பினாங்கில்   பொது வளாகத்தில் எஸ்.ஓ.பி பின்பற்றுவது உறுதிப்படுத்தப்படும் 

Admin

தஞ்சோங் பூங்கா – நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகள் (எஸ்.ஓ.பி) இணங்குவதை உறுதி செய்வதற்காக பினாங்கு மாநகர் கழகம் (எம்.பி.பி.பி) மற்றும் செபராங் பிறை மாநகர் கழகம் (எம்.பி.எஸ்.பி) ஆகியவை பொது வளாகங்களை தொடர்ந்து கண்காணிக்கும் என்று மாநில உள்ளாட்சி, வீட்டுவசதி, நகர்ப்புற மற்றும் கிராமப்புற  திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ தெரிவித்தார்.

கடந்த ஆண்டு மார்ச் 18 ஆம் தேதி நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை(எம்.சி.ஓ 1.0) அமலாக்கம் கண்ட நாள் முதல் இன்று வரை எஸ்.ஓ.பி-களுக்கு இணங்காததற்காக மொத்தம் 38 வளாகங்களை எம்.பி.பி.பி மூடியுள்ளது.  மேலும், 1,619 வளாகங்களை எம்.பி.எஸ்.பி ஆணைக்கு இணங்க  மூடப்பட்டுள்ளன.

“எஸ்.ஓ.பி பின்பற்றாத வியாபார வளாகங்கள் மூடப்படுவதால் பிற வளாகங்களில் இதன் முக்கியத்துவத்தை அறிந்து பின்பற்றுகின்றனர்.

“அனைவரும்  தங்கள் பங்களிப்பை குடும்பமாக ஒன்றிணைந்து செயல்படுத்தினால் இத்தொற்று சங்கிலியை உடைக்க முடியும்,”  என நம்பிக்கை கொள்வதாக என்று ஜெக்டிப் தஞ்சோங் பூங்கா பொதுச்  சந்தைக்கு வருகையளித்தப்போது இவ்வாறு கூறினார்.

எஸ்.ஓ.பி முறையாக பின்பற்றுவது குறித்த துரித பரிசோதனை நடத்திய ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ அவர்களுடன், தஞ்சோங் பூங்கா சட்டமன்ற உறுப்பினர் ஜைரில் கிர் ஜோஹரி மற்றும் எம்.பி.பி.பி செயலாளர் டத்தோ அட்னான் மொஹட் ரசாலி ஆகியோர் கலந்து கொண்டனர்.

“நாங்கள் முதலில் வளாக உரிமையாளர்களை எச்சரிப்போம், அதன் பின்னரும் அவர்கள் எஸ்.ஓ.பி கடைப்பிடிக்கத் தவறினால், அமலாக்க அதிகாரிகள் அவர்களின் மீது நடவடிக்கை மேற்கொள்வர்.

“தடுப்பூசி தவிர, எஸ்.ஓ.பி-ஐ பின்பற்றுவது தொற்று நோயை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய முக்கியமான தடுப்பு நடவடிக்கைகளில் ஒன்றாகும்.

“எஸ்.ஓ.பி பின்பற்றுவது தொடர்பான விஷயங்களில் இரு ஊராட்சி கழகங்களும் தொடர்ந்து கண்டிப்பாக இருக்கும் என்பதை இங்கு மீண்டும் உறுதிப்படுத்த விரும்புகிறேன், ’’ என்று ஜெக்டிப் கூறினார்.

இதற்கிடையில், தொற்று நோயை ஒழிக்க பொதுமக்கள் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் விதிக்கப்பட்ட சட்டத்தை பின்பற்ற வேண்டும் என்றும் ஜைரில் கேட்டுக்கொண்டார்.

“ஊராட்சி அதிகாரிகள், ரேலா தன்னார்வலர்கள் மற்றும் தஞ்சோங் பூங்கா எம்.பி.கே.கே (கம்போங் நிர்வாக செயல்முறை கழகம்) உதவியுடன் எஸ்.ஓ.பி-கள் முறையாக  பினாங்கில் பின்பற்றிய   பொதுச் சந்தைகளில் தஞ்சோங் பூங்கா சந்தை முதலிடம் வகிக்கிறது.

“இச்சந்தை பழமையானது அதேவேளையில் இன்னும் சிறப்பாக  நிர்வகிக்கப்படுகிறது”, என ஜைரில் நம்பிக்கை தெரிவித்தார்.