பத்து உபானில் விரைவில் மலிவுவிலை வீடுகள் அமைக்கப்படும் – குமரேசன்

 

பத்து உபான் -கடந்த 2020 ஜுலை,23 அன்று நடைபெற்ற மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில் லோட் 9117 மற்றும் மாநில முதல்வர் அலுவலக வாரியத்திற்கு (சி.எம்.ஐ) சொந்தமான லோட் 20113 நிலத்தில் மலிவு விலை வீடுகள் அமைக்க மாநில அரசு முனைப்புக் காட்டியுள்ளது.

அந்தப் பகுதியில் கடைகள், பொதுச் சந்தை, பல்நோக்கு மண்டபம், விளையாட்டு அரங்கம், வாகனம் நிறுத்துமிடம் மற்றும் இதர அத்தியாவசிய வசதிகளுடன் இந்த மேம்பாட்டுத் திட்டம் இடம்பெறும் என குமரேசன் 2021-ஆம் ஆண்டின் நாட்காட்டிகளை பொது மக்களுக்கு வழங்கிய பின்னர் செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.

பினாங்கு வடக்கிழக்கு மாவட்டத்தில் மாநில அரசிற்கு சொந்தமான லோட் 9117 நிலப்பரப்பில் மேம்பாட்டுப் பணி மேற்கொள்ளும் திட்டம் நீண்ட இழுப்பறிக்கு பின்னர் ஒரு முடிவுக்கு வந்துள்ளதை பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் வரவேற்றார்.

அந்நிலத்தில் பாலர்ப்பள்ளி மற்றும் அங்காடி கடைகளுடன் கூடிய பல்நோக்கு மண்டபம் அமைக்க மாநில அரசுடன் ஹம்னா தனியார் நிறுவனமும் இணக்கம் கொண்டுள்ளது.

ஹன்னா தனியார் நிறுவனம் கடந்த 2018-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அன்று தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற வழக்கு (கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில்) விண்ணப்பதாரரின் ஆரம்ப சம்மன்களின் விசாரணையின் போது (27 ஜூலை 2020) அன்று தீர்வுக்கான ஒப்பந்தத்தை எட்டியுள்ளது. மேம்பாட்டாளர் எந்தவொரு கட்டணமும் இன்றி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை திரும்பப் பெற ஒப்புக்கொண்டுள்ளதை சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் பாராட்டினார்.