பாகான் அஜாம் சந்தையின் ஒரு பகுதி மே,27 வரை மூடப்படும்

Admin

 

பாகான் – அண்மையில் பாகான் அஜாம் சந்தையின் உணவு வளாகம் மற்றும் பன்றி இறைச்சி பிரிவில் ‘ஜாலான் தெர்பிலாங்’ எனும் கோவிட் -19 கிளஸ்டர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, மே,12  முதல் 27-ஆம் தேதி வரை சுகாதார அமைச்சினால்  மூடப்பட்டுள்ளது.

செபராங் பிறை மாநகர் கழக (எம்.பி.எஸ்.பி) மேயர் டத்தோ ரோசாலி மொஹமட் இன்று செய்தியாளர் சந்திப்பில் இதனை அறிவித்தார்.

“இன்று காலை நடைபெற்ற சந்திப்பு  கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ரோசாலி கூறினார். இக்கூட்டத்தில் மாநில சமூக நலன் மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு தலைவர் பீ பூன் போ, மாவட்ட சுகாதார அதிகாரி டாக்டர் சுஹைமி சம்சுதீன், காவல்துறை பிரதிநிதி மற்றும் ஊராட்சி கழக  துறைத் தலைவர்கள் மற்றும் பிற தொடர்புடைய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

“இன்று இத்தளத்தில் எட்டு புதிய வழக்குகள் பதிவாகியுள்ளதால், பாகான் அஜாம் சந்தையின் உணவு வளாகம் மற்றும் பன்றி இறைச்சி பிரிவில் வணிக நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க அனுமதிக்க வேண்டாம் என்று எம்.பி.எஸ்.பி முடிவு செய்துள்ளது.

மூடப்பட்டுள்ள பாகான் ஆஜாம் சந்தையின் ஒரு பகுதி

“வட செபராங் பிறை மாவட்ட சுகாதார அலுவலகம் மேலும் 17 வணிகர்கள் கோவிட்-19 ஸ்கிரீனிங் பரிசோதனை செய்யுமாறு  வலியுறுத்தியுள்ளது.

முன்னதாக, பாகான் அஜாம் சந்தைக்கு வருகையளித்த போது, ​​ரோசாலி, பாகான் அஜாம் சந்தையில் ஈரமான சந்தைப் பிரிவு இன்னும் செயல்பாட்டில் உள்ளது, என்றார்.  எனவே,  நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை (எஸ்.ஓ.பி) கண்காணிக்க எம்.பி.எஸ்.பி கூடுதல் முன்னணி பணியாளர்களை பணி அமர்த்த திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

செபராங் பிறை மாநகர் கழக (எம்.பி.எஸ்.பி) மேயர் டத்தோ ரோசாலி மொஹமட்

வர்த்தகர்கள் மற்றும் வருகையாளர்கள் எஸ்.ஓ.பி-களைக் கடைபிடிப்பதை உறுதி செய்வதற்காக பொதுச் சந்தைகள், காலை சந்தைகள், வேளாண்மை சார்ந்த சந்தைகள், வாராந்திர சந்தைகள், இரவுச் சந்தைகள் மற்றும் உணவு வளாகங்களை  தொடர்ந்து கண்காணிக்கப்படும்.

“முறையாக எஸ்.ஓ.பி-க்கு  இணங்காதவர்கள் மீது நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுப்போம், ’’ என்று ரோசாலி மேலும் கூறினார். இதனிடையே, பொதுப் பாதுகாப்புக்காக சந்தைகளுக்குச் செல்வதற்குப் பதிலாக ‘ஆன்லைன் வாங்கும்’ பழக்கத்தை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தினார்.

இதற்கிடையில், மாநில உள்ளாட்சி, வீட்டுவசதி, நகர்ப்புற மற்றும் கிராமப்புற திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ  மாநில அரசு எஸ்.ஓ.பி வழிகாட்டுதல்களை தீவிரமாக பின்பற்றுவதை உறுதிப்படுத்தும், என்றார்.

“பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்த விவகாரங்களில் மாநில அரசு சமரசம் செய்யாது என்பதை  இங்கு மீண்டும் உறுதிப்படுத்த விரும்புகிறேன். யாராவது எஸ்.ஓ.பி மீறுவதாகக் கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நினைவுபடுத்தினார்.

தொடர்ந்து, சுகாதார அமைச்சகத்தின் இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா பினாங்கு பொது மருத்துவமனையில் நோயாளிகளுக்கு இடம் பற்றாக்குறை நிலவிய வேளையில் கெபாலா பத்தாஸுக்கு ஒரு புதிய அவசர சிகிச்சை பிரிவைத் (ஐ.சி.யு)
தொடங்க வருகை அளித்தாக  தெரிவிக்கப்பட்டது.

“நான் சமூகத்தில் பீதியை உருவாக்க முயற்சிக்கவில்லை, ஆனால் இதுதான் உண்மை. இந்த போரில் வெற்றி பெற  அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட  வேண்டும்,” என ஜெக்டிப் தெரிவித்தார்.

பி.எம்.பி.எஸ் (பினாங்கு மருத்துவ பயிற்சியாளர்கள் சங்கம்) சார்ந்த 200 மருத்துவ பயிற்சியாளர்கள், மலேசிய  மருத்துவ அமைச்சின்  ஒப்புதல் பெற்றவுடன் மாநில மற்றும் மத்திய அரசாங்க தடுப்பூசி திட்டத்திற்கு உதவ தயாராக இருக்கின்றனர்.

“பினாங்கில் உள்ள தனியார் மருத்துவ துறைகளுடன் ஒத்துழைப்பு நல்குவதன் மூலம், தற்போதைய கோவிட் -19 ஸ்கிரீனிங் சோதனைக்கு (தொண்டை மற்றும் மூக்கு) மாற்றாக ஆழமான தொண்டை உமிழ்நீர் பரிசோதனையை (டி.டி.எஸ்) பயன்படுத்துவதற்கான ஆய்வையும் மேற்கொண்டு வருகிறோம்,” என ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் குறிப்பிட்டார்.