பினாங்கில் இரண்டாவது பெண் ஆட்சிக்குழு உறுப்பினராக நோர்லேலா பதவிப்பிரமானம்.

ஜார்ச்டவுன்- பினாங்கு மாநில சட்டமன்ற உறுப்பினரான டாக்டர். நோர்லெலா அரிஃபின், இன்று அதிகாரப்பூர்வமாக ஆட்சிக்குழு உறுப்பினராக பதவியேற்றார்.

பெனாந்தி சட்டமன்ற உறுப்பினரான அவர் சுகாதாரம், விவசாயம், வேளாண்மை மற்றும் கிராமப்புற வளர்ச்சி ஆட்சிக்குழு உறுப்பினராக மாநில ஆளுநர் துன் டாக்டர் அப்துல் ரஹ்மான் அப்பாஸ் முன்னிலையில் பதவிப்பிரமானம் எடுத்துக்கொண்டார். இந்நிகழ்வு இன்று காலை 11.00 மணியளவில் ஸ்ரீ முத்தியாராவில் நடைபெற்றது.

நியமனம் சான்றிதழ், பதவி உறுதிமொழி மற்றும் இரகசிய உறுதிமொழி ஆகியவற்றின் விழாவில் தோ புவான் மஜிமோர் ஷெரீப் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் மற்றும் அவர் தம் துணைவியார் தான் லீன் கீ; ஆட்சிக்குழு உறுப்பினர்கள், மாநில செயலாளர் டத்தோ அப்துல் ரசாக் ஜாஃபர், மாநில நிதி அதிகாரி, டத்தோ சாருல் பஹியா அபு, மாநில சட்ட ஆலோசகர் டத்தோ நோராஸ்மி மொஹமட். நாராவி, மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநிலத் துறைத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

கடந்த மார்ச் 4-ஆம் தேதி
செபராங் ஜெயா சட்டமன்ற உறுப்பினரான அஃபிப் பஹாருடின் ஆட்சிக்குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அப்பதவிக்கு நோர்லேலா நியமனம் செய்யப்பட்டார்.

இதற்கிடையில், இந்நியமனம் குறித்து நோர்லேலா நன்றித் தெரிவித்தார்.

பினாங்கு மாநிலத்தில் மக்கள் நீதிக் கட்சியைப்(பி.கே.ஆர்) பிரதிநிதித்து
முதல் பெண் ஆட்சிக்குழு உறுப்பினராகத் தான் பதவிப்பிரமானம் எடுப்பதற்கு வாய்ப்பு நல்கிய அக்கட்சி மற்றும் மாநில முதல்வருக்கு நன்றிக்கூறினார்.

“தற்போது பினாங்கில் இரண்டு பெண் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். ஆட்சிக்குழு உறுப்பினர் சொங் எங் ( மகளிர் & குடும்ப மேம்பாடு, பாலின ஈடுபாடு, இஸ்லாம் அல்லாத மத விவகார ஆட்சிக்குழு உறுப்பினர்) மற்றும் பிற ஆட்சிக்குழு உறுப்பினர்களுடன் சிறந்த சேவையை ஆற்ற முடியும் என நம்பிக்கைக் கொள்வதாகக் கூறினார்.