பினாங்கில் மீண்டும் நம்பிக்கை கூட்டணி ஆட்சி அமைக்கும் – முதல்வர் நம்பிக்கை

Admin

ஜாவி – பினாங்கு நம்பிக்கை கூட்டணி அரசு, அடுத்த பொதுத் தேர்தலில் இம்மாநிலத்தைத் தொடர்ந்து நிர்வகிப்பதற்கான வலுவான ஆதரவுப் பெறும் என உறுதி கொள்கிறது.

கடந்த 15 ஆண்டுகளாக பினாங்கில் நம்பிக்கை கூட்டணி நிர்வாகம்
பல சாதனைகள் படைத்துள்ளது, என மாநில நம்பிக்கை கூட்டணி தலைவருமான முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ் தெரிவித்தார்.

“இது மக்களுக்கும், ஒட்டுமொத்த மாநிலத்துக்கும் பயன் அளிக்கும் பல்வேறு கொள்கைகள் மற்றும் திட்டங்களால் நிரூபிக்கப்பட்டுள்ளன.

“பினாங்கு, மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, ​​கிட்டத்தட்ட சுழியம் ஊழல் மற்றும் நேர்மையாக இம்மாநிலத்தை வழிநடத்துவதில் ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறது.

“சமீபத்தில், பினாங்கு மாநில அரசாங்கம் அதன் 2018 தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளில் 90% நிறைவேற்றியிருப்பதாகவும் அறிவித்தோம்.

“எனவே, இதன் அடிப்படையில் பினாங்கு மக்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணிக்கு மீண்டும் வாக்களிப்பார்கள்,” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, சில அரசியவாதிகளால் நாட்டின் அமைதியும் வளர்ச்சியும் சீர்குலைத்த நிலையிலும், பினாங்கு வாழ் மக்களிடம் இருந்து தொடர்ந்து ஆதரவைப் பெறுவோம்.

“மேலும், நாங்கள் எவ்வாறு செயல்படுகிறோம் என்பதையும், மாநில வளர்ச்சிக்கு எங்களின் அர்ப்பணிப்பும் பங்களிப்பையும் மக்கள் நேரடியாகக் காண்கின்றனர்,” என்று ஜாவி பல்நோக்கு மண்டபத்தில் இந்திய சமூகத்துடனான அமர்வின் போது சாவ் தனது உரையில் இவ்வாறு கூறினார்.

இந்நிகழ்ச்சிவில் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி; ஜாவி சட்டமன்ற உறுப்பினர் ஜெசன் எங் மொய் லாய்; சுங்கை பாக்காப் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் அமர் பிரத்திபால்; சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதிராவ் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

சாவ்வின் கூற்றுப்படி, பினாங்கு நம்பிக்கை கூட்டணி கடந்த ஆண்டு முதல் வரவிருக்கும் பொதுத் தேர்தலை எதிர்கொள்ள தேவையான செயல்பாடுகளைச் செய்து வருகிறது.

“இதில் பிரச்சாரம், வேட்பாளர்கள் தேர்வு, தேர்தல் அறிக்கை மற்றும் பல விஷயங்கள் அடங்கும். நாங்கள் இந்த செயல்முறையை முன்னோக்கி விரைவுபடுத்துகிறோம்.

“2018 ஆம் ஆண்டு நடைபெற்ற 14வது பொதுத் தேர்தலில் ஐந்தாண்டுகளுக்கு இம்மாநிலத்தை நிர்வகிப்பதற்கான வலுவான ஆட்சி எங்களுக்கு வழங்கப்பட்டது, மேலும் அந்த வலுவான ஆட்சியை மீண்டும் தக்க வைத்துக் கொள்ள விரும்புகிறோம்.

பினாங்கு மக்களிடமிருந்து மீண்டும் ஆட்சியைப் பெறுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது,” என்று சாவ் மேலும் கூறினார்.

“இதனிடையே, பினாங்கு மாநில அரசு இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி தலைமைத்துவத்தின் கீழ் இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், சவால்கள் மற்றும் பொருளாதார சுமைகளை அடையாளம் கொண்டுள்ளன. கல்வி, சமயம் கலாச்சாரம் ஆகியவற்றில் பிற இனங்களை போன்று இந்தியர்களும் தலை நிமிர்ந்து பெருமிதத்துடன் வாழ வேண்டும்”, என்று சாவ் சூளுரைத்தார்.