பத்து உபான் – மாநில அரசாங்கம், பத்து உபான் தொகுதியில் ஏழு உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பராமரிப்புத் திட்டங்களை செயல்படுத்துவதற்காக ரிம2.35 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டங்கள் பினாங்கு பொதுப்பணித் துறை (ஜே.கே.ஆர்) ஒத்துழைப்பின் மூலம் முன்னெடுக்கப்படுகின்றன.
பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் கூறுகையில், இத்திட்டங்கள் 2026, ஜூன் மாதத்தில் தொடங்கி அதே ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் முழுமையாக நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“இந்த ஒதுக்கீடு புக்கிட் கம்பீர், சுங்கை டுவா, புக்கிட் ஜம்புல், தாமான் பிரவுன் மற்றும் தாமான் பெக்காகா உள்ளிட்ட முக்கிய பகுதிகளை உள்ளடக்கியதாகும்.
இதன் மூலம், பொதுமக்கள் பயன்படுத்தும் வசதிகள் மேலும் பாதுகாப்பாகவும் வசதியாகவும் இருக்கும்.
“சாலைகள், நடைபாதைகள் மற்றும் வடிகால் அமைப்புகள் போன்ற அடிப்படை வசதிகள் எப்போதும் நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்வதே எங்களின் நோக்கம்,” என்று அவர் தாமான் கெஜிரானான் லெங்கோக் நிப்பாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் குமரேசன் இதனைத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், பத்து உபான் சட்டமன்ற சேவை மையத்தின் தலைமை அதிகாரி சியா பெங் குவான், பினாங்கு ஜே.கே.ஆர் அதிகாரிகள் மற்றும் உள்ளூர் கிராம சமூக மேலாண்மை கவுன்சில் (எம்.பி.கே.கே) பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
குமரேசன் கூறுகையில், தாமான் கெஜிரானான் லெங்கோக் நிப்பா மற்றும் ஜாலான் புக்கிட் கம்பீர் அருகிலுள்ள மைதானப் பகுதிகளில் நடைபாதை மேம்பாட்டுப் பணிகளுக்கு ரிம200,000 ஒதுக்கப்பட்டுள்ளது, என்றார்.
அதேவேளையில், மின்டன் ஹைட்ஸ் பகுதியிலுள்ள லிந்தாங் பெர்மாய் பகுதியில் வடிகால் பராமரிப்பு மற்றும் தொடர்புடைய பணிகளுக்காக மேலும் ரிம200,000 வழங்கப்பட்டுள்ளது.
“ஜாலான் ஹெலாங் மற்றும் சுங்கை டுவா பகுதிகளில் நடைபாதை மேம்பாட்டுப் பணிகளும் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் பொது மக்கள் மற்றும் சாலை பயனாளர்கள் நன்மை அடைவர்.
“அதே சமயம், ஜாலான் புக்கிட் கம்பீர், ஜாலான் சுங்கை டுவா மற்றும் பத்து உபான் பகுதிகளில் சாலை பராமரிப்பு மற்றும் சாலை கோடு வரைவுப் பணிகளுக்காக சுமார் ரிம250,000 ஒதுக்கப்பட்டுள்ளது,” என குமரேசன் விவரித்தார்.
மேலும், சில திட்டங்களுக்கு ஏற்கனவே ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு பணிகள் மேற்கொண்டு வருவதாகவும், மீதமுள்ளவை மேற்கோள் மற்றும் மதிப்பீட்டு செயல்முறையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
“சில திட்டங்கள் இன்னும் ஒரு அல்லது இரண்டு மாதங்களில் தொடங்கி ஆண்டு இறுதிக்குள் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது,” என்றார்.
இதனுடன், 2025ஆம் ஆண்டில் சாலை மற்றும் வடிகால் சேதங்கள் தொடர்பாக சுமார் 420 புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும் குமரேசன் தெரிவித்தார்.
“அதில் பெரும்பாலானவை குழியான சாலைகள், சேதமடைந்த வடிகால்கள் மற்றும் சிறிய பராமரிப்பு பிரச்சனைகள் தொடர்புடையது.
“ஜே.கே.ஆர், எம்.பி.கே.கே மற்றும் கள அதிகாரிகளின் ஒத்துழைப்பின் மூலம் பெரும்பாலான புகார்கள் வெற்றிகரமாக தீர்க்கப்பட்டுள்ளன,” என்று அவர் விளக்கமளித்தார்.
உள்கட்டமைப்பு பிரச்சனைகளுக்கு தவிர்த்து, மின்டன் ஹைட்ஸ் பகுதியில் தெருநாய்கள் பிரச்சனையையும் குமரேசன் முன்வைத்தார். அவற்றின் இனப்பெருக்கத்தையும் குடியிருப்புப் பகுதிகளில் திரளுவதையும் கட்டுப்படுத்த மாநில அரசு சிறப்பு உணவளிப்பு மையத்தை அமைப்பதை பரிசீலிக்க வேண்டும் என்றும் குமரேசன் பரிந்துரைத்தார்.