பினாங்கில் கோவிட்-19 தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது – முதல்வர் அறிவிப்பு

Admin

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநிலத்தில் கடந்த மூன்று நாட்களாக நான்கு புதிய கோவிட்-19 தொற்றுநோய் வழக்குகள் பதிவுச் செய்யப்பட்டன. தற்போது பினாங்கு மாநிலத்தில் இந்நோய் பரவுதல் கட்டுப்பாட்டில் இருப்பதாக மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் கூறினார்.

பினாங்கு மாநில அரசு
தொற்றுநோய் பரவுவதைத் தடுக்கும் முயற்சியாக செபராங் பிறை மாநகர் கழகத்துடன் இணைந்து
உடனடி செயல் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

எனவே, கோவிட்-19 நெருக்கடி மேலாண்மை பணிக்குழு கூட்டத்தின் மூலம், எம்.பி.எஸ்.பி 13 தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. பொது இடங்களில், குறிப்பாக மஞ்சள் மண்டலமாக அறிவிக்கப்பட்ட மத்திய செபராங் பிறையில் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகள் (எஸ்.ஓ.பி) பின்பற்றுவதை உறுதிச் செய்வதற்காக எம்.பி.எஸ்.பி -யின் 3,091 தொழிலாளர்கள் மீண்டும் பணியைத் தொடங்கியுள்ளனர்.

மேலும், அதிக ஆபத்துக்குரிய இடங்கள் என அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் மட்டும் கவனம் செலுத்தாமல் பொதுச் சந்தைகள் மற்றும் எம்.பி.எஸ்.பி கவுண்டர்களில் இதற்கு முன்பு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை கிருமிநாசினி தெளிக்கப்பட்ட நிலையில் இப்பொழுது தினமும் தெளிக்க வேண்டும் என முதல்வர் தெரிவித்தார்.

மஞ்சள் மண்டலத்தில் வணிகம் செய்யும் அங்காடி வியாபாரிகள் அப்பகுதியில் உணவை வாடிக்கையாளர்களுக்கு பொட்டலத்தில் விற்க மட்டுமே அனுமதிக்கப்படுவர், மாறாக அவ்விடத்திலே சாப்பிட அனுமதி கிடையாது என தெளிவுப்படுத்தினார்.

“எம்.பி.எஸ்.பி நிர்வாகத்தின் கீழ் செயல்படும் 12 பொதுச் சந்தைகளில் வர்த்தகர்கள் மற்றும் வருகையாளர்கள்
எஸ்.ஓ.பி-யை பின்பற்றுவதை உறுதிச்செய்ய காவல்துறை மற்றும் அமலாக்க அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்,” என முதல்வர் கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

கடந்த ஆகஸ்ட் 10 வரை, பினாங்கு மாநகர் கழகம் (எம்.பி.பி.பி) நிர்வகிக்கும் இடங்களில் எஸ்.ஓ.பி 99.55 விழுக்காடும், எம்.பி.எஸ்.பி-யில் (99.36 விழுக்காடு)பின்பற்றப்பட்டதாக கொன் யாவ் கூறினார்.

“அதே காலகட்டத்தில், எஸ்.ஓ.பி-யை பின்பற்றாத 13 உணவு வளாகங்கள் எம்.பி.எஸ்.பி உத்தரவின் கீழ் மூடப்பட்டன,” என்று அவர் கூறினார்.

மேலும், பினாங்கு மாநில சுகாதாரத் துறை (ஜே.கே.என்) இம்மாநிலத்தில் MySejahtera செயலி பயன்பாடு கடந்த
ஜூலை,24 அன்று 431,171 பதிவுகள் இடம்பெற்ற வேளையில் தற்போது இச்செயலிக்கான பதிவுகளின் எண்ணிக்கை
ஆகஸ்ட்,10 வரை
913,832-ஆக அதிகரித்துள்ளதாக அறிவித்தது.

“இந்தப் பெருந்தொற்று தொடர்பு கண்காணிப்பற்கான PGCare செயலியின்பதிவு நிறுத்தப்பட்டதால் MySejahtera செயலியின் பதிவு அதிகரிக்கப்பட்டது என முதல்வர் விளக்கமளித்தார்.

இதற்கிடையில், மாநிலத்தின் வர்த்தமானி
தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களில்
மொத்தம் 159 நோயாளிகள் கண்காணிப்புப் பிரிவில்(PUS) தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.