கூட்டு முயற்சியில் தீவு ஏ நில மீட்புத் திட்டத்தில் பங்கேற்கும். 

மாநில அரசு தயாரிப்பு ஆராய்ச்சி, அத்துடன் பசுமை தொழில்நுட்ப பூங்காவிற்கான வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு முதலீடுகள் உள்ளிட்ட முக்கிய ‘அப்ஸ்ட்ரீம்’ மதிப்பு கொண்ட நடவடிக்கைகளையும் மேம்படுத்த உத்தேசிப்பதாக  சாவ் கூறினார்.

“இத்தகைய முதலீடுகள் சிறந்த பணிச்சூழலை உருவாக்குவதற்கு முக்கியத்துவம் அளிப்பதோடு இது திறன்மிக்க தொழிலாளர்களை ஈர்க்கும்.

“தீவு ஏ-வில் பசுமை தொழில்நுட்ப பூங்கா உருவாக்குவதன் மூலம்   பினாங்கு பிராந்திய தொழில்துறை மையமாக உருமாற்றம் காணும்” என்று இன்வெஸ்ட் பினாங்கு ஏற்பாடு செய்த ‘பினாங்கு: ஒரு நிலையான முதலீடு இடம்’ குறித்த மெய்நிகர் உரையாடல் அமர்வின் கேள்வி பதில் அங்கத்தில் சாவ் இவ்வாறு கூறினார்.

ஜூம் வழியாக நடத்தப்பட்ட ஒரு மணி நேர உரையாடலில் பல்வேறு தூதரகங்கள், வர்த்தக ஆணையர்கள் மற்றும் ஆலோசகர்கள் பங்கேற்றனர்.

“மலேசியாவிலே இரண்டாவது சிறிய மாநிலமாக பினாங்கு விளங்கினாலும் உற்பத்தித் துறை மேம்பாடு; ஆராய்ச்சி & மேம்பாடு(R&D); புத்தாக்கம் மற்றும் கண்டுபிடிப்பு திட்டங்கள் செயல்பாடு என பினாங்கு நிலையான முதலீடு இடமாகத் திகழ்வதில் முன்னெடுத்துச் செல்கிறது. 

“வட மாநிலத்தின் ‘சிலிகோன் பள்ளத்தாக்கு’ (silicon valley) என அழைக்கப்படும் பினாங்கு மாநிலம் 2019 ஆண்டிற்கான அனைத்துலக ஏற்றுமதியில் குறிப்பாக செமிகண்டக்டர் துறையில் 5%  பங்களிப்பு வழங்கி மின்சாரம் & மின்னணு (E&E) உற்பத்தி துறை மையமாக செயல்படுகிறது,” என்றார். 

மாநில முதல்வர் பினாங்கு போக்குவரத்து பெருந்திட்ட மேம்பாடு மற்றும் அதன் செயலாக்கம் குறித்தும் விவரித்தார்.  

பண்டர் பாரு ஆயிர் ஈத்தாம் முதல் துன் டாக்டர் லிம் சோங் யூ எக்ஸ்பிரஸ்வே வரையிலான  (தொகுப்பு இரண்டு) கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டு பிப்ரவரியில் மீண்டும் தொடங்கப்பட்டு 2025- ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கான மதிப்பிடப்பட்ட செலவு ரிம 851 மில்லியன் ஆகும். தற்போது நிலம் கையகப்படுத்தும் விஷயங்களில் கவனம் செலுத்தப்படுகிறது. 

“தஞ்சாங் பூங்கா-தெலுக் பஹாங் மாற்றுவழி (தொகுப்பு ஒன்று) திட்டத்தின்  இறுதிக்கட்ட விரிவான வடிவமைப்பு  செயல்முறை இந்த ஆண்டு நடுப்பகுதியில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கர்னி டிரைவ்-துன் டாக்டர் லிம் சோங் யூ மாற்றுவழி (தொகுப்பு மூன்று) திட்டத்திற்கு மிகக் குறைந்த முன்னுரிமை வழங்கப்படுகிறது. எனவே, இந்த  திட்டத்திற்கான செயலாக்கம் குறித்து தீர்மானிக்கப்படும், ” என்று சாவ் கூறினார்.

கேள்வி பதில் அமர்வை இன்வெஸ்ட் பினாங்கு தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ லூ லீ லியன் வழிநடத்தினார்.இந்த சந்திப்பில்  முதல்வரின் சிறப்பு ஆலோசகர் டத்தோ ஸ்ரீ  லீ கா சூனும் கலந்து கொண்டார்