பினாங்கின் பெருநிலத்தில் சி.எம்.சி.ஓ ஆணை சுமூகமாகப் பின்பற்றப்படுகிறது

பிறை- நிபந்தனைக்கு உட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலாக்கம் இன்று (நவம்பர், 9) முதல் நடைமுறை படுத்தப்படுகிறது. பினாங்கின் பெருநிலத்தில் இந்த ஆணையை சுமூகமாக பின்பற்றப்படுகிறது.

காலை உச்ச நேரங்களில் செபராங் ஜெயா மற்றும் பிறை ஆகிய பிரதான சாலைகளில் இருந்து பினாங்கு பாலத்தை நோக்கி செல்லும் சாலைகளில்
கூட அதிக வாகனங்கள் காணப்படவில்லை.


மலேசிய சிவில் பாதுகாப்புப் படை (ஏ.பி.எம்), மலேசிய தன்னார்வப் படைகள் (ரெலா) மற்றும் மலேசிய ஆயுதப் படைகளைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், இந்த சி.எம்.சி.ஓ கண்காணிக்க, பினாங்கு-கெடாவின் எல்லை உட்பட, நிலப்பரப்பின் பல பகுதிகளில் சாலைத் தடுப்புகள் நிர்வகிப்பதைக் காணலாம். குறிப்பாக மாநிலத்திற்கு நுழையும் வாகனங்கள் மட்டுமின்றி வெளியேறும் வாகனங்களும் கண்காணிக்கப்படுகின்றன.

கெளந்தான், பெர்லிஸ் மற்றும் பஹாங் தவிர தீபகற்ப மலேசியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் நவம்பர், 9 முதல் டிசம்பர்,6 வரை சி.எம்.சி.ஓ ஆணையின் கீழ் அமலாக்கத்தில் உள்ளன.

கடந்த சனிக்கிழமை (நவம்பர்,7), மூத்த அமைச்சர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப், அண்மையில் கோவிட் -19 வழக்குகளில் கணிசமான அதிகரிப்பு மற்றும் கெடா, பினாங்கு, பேராக், நெகிரி செம்பிலான், ஜோகூர், மலாக்கா மற்றும் திரங்கானு ஆகிய மாநிலங்களில் தொற்றுநோய்களின் பரவலை சுகாதார அமைச்சு கண்டறிந்ததைத் தொடர்ந்து சி.எம்.சி.ஓ-வை மீண்டும் பணியில் அமர்த்துவதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது, என்றார்.

செபராங் ஜெயா, புக்கிட் மெர்தாஜாம், பெர்மாத்தாங் பாவ் மற்றும் பட்டர்வொர்த் போன்ற நிலப்பரப்பின் முக்கிய இடங்களில் அமைந்திருக்கும் பல பொதுச் சந்தைகளில் முத்துச்செய்திகள் நாளிதழ் மேற்கொண்ட கண்னோட்டத்தில் சந்தைக்குச் சென்று மளிகைப் பொருட்கள் வாங்குநர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது கண்டறிந்தனர்.

பொதுச் சந்தைகளுக்கு வருகையளிக்கும் பொது மக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதோடு முகக் கவசங்களையும் முறையாக அணிவதை காண முடிகிறது.

செபராங் பிறை மாநகர் கழக (எம்.பி.எஸ்.பி) அமலாக்க அதிகாரிகளும் அதிகாலை முதல் பொதுச் சந்தைகளில் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறை (எஸ்.ஓ.பி) பின்பற்றுவதை உறுதிச்செய்ய கடமையில் ஈடுப்பட்டனர்.

ஒவ்வொரு சந்தையிலும் நுழைய அனுமதிக்கப்படுவதற்கு முன்பு பொது மக்களின் உடல் வெப்பநிலையை எம்.பி.எஸ்.பி அதிகாரிகளால் பரிசோதனை செய்யப்படும்.

கோவிட்-19 தொற்று நோய் தொடர்பு தடமறிதல் நோக்கங்களுக்காக ஒவ்வொரு தளத்தின் உள்ளே நுழைவதற்கு முன்பு அவர்கள் QR குறியீட்டை ஸ்கேன் செய்ய வேண்டும் அல்லது அவர்களின் பெயர்களைப் புத்தகங்களில் எழுத வேண்டும்.

ஒரே நேரத்தில் கூட்ட நெரிசலைத் தடுக்கும் பொருட்டு இட வசதிக்கு ஏற்ப குறிப்பிட் எண்ணிக்கையிலான மக்களை மட்டுமே சந்தையில் நுழைய அமலாக்க அதிகாரிகள் அனுமதிக்கின்றனர்.

பெரும்பாலான சந்தைகளில் நுழைவுப் பாதையும் வெளியேற்றம் செல்லும் பாதையும் ஒன்று மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், செபராங் ஜெயாவில் உள்ள தாமான் துங்கு மற்றும் தெலுக் ஆயர் தாவாரில் அமைந்திருக்கும் ரோபினா ஈகோ பார்க் போன்ற பல பொழுதுபோக்கு பூங்காக்கள் வெறுமையாகக் காணப்படுகின்றன. சி.எம்.சி.ஓ காலத்தில் பொழுது போக்கு பூங்காவிற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தாலும், ஒரு சிலரே பூங்காக்களில் நடை பயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்வதைக் காண முடிந்தது.

பண்டார் பெர்டாவில் உள்ள சில பூங்காக்களில் ஒரு சிலர் மட்டுமே வருகையளித்தனர். தெஸ்கோ, மைடின் மால் மற்றும் சன்வே கார்னிவல் மால் போன்ற பல பல்பொருள் பேரங்காடிகள் வழக்கம்போல செயல்பட்டு வருகின்றன, இருப்பினும் வாடிக்கையாளர்கள் வருகை குறைவாகவே காண முடிந்தது.

அத்தியாவசிய உணவுப் பொருட்களான அரிசி, ரொட்டி, காய்கறிகள், சமையல் எண்ணெய், உடனடி நூடுல்ஸ் மற்றும் உலர்ந்த உணவு போன்ற மளிகைப் பொருட்கள் அனைத்தும் பெரும்பாலும்
போதுமான கையிருப்பு இருப்பதை பேரங்காடிகளில் உறுதிச்செய்யப்படுகிறது. இதனை பேரங்காடி ஊழியர்கள் பொருட்களை குறையும் போது மீண்டும் அதற்கு புதியப் பொருட்களைக் கொண்டு அடுக்குவதன் மூலம் அறிய முடிகிறது.

செபராங் பிறையில் உள்ள துரித உணவு விற்பனை மையங்கள் உட்பட பெரும்பாலான உணவகங்கள் வணிகத்திற்காக திறந்தே உள்ளன. இருப்பினும், குறைவான வாடிக்கையாளர்கள் மட்டுமே அங்கே அமர்ந்து உண்ணுவதையும் அல்லது உணவை பொட்டலத்தில் எடுத்து செல்வதையும் பார்வையிடப்பட்டது.