பள்ளியை மீண்டும் திறக்கும் முடிவினை ஒத்திவைக்க பரிந்துரை – ஜெக்டிப்

Admin

செபராங் பிறை – கல்வி அமைச்சு நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 3ஆம் தேதி தொடங்கி பள்ளிகளை மீண்டும் திறக்கும் முடிவினை ஒத்திவைக்க வேண்டும் என்று பினாங்கு உள்ளூர் அரசு, வீட்டு வசதி, நகர்ப்புற மற்றும் கிராமப்புற திட்டமிடல் ஆட்சிக்குழு தலைவர் ஜெக்டிப் சிங் டியோ கோரிக்கை விடுத்தார்.

12 முதல் 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான மத்திய அரசின் திட்டத்தை முழுமையாக ஆதரிப்பதாக அவர் கூறினார். இருப்பினும்,
இத்திட்டத்தை அவசரநிலையில் செயல்படுத்தக் கூடாது.

ஒருவர் இரு மருந்தளவு  தடுப்பூசியைப் போட்ட  14 நாட்களுக்குப் பிறகு தான் அது பாதுகாப்பாக அமையும், என அறிவதாக தெரிவித்தார்.

“அதாவது இன்று அவர்கள் தடுப்பூசி போட்டாலும், வருகின்ற அக்டோபர் 3ஆம் தேதி பள்ளி தொடங்கும் முன், ​​அவர்களுக்கு இன்னும் நோய் எதிர்ப்பு சக்தி பெறுவதற்கு சாத்தியமில்லை.

“நேற்று அல்லது இன்று முதல் தடுப்பூசி போடத் தொடங்கினால் பள்ளி மீண்டும் திறப்பதை ஒத்திவைக்கவும். நான் நான்கு குழந்தைகளுக்கு தந்தை, எல்லா பெற்றோர்களும் இதற்கு ஒப்புக்கொள்வார்கள்,” என ஜெக்தீப் கூறினார்.

பள்ளி ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்றால், மாணவர்களுக்கும் தடுப்பூசி போடுவதும் அவசியம், என்று அவர் மேலும் கூறினார்.

“பினாங்கு மாநிலம் பள்ளிக்குத் திரும்பும் முன் ஒரு ஆசிரியர் அல்லது மாணவர் தடுப்பூசி போட்டுக்கொண்டாரா அல்லது இல்லையா என்பதை அறிவதற்கு ஒரு செயலியை அறிமுகம் செய்ய இணக்கம் கொண்டுள்ளது,” என செபராங் பிறை மாநகர் கழகம் வணிகத்தை அதிகரிக்க ‘டிஜிட்டல் பிஸ்’ திட்டத்தை செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதைப் பார்வையிட்டப்பின்  ஜெக்டிப் கூறினார்.

ஒவ்வொரு மாநிலத்தின் தேசிய மீட்பு திட்டத்தின் (என்.ஆர்.பி) அடிப்படையில் வருகின்ற அக்டோபர்,3 முதல் பள்ளிகள் கட்ட கட்டமாக மீண்டும் திறக்கப்படும்.

கல்வி அமைச்சால் அறிவிக்கப்பட்டபடி, தேசிய மீட்சி திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் உள்ள மாநிலங்களில் உள்ள பள்ளிகள் மூடப்பட்டிருக்கும். அதேவேளையில், அம்மாணவர்கள் இல்லிருப்பு கற்றல் மற்றும் கற்பித்தல் (PdPR) அமர்வுகளைத் தொடர்வர்.

இரண்டாம் கட்டத்தின் கீழ் உள்ள மாநிலங்களுக்கு, முதலாம் முதல் ஆறாம்  ஆண்டு வரை பயிலும் மாணவர்கள் PdPR  தொடர்வர். இடைநிலைப்பள்ளி நிலையில், படிவம் ஆறு இரண்டாம் தவணை பயிலும் மாணவர்கள் மட்டுமே பள்ளிக்குத் திரும்ப அனுமதிக்கப்படுகிறார்கள்.

படிவம் மூன்று மற்றும் படிவம் நான்கு மாணவர்கள் மற்றும் பொதுத் தேர்வுகள் எடுப்பவர்கள் அக்டோபர்,17 முதல் சுழற்சி முறையில் வகுப்புகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

நாடளவில் சுமார் 3.2 மில்லியன் இளைஞர்கள் கோவிட்-19 தடுப்பூசி திட்டத்தின் கீழ் தடுப்பூசிப் பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், இந்த மாத இறுதிக்குள் அனைத்து பெரியவர்களும் இரு மருந்தளவு தடுப்பூசிகளையும் பெறுவர் என மாநில அரசு நம்பிக்கை கொள்வதாகக் கூறினார்.

இதுவரை, பெரியவர்களுக்கான மக்கள்தொகையில் 94.9% பேர்கள் ஒரு  மருந்தளவு தடுப்பூசியையும் 76.7% பேர் இரண்டு மருந்தளவு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர், என்றார்.

முதல் மருந்தளவு, பினாங்கின் விகிதம் தேசிய அளவினைக் காட்டிலும் (93.3%)
அதிகமாக உள்ளது. இரண்டாம்  மருந்தளவு, பினாங்கு தேசிய அளவினை நெருங்க வெகு தொலைவில் இல்லை என்றும் அவர் கூறினார்.

தேசிய மீட்சி திட்டத்தின் அடுத்த கட்டத்திற்கு பினாங்கு செல்வது குறித்து அவர் மிகுந்த நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.