ஜார்ச்டவுன் – பினாங்கில் குத்தகை உரிமம் (leasehold) கொண்ட நிலங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது; மாநிலத்தின் மொத்த நிரந்தர உரிம நிலங்களுடன் (freehold) ஒப்பிடுகையில் அது 10 சதவீதத்திற்கும் குறைவாகும், என்றார்.
மாநில நிதி, பொருளாதார மேம்பாடு, நிலம் மற்றும் தகவல் தொடர்பு ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன் இயோவ், மாநில நில மற்றும் சுரங்க அலுவலகத்தின் (PTG) பதிவுகளின்படி பினாங்கு முழுவதும் சுமார் 34,000 குத்தகை உரிம நிலங்கள் உள்ளதாகவும், அதில் 10 ஆண்டுகளுக்கு குறைவான கால அவகாசம் மீதமுள்ளவை வெறும் 805 மட்டுமே என தெரிவித்தார்.
சட்டமன்ற கூட்டத்தொடரில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், நில உரிமையாளர்களுக்கு உதவும் வகையில் முழுமையான மற்றும் மக்கள் நலனைக் கருத்தில் கொண்ட குத்தகை கால நீட்டிப்பு கொள்கை உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
மக்களின் சுமையைக் குறைக்கும் நோக்கில், நில பயன்பாட்டு வகைகளின் அடிப்படையில் குறிப்பிடத்தக்க அளவில் பிரீமியம் தள்ளுபடி வழங்கப்படுவதாகவும் அவர் விளக்கமளித்தார்.
அதன்படி குடியிருப்பு மற்றும் வேளாண்மை நிலங்களுக்கு, 90% வரை தள்ளுபடி, வணிக நிலங்களுக்கு, 80% தள்ளுபடி மற்றும் தொழில்துறை நிலங்களுக்கு, 30% முதல் 75% வரை தள்ளுபடி வழங்கப்படுவதும் உள்ளடங்கும்.
இந்தத் தள்ளுபடிகள் தகுதி மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டவை என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், குத்தகை காலம் ஏற்கனவே முடிவடைந்த நிலங்களுக்கும் மறுபடியும் உரிமம் வழங்கும் முறையின் மூலம் 80% வரை பிரீமியம் தள்ளுபடியுடன் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படலாம் என தெரிவித்தார்.
2024ஆம் ஆண்டு முதல் இதுவரை 232 குத்தகை கால நீட்டிப்பு விண்ணப்பங்கள் பெறப்பட்டு தற்போது செயல்முறையில் உள்ளதாகவும் அவர் கூறினார்.
“இந்த எண்ணிக்கை, மாநில அரசின் நில உரிமை பாதுகாப்பு கொள்கையில் நில உரிமையாளர்கள் கொண்டுள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கிறது,” என்றார்.
நிலங்களை நிரந்தர உரிமமாக மாற்றுவது தொடர்பாக, தற்போதைய நிலையில் அத்தகைய அனுமதிகள் மிகவும் வரையறுக்கப்பட்ட முறையில் மட்டுமே வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
அதற்கான விண்ணப்பங்கள் வெளியிட்டுள்ள PTG சுற்றறிக்கை எண் 3/2025 அடிப்படையில் மட்டுமே பரிசீலிக்கப்படும் என்றும், வலுவான காரணங்களும் தகுதியும் உள்ள சூழ்நிலைகளில் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும், நில மேலாண்மை நீடித்த முறையில் தொடர்வதையும், தற்போதைய நில உரிமையாளர்களின் நலனையும் பாதுகாப்பதற்காக நியாயமான குத்தகை கால நீட்டிப்பு கொள்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக சாவ் மேலும் தமது தொகுப்பிரையில் விவரித்தார்.